மோடி பதவியேற்பு விழாவைப் புறக்கணித்த மம்தா!

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதாகக் கூறியிருந்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தற்போது அந்த விழாவில் கலந்துகொள்ள வேண்டாம் என முடிவெடுத்திருப்பதாக அறிவித்திருக்கிறார்.


நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில், 303 இடங்களில் வென்று பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க இருக்கிறது.  பிரதமராக, தொடர்ந்து இரண்டாவது முறையாகப் பதவியேற்க இருக்கிறார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நாளை நடைபெறும் பதவியேற்பு விழாவில், பல்வேறு நாடுகளின் தலைவர்கள் உள்பட 7,000 பேர் வரை கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு பா.ஜ.க-வை தொடக்கம் முதலே கடுமையாக விமர்சித்துவந்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதை ஏற்று, மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க இருப்பதாக மம்தாவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டதாக மம்தா திடீரென அறிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள விளக்கக் குறிப்பில், `வாழ்த்துகள் பிரதமர் மோடிஜி. அரசியலமைப்புரீதியாக விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று உங்கள் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று நான் முடிவெடுத்திருந்தேன்.
ஆனால், கடைசி ஒரு மணி நேரமாக மேற்குவங்கத்தில் 54 பேர் அரசியல்ரீதியாக கொலை செய்யப்பட்டுள்ளதாக பா.ஜ.க கூறிவருவதாக ஊடகச் செய்திகள் மூலமாக அறிகிறேன். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. மேற்குவங்கத்தில் அரசியல் கொலைகள் எதுவும் நடைபெறவில்லை. அவர்கள் அரசியல்ரீதியாகக் கொல்லப்படவில்லை. குடும்பச் சண்டைகள் உள்ளிட்ட தனிப்பட்ட காரணங்கள் உள்ளிட்ட வேறு காரணங்களுக்காகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

அந்தக் கொலைகளுக்கு அரசியல்ரீதியான தொடர்பு இருப்பதாக எந்தத் தகவலும் இல்லை. இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்பிவரும் சூழலில், உங்கள் பதவியேற்பு விழாவில் என்னால் பங்கேற்க இயலாது. ஜனநாயத்தைக் கொண்டாடும் வகையிலான அந்த நிகழ்ச்சியை அரசியல் ஆதாயத்திற்காக எந்தக் கட்சியும் பயன்படுத்தக் கூடாது'' என்று மம்தா தெரிவித்திருக்கிறார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாகுறித்து டெல்லியில் பிரதமர் மோடி, பா.ஜ.க தலைவர் அமித் ஷா ஆகியோர் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மேற்குவங்கத்தில் அரசியல்ரீதியான காரணங்களுக்காகக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் 54 பேரின் குடும்பங்களைப் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்புவிடுப்பதென முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள், சிறப்பு அழைப்பாளர்களாகப் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

மேற்குவங்கத்திலிருந்து டெல்லிக்கு அழைத்துவரப்படும் அவர்கள், பா.ஜ.க-வினரின் கவனிப்பில் தங்கவைக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. அவர்கள்குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்ட பின்னர், அதுகுறித்த தகவல்கள் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அனுப்பப்படும் என்று தெரிகிறது. பா.ஜ.க-வின் இந்த நடவடிக்கையை அடுத்தே, மேற்குவங்க முதல்வர் மம்தா, பதவியேற்பு விழாவில் பங்கேற்பதைத் தவிர்த்திருப்பதாகத் தெரிகிறது.
 #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.