ஜாமீன் நிபந்தனை மீறல் - விக்கிலீக்ஸ் அதிபர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு 50 வாரம் சிறை தண்டனை!

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜூலியன் அசாஞ்சே (வயது 47) கடந்த 2006-ம் ஆண்டு சுவீடனில் ‘விக்கிலீக்ஸ்’ என்கிற நிறுவனத்தை தொடங்கினார். இவர் அமெரிக்க ராணுவம் குறித்த ரகசிய ஆவணங்களை தன் இணையதளத்தில் வெளியிட்டு உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தினார்.   இதன் மூலம் ஜூலியன் அசாஞ்சே சர்வதேச அளவில் பிரபலமான அதேவேளையில், பல நாடுகளின் எதிர்ப்பையும் சம்பாதித்தார்.

 அதே சமயம் உலக அளவில் அவருக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உருவானது. அவர் அடுத்து எந்த நாடு குறித்த ரகசிய தகவல்களை வெளியிடுவார் என உன்னிப்பாக கவனிக்க தொடங்கினர். ஜூலியன் அசாஞ்சே மீது கடும் கோபம் கொண்டிருந்த அமெரிக்கா அவரை பலமுறை கைது செய்ய முயற்சித்தது. ஆனால் முடியவில்லை.


 இதற்கிடையில், சுவீடனில் 2 பெண்களை ஜூலியன் அசாஞ்சே கற்பழித்ததாக 2010-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார். எனினும் அவர் கடந்த 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் சுவீடனில் இருந்து இங்கிலாந்துக்கு தப்பிச்சென்றார். சுவீடன் கேட்டுக்கொண்டதன் பேரில் இங்கிலாந்து போலீசார் அவரை கைது செய்தனர். எனினும் அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கு விசாரணைக்கு பின்னர் ஜூலியன் அசாஞ்சேவை சுவீடனுக்கு நாடு கடத்த இங்கிலாந்து முடிவு செய்தது.


அப்படி தான் சுவீடனிடம் ஒப்படைக்கப்பட்டால், சுவீடன் அரசு தன்னை அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் என்றும், அமெரிக்கா தனக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கலாம் என்றும் அவர் அஞ்சினார். இதனால் அவர் 2012-ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள ஈக்குவடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சம் புகுந்தார். தனக்கு அடைக்கலம் கொடுக்கும்படி ஜூலியன் அசாஞ்சே முன்வைத்த கோரிக்கையை ஈக்குவடார் அரசு ஏற்றுக்கொண்டது. இதனால் அங்கு அவர் பாதுகாப்பான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். எனினும் ஜூலியன் அசாஞ்சே தூதரகத்தை விட்டு எப்போது வெளியே வந்தாலும் உடனடியாக கைது செய்யப்படுவார் என இங்கிலாந்து போலீசார் எச்சரித்து இருந்தனர். இந்த நிலையில், ஜூலியன் அசாஞ்சே சர்வதேச நெறிமுறைகளை தொடர்ந்து மீறிவருவதால் அவருக்கு அளித்து வந்த அடைக்கலத்தை திரும்பப்பெறுவதாக ஈக்குவடார் அதிபர் லெனின் மேரேனோ திடீரென அறிவித்தார். இதனால் அவரை கைது செய்வதற்கு இதுவரை இருந்த தடை நீங்கியது. இதையடுத்து, இங்கிலாந்து போலீசார் ஈக்குவடார் தூதரகத்துக்குள் அதிரடியாக நுழைந்து ஜூலியன் அசாஞ்சேவை கைது செய்தனர். கோர்ட்டின் ஜாமீன் நிபந்தனைகளை மீறியதற்காக கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டின் கீழ் ஜூலியன் அசாஞ்சேவை கைது செய்ததாக இங்கிலாந்து போலீசார் தெரிவித்தனர். தூதரகத்தில் தஞ்சம் புகுந்த 7 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்ட ஜூலியன் அசாஞ்சே  ஜாமீன் நிபந்தனைகளை மீறிய குற்றத்துக்காக லண்டன் நகரில் உள்ள சவுத்வார்க் கிரவுன் கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டார். நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று, ஈக்வேடார் தூதரகத்துக்குள் பதுங்கி கொண்டு யாராலும் தொடர்புகொள்ள முடியாதபடி ஜாமீன் நிபந்தனைகளை நீங்கள் மீறி வந்திருக்கிறீர்கள் என அசாஞ்சே மீது நீதிபதி டெபோரா டெய்லர் குற்றம்சாட்டினார்.

 இதற்கு கடிதம் மூலமாக பதிலளித்த அசாஞ்சே, ‘பல்வேறு நெருக்கடியான சூழ்நிலைகளுக்குள் சிக்கி சிரம்படும் நான் இந்த நீதிமன்றத்தை அவமதித்ததாக யாராவது கருதினால் அதற்காக மன்னிப்பு கோருகிறேன்’ என்று குறிப்பிட்டார்.


 இதை தொடர்ந்து ஜூலியன் அசாஞ்சேவுக்கு 50 வாரம் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். பல நாட்களுக்கு பின்னர் பொதுவெளியில் காணப்பட்ட ஜூலியன் அசாஞ்சேவை போலீசார் சிறைக்கு அழைத்து சென்றபோது கோர்ட்டுக்கு வெளியே கூடியிருந்த மக்களை பார்த்து அவர் ஆர்வமாக கைகளை அசைத்தார். ஆனால், அங்கிருந்தவர்களில் பலர் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கைகளை உயர்த்தி காட்டி கோஷமிட்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.