நல்லூர் ஆலயத்தை தாக்குவோம்: அனாமதேய கடிதத்தால் பரபரப்பு!

யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நாளை மறுநாள் சனிக்கிழமை தாக்குதல் நடத்துவதாக அநாமதேயக் கடிதத்தை அனுப்பி வைத்தவர் தொடர்பில் விரைவான விரிவான விசாரணையை மேற்கொண்டு அவரைக் கைது செய்யுமாறு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.


தமிழர் தாயகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நாளை மறுதினம் கடைப்பிடிக்கப்படவுள்ள நிலையில் இந்த அநாமதேயக் கடிதம் ஆளுநரின் அலுவலகத்துக்குக் கிடைத்துள்ளது.

நல்லூர் ஆலயத்தில் நாளை மறுநாள் 18 ஆம் திகதி எனது கணவரும் வேறு சிலரும் குண்டுத் தாக்குதல் நடத்த உள்ளனர் என்று பேனாவால் எழுதப்பட்ட கடிதம் ஒன்று வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்துக்கு இன்று கிடைத்தது.

அதனைப் பார்வையிட்ட ஆளுநரின் பிரத்தியேக அலுவலகர். அதனை ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.

கடிதம் தொடர்பில் வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபருடன் தொலைபேசியில் உரையாடிய ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், அதனை வரைந்தவர், எங்கிருந்து அனுப்பப்பட்டது போன்ற விடயங்கள் தொடர்பில் விரைவான விரிவான விசாரணைகளை முன்னெடுக்க அறிவுறுத்தினார்.

ஆளுநரின் அறிவுறுத்தலை உடன் நடைமுறைப்படுத்த யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியைப் பணித்த வடக்கு மாகாண மூத்த பொலிஸ் மா அதிபர், ஆலயத்தின் பாதுகாப்பை அதிகரிக்கவும் அறிவுறுத்தினார்.

இதனையடுத்து அநாமதேயக் கடிதம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், இன்று நண்பகல் தொடக்கம் நல்லூர் ஆலய சூழலின் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். இராணுவத்தினரும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க ஈழ நல்லூரில் நாளை மறுநாள் சனிக்கிழமை வைகாசி விசாக உற்சவம் இடம்பெறுகிறது.

இதேவேளை, இறுதிப் போரில் கொல்லப்பட்ட உறவுகளுக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நாளை மறுநாள் சனிக்கிழமை தமிழ் மக்கள் முன்னெடுக்க உள்ள நிலையில் இந்த அநாமதேயக் கடிதம் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.