எம் இனிய தமிழ்ச் சொந்தங்களே மறந்துவிட்டீர்களா எங்களை?
இனிய தமிழ்ச் சொந்தங்களே!
கேட்கிறதா எங்கள் குரல்கள்!
தெரிகிறதா எங்கள் முகங்கள்!
மறந்துவிட்டீர்களா எங்களை,
ஓடிவந்து உங்களை ஒருமுறை
கட்டி அணைத்து கதறி அழத் துடிக்கிறோம்.
முடியவில்லையே!!
தொந்தரவு செய்கிறோமா?
மன்னித்துவிடுங்கள்.
உங்களைவிட்டால்
வேறு யாருண்டு எங்களுக்கு,
திருமணங்களுக்காய்
திகதிகள் குறித்தும்
சகுனங்கள் பார்த்து
சாமத்தியவீடு செய்யவும்
பிரியமாய் பிறந்தநாள் கொண்டாடவும்
எண்ணியிருப்பீர்கள்!
தெரியும் எங்களுக்கு,
இருந்தாலும்
உங்களைத் தொந்தரவு செய்வதற்கு
மன்னித்துவிடுங்கள்!
உங்களைவிட்டால் வேறு யாரிடம்
போகமுடியும் எங்களால்,
உங்களிடம் நாம் வந்திருப்பது
எங்களுக்காக இல்லை.
உங்களுக்காகவும்
உங்கள் பிள்ளைகளுக்காகவும்
வந்திருக்கிறோம்!
அணுத்துகள்களாய் காற்றில் கரைந்து
அழுது அழுது அலைந்துலையும்
எங்கள் முகங்களை
உங்கள் மனக்கண்ணில் பாருங்கள்,
இன்னுமா உணலமுடியவில்லை!
சொந்தங்களே!
பத்து ஆண்டுகளுக்கு முன்பு
பொஸ்பரஸ் குண்டுகளாலும்
பிளஸ்ரர் குண்டுகளாலும்
முள்ளிவாய்க்காலில்
எரிந்து செத்தவர்கள் நாங்கள்!!
இப்போதாவது புரிகிறதா உறவுகளே,
முள்ளிவாய்க்கால் இறுதி நாட்களில்
எங்கள் உடல்களில் தீப்பற்றி எரிய
ஓடிஓடி ஓலமிட்டுச் செத்தவர்கள் நாங்கள்!!
இன்னும் அழுகிறோம்,
வானமும் பூமியும் கடலும் தவிர
எந்தச் சாட்சிகளும் அற்ற வெளியில்
சிந்திச் சிதறி சின்னாபின்மாகிச் செத்தபோது
பனியிலும் குளிரிலும் வீதிகளிலும்
நீங்கள் நாட்கணக்காக தவமிருந்து
இந்த உலகத்திடம் நீதிகேட்டு
மண்டியிட்டு அழுதபோதும்
இந்த உலகத்தால் உங்களுக்கு
எந்த நீதியும் தரமுடியவில்லை!
இன்று என்னவாயிற்று?
எம் இன அழிவிற்கான
எந்த நியாயத்தீர்ப்பும் வழங்கவில்லை.
எம் உயிர் உறவுகளே!
மே 18இல் முள்ளிவாய்க்கால்
நினைவின் நாளிலாவது
ஒன்று சேருங்கள்!
உலகம் கேவலம்,
அதன் கால்களில் விழுந்து விழுந்து
கதைத்துவிட்டோம்.
எல்லாம் அறிந்தும்
அறியாதவர்கள் போல் நடிப்பவர்கள்!
எங்களில் பலரது சாவுகள்
வாய் திறந்து சொல்லமுடியாத கொடூரங்கள்!
செத்த பின்னும் சாந்தியடையமுடியாது
துடித்து துடித்து அவலப்பட்டு அலைகிறோம்.
எப்படிச் சொல்வது,
வேட்டைநாய்கள் வெறிகொண்டு எங்களின்
உடல்களைத் தின்றன.
உயிரிருக்க உடல்கள் எரிந்தன.
உயிரற்ற உடல்களைப் புணர்ந்தார்கள்
காமக்கொடூரர்கள்!
உறுப்புக்களைக் கூறுபோட்டும்
திணித்தும் அகமகிழ்ந்தார்கள்.
சொல்லொண்ணா துயரங்கள்,
உலகில் எங்கும் நடந்திரா அவலங்கள்,
எல்லாம் அறிந்திருந்தும் இந்த உலகம்
எங்களை வஞ்சித்தது.
வஞ்சித்துக்கொண்டும் இருக்கிறது!
உறவுகளே!
எங்களின் நினைவுநாளில் கூடவா
ஒண்றிணையமாட்டீர்கள்,
எங்களின் சாவுகள் கூடவா
உங்களை ஒண்றிணைக்கவில்லை,
மானமும் சுயமரியாதையும்கொண்ட
மானமும் சுயமரியாதையும்கொண்ட
எஙகளின் சமூகவாழ்வினை
அழித்தொழித்தவர் யார்,
எங்கள் பண்பாடுகளைச்
சிதைத்தவர்கள் யார்,
உங்களின் ஒற்றுமையைக்
குலைத்தவர்கள் யார்,
ஒன்றுக்கும் உதவா
முகம்தெரியா எழுத்தாளர்களா?
அருவருப்புக்குரிய சில ஊடகங்களா,
எவை உறவுகளே எவை?
பெரும் வலிகளைச் சுமந்தபடி
உளவியல் தாக்கங்களுக்கு மத்தியில்
இன்னும் விடுதலைப் பணியாற்றும்
ஒரு சிலரைக்கூட
இந்த நயவஞ்சகர்கள் விடுவதில்லை.
ஏன்தான் இவர்கள் இப்படி ஆனார்களோ,
சில சதிகார வஞ்சகர்களின் எழுத்துக்களா?
இல்லை உறவுகளே, இல்லை,
எங்கள் அவலச் சாவுகளைக் காட்டிலும்
அவர்களின் சூழ்ச்சியா
உங்களை மாற்றிவிடும்?
எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு
எங்கள் நினைவுகளோடு
இணையுங்கள்.
முள்ளிவாய்க்கால் நினைவுநாளில் அழவும்
மாவீரர் எழுச்சிநாளில் எழவும்
எங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள்.
உறவுகளே!
பத்து ஆண்டுகள் கடந்தாவது
மே பதினெட்டில்
ஒற்றுமையாய் ஒன்றுசேருங்கள்.
எங்கள் சாவுகளை அர்த்தமாக்குங்கள்,
எங்கள் பிள்ளைகளுக்கு
எங்கள் அடையாளங்களை
எங்கள் நினைவுநாளில் சொல்லிக்கொடுங்கள்.
பத்து ஆண்டுகளாய் அழுது அழுது
அலைந்து திரியும் எங்களின் ஆன்மாக்களை
இனியாவது அமைதிப்படுத்துங்கள்.
ஆயிரமாயிரமாய் அணிதிரண்டு
எங்களின் நினைவுகளோடு
ஒண்றிணையுங்கள்!
வானவெளிகளில் அந்தரிக்கும்
எங்கள் மூச்சுக்காற்றை
உங்கள் ஒன்றுகூடலால் அமைதிப்படுத்துங்கள்.
உயிரான உறவுகளே!
இனஅழிப்பின் நினைவுநாளான
மே பதினெட்டில்
இனஒற்றுமையை வலுப்படுத்துவீர்கள் என
காற்றோடு காற்றாய் கலந்து
உங்கள் வரவுக்காய் அந்தரத்தில்
ஏங்கித் தவிக்கிறோம்.
மே பதினெட்டில் உன்றுகூடும் உங்களை
தென்றலாய் தழுவுவதற்காக
ஏக்கத்தோடு அந்தரிக்கிறோம்.
இப்படிக்கு
உங்கள் உயிர்ப்பின் உறவுகள்.!!
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை