மைத்திரி, ரணில் பதவி விலக வேண்டும் -நாமல்!!

குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் அதிகாரிகளை பதவி நீக்கம் செய்யும் முன்னர், ஜனாதிபதியும் பிரதமரும் பதவியிலிருந்து இராஜினாமா செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.


மேலும், குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையதாகக் குற்றம் சுமத்தப்படும் அரசியல்வாதிகளிடம் இதுவரை அரசாங்கம் ஏன் விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மட்டக்களப்பில் இன்று  ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “தற்போது சில அரசியல் கட்சிகள், இனவாதத்தின் ஊடாக அரசியல் செய்யவே முற்படுகிறார்கள். அரசாங்கமும் இதனையே செய்கிறது. எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அன்று அனைத்து இன மக்களுக்காகவுமே அரசியல் செய்தார்.

ஆனால், நாட்டில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தையடுத்து அரசாங்கம் செயற்படும் விதம் வேறுவிதமாக இருக்கிறது.

இந்த பிரச்சினையை புறக்கணிக்கவே அரசாங்கம் முயல்கிறது. குண்டு வெடிப்புக்களுடன் அரசியல்வாதிகளுக்கும் தொடர்புள்ளது என்று அமைச்சர் கபீர் ஹாசீம் போன்றவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

எனினும், குறித்த அரசியல்வாதிகளிடம் கேள்வி கேட்க இந்த அரசாங்கத்தால் முடியாதுள்ளது.  ஜனாதிபதியும் பிரதமரும் நீதியை நிலைநாட்டுவோம் என கூறிவருகிறார்கள். அப்படியானால், இந்த இருவருமே முதலில் பதவி விலகவேண்டும்.

ஜனாதிபதிக்கு இதுதொடர்பில் அறிவிக்கப்பட்டும் அவர் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அதிகாரிகள் விலகும் முன்னர் இவர்கள் பதவி விலக வேண்டும். இந்த விடயத்தில் மேலிருந்து கீழாக அனைவரும் தண்டிக்கப்படவேண்டும்.

தமது தவறுகளை மறைக்கவே அதிகாரிகள் மீது இந்தக் குற்றத்தை சுமத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்த விடயம் தொடர்பில் அரசியல்வாதிகளிடம் கேள்விகளைக் கேட்காது, அதிகாரிகளை பதவி நீக்கம் செய்வதானது எந்தவகையிலும் நியாயமான ஒன்றல்ல.

கிழக்கு மாகாணத்தில் நிர்மாணிக்கப்படும் பல்கலைக்கழகம் குறித்தும் சர்ச்சையான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இதன் உண்மைகளை கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாவே கூறவேண்டும். இன்னும் சிலர் இந்த பிரச்சினையை மஹிந்த ராஜபக்ஷவின் முதுகில் ஏற்ற முற்படுகிறார்கள். இவ்வாறு மேற்கொள்வதால் மக்களை பாதுகாக்க முடியாது. இதனை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும்” என மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.