நந்திக்கடல் / பத்தாண்டுகள்.மீள் பதிவு 05.!!

நியூட்டன் சட்டகம் / சிக்கல் உத்தி/ பிரபாகரன் சட்டகம் / நந்திக்கடல் கோட்பாடுகள்.
எமது போராட்டத்தின் வலிமை எமது போராளிகளின் நெஞ்சுரத்திலிருந்தே பிறக்கிறது – பிரபாகரன்.

புலிகள் இயக்கம் புலிப்பண்பாட்டின் மூலம் உணர்வுகளின் வழியாக, பலமான அடித்ததளத்தில் இருந்து கட்டப்பட்ட இயக்கம்[9]. எதிரிகள் தலைமையை அழித்தாலும், அது மீண்டும் பலமான தலைமையைப் பெரும் வல்லமையுடையது. இதை எதிரிகளால் கொல்லப்பட்ட எழுத்தாளர் தராகி சிவராம் பலமுறை கூறியுள்ளார்கள்.


புலிவீரர்கள் உணர்வுகளின் அடிப்படையில் விடுதலைக்குப் போராடுவதானால், அவர்கள் முழு அர்ப்பணிப்புடன் போராட முடிந்தது. மாறாக எதிரிப்படைகள் மேலிருந்து (TopDown) திட்டமிட்டு கட்டப்பட்டவை. போர் வீரர்கள் வறுமையின் காரணமாக வேறுவழி இல்லாமல் இராணுவத்தில் இணைவதால், அவர்களிடம் உண்மையான அர்ப்பணிப்பு, உணர்வு, ஓர்மம் கிடையாது. புலிகளால் எந்த ஒரு சம்பளமும் பெறாமல், எதிரிகளை விட பலமடங்கு மனபலம் வாய்ந்த படைகளை உருவாக்க முடிந்ததற்குக் காரணம் அது கீழிருந்து கட்டியமைக்கப்பட்ட இயக்கம்.


2009 இழப்புக்குப்பின் பெரிய போராட்டங்கள் நடக்காமல் இருப்பதற்கு புலிப்பண்பாட்டு இழப்புதான் காரணம், தலைமை இழப்பு அல்ல. ஆப்கானிசுத்தானிலும் ஈராக்கிலும் பல வருடங்களாக அமெரிக்காவும் அதன் துணைநாடுகளும் போர் புரிந்து, பல இயக்கங்களின் தலைமைகளைக் கொன்றாலும் போர் முடிவிற்கு வராததற்குக் காரணம், அவ்வியக்கங்களும் கீழிருந்து மேலாக ஒரு பண்பாட்டின் மூலம் கட்டியமைக்கப் பட்டிருப்பதுதான். அவர்களின் தலைமை அழிய, புதிய தலைமைகள் முன்பைவிட வீரியமாகத் தோன்றி சிக்கலைக் கூட்டுகிறது. அவர்களின் பண்பாட்டை மாற்றாமல் வெற்றி என்பது நடக்காத காரியம்.

மேலிருந்து திட்டமிட்டு கட்டியமைப்பது என்பது நியூட்டன் சட்டகம். பிரபாகரன் சட்டகத்தில் (சிக்கல் அமைப்பு) கீழிருந்து மேலாக கட்டியமைக்கப்படும். அவ்வாறாக கீழிருந்து கட்டியமைக்கப்படும் இயக்கங்களே நீண்டகாலம் தாக்குப்பிடித்து மாறும் சூழலுக்கு ஏற்ப தகவமைத்து வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகளைக் கூட்டுகிறது.

“Evolution moves from the simple to the complex. Healthy complex systems evolve by chunking together healthy simpler systems. Attempts to design large, highly complex organizations from the top down rarely work, if ever. This merely confirms what successful military organizations have long recognized: success starts at the small-unit level. Build strong, adaptable squads and sections first. Train and equip them well—which includes giving them ample time to train themselves (i.e., to evolve). Give them the very best leaders. Give those leaders the freedom and responsibility to lead (i.e., let them act as independent agents). Then chunk the teams and squads together into increasingly larger units.” [13]

இன்றைய திராவிடக் கட்சிகள் பார்ப்பதற்குப் பலமாக இருந்தாலும், அவை ஒரு தலைமையால் பணத்தால் மேலிருந்து கீழாக கட்டியமைக்கப்பட்ட இயக்கங்கள். 

தலைமையோ அல்லது தொடர்ந்து பணவரவோ இல்லையென்றால் அவை எளிதில் நொறுங்கும் தன்மை கொண்டது. அவை நீண்டகாலம் நீடிக்கப்போவதல்ல. கீழிருந்து மேலாக கட்டியமைக்கப்படும் இயக்கங்களே நிலைத்து நிற்கும். மத இயக்கங்கள் பல ஆயிர வருடங்களாக இன்றும் நிலைத்து நிற்பதற்குக் காரணம் அவை கீழிருந்து மேலாக கட்டியமைக்கப்பட்ட இயக்கங்கள். அவர்களின் பலம் என்பது சாதாரண மனிதனின் நம்பிக்கையில் பிறக்கிறது.

புலிகள் இயக்கம் புதுமைகளைப் படைத்த இயக்கம். உலக இராணுவங்கள் பயன்படுத்திய நியூட்டன் சட்டக வியூகங்களை உடைத்து புதிய சட்டகத்தை உருவாக்கி இந்திய இலங்கை இராணுவங்களைப் பலமுறை தோற்கடித்தார்கள் [5]. யாரும் நம்பவே முடியாத திட்டங்களையும் உத்திகளையும் வகுத்தார்கள். அவர்கள் இராணுவ உத்திகளைப் பற்றிய அறிவில் முன்னோடிகளாக இருந்தார்கள் [5]. அறிவுதான் சிக்கனத்திற்கே அடிப்படையானது. எந்த உத்தி சிறப்பானது என்ற அறிவு இல்லாவிட்டால், அவர்களால் இவ்வளவு வெற்றிகளை அடைந்திருக்க முடியாது. 

அவர்களின் கப்பற்படைப் படகுகளை அவர்களே வடிவமைத்தார்கள், பல இராணுவ தளபாடங்களையும் அவர்களே படைத்தார்கள். சிறிய எளிமையான விமானங்களை எடுத்து, குண்டெறியும் விமானங்களாக மாற்றி வடிவமைத்தார்கள் [11]. இதெல்லாம் அவர்களின் கண்டுபிடிப்புகளுக்கும் சிக்கனத்திற்கும் உதாரணங்கள். நமக்குத் தெரியாதது எத்தனையோ.

மொத்தத்தில் புலிகள் இருக்கும் பொருளாதாரத்தையும் ஆட்பலத்தையும் வைத்து சிக்கனமாக ஒவ்வொரு காய்களாக உருவாக்கி அவற்றை இணைத்து வாய்ப்புகளைப் பெருக்கி ஒவ்வொரு அடியாக முன்னேறினார்கள். இதுதான் இன்றைய சிக்கல் அமைப்புகள் பற்றிய ஆராய்ச்சிகள் கூறும் .வெற்றிக்கான பாதை [12]. அதைப் புலிகள் ஆரம்ப காலத்திலிருந்தே பின்பற்றி வந்தார்கள்.

அடுத்து என்ன?

புலிகளின் உத்திகள் இராணுவ செயல்பாடுகளுக்கு வடிவமைக்கப்பட்டாலும், அவற்றை சமூகம், அரசியல் உட்பட அனைத்து சிக்கலான அமைப்புகளுக்கும் பயன்படுத்தலாம். இது ஏனென்றால் புலிகள் பயன்படுத்திய உத்திகளும் சிக்கலான அமைப்புகளுக்கான உத்திகளும் ஒன்றே என்று அண்மைய ஆராய்ச்சிகளின் மூலம் தெரிகிறது [12]. அடிப்படையில் இன்று நாம் எதிர்நோக்கும் பெரும்பாலான சிக்கல்களுக்கான உத்திகளை புலிகள் ஏற்கனவே நமக்காக உருவாக்கிவிட்டார்கள். அதை எடுத்து பயன்படுத்துவதுதான் மிச்சம்.

அன்று புலிகள் பயன்படுத்திய உத்திகளை இன்றைய தமிழ்த்தேசிய செயல்பாடுகளுடன் ஒப்பிட்டால் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்தான் தெரிகிறது. 

அதற்கு இன்றைய தமிழ்த்தேசியத்தைக் குற்றம் கூற முடியாது. புலிகளின் உத்திகளை முழுதாகப் புரிந்து கொள்வதற்கு புலிகள் தங்கள் உத்திகளை இரகசியம் காரணமாக ஆவணப்படுத்தவில்லை அல்லது அவ்வாறான ஆவணம் 2009-இல் அழிந்து போயிருக்கலாம். இதனால் நாம் பின்னோக்கி அவர்களின் செயல்பாடுகளை நவீன அறிவியல் தத்துவங்களின் வாயிலாக ஆராய்வதின் மூலமே அறிந்து கொள்ளமுடிகிறது.

இன்றைய தமிழ்த்தேசிய இயக்கங்கள் தங்களது உத்திகளையும் செயல்பாடுகளையும் சிக்கல் அமைப்பு சட்டகத்தின் (அல்லது பிரபாகரன் சட்டகத்தின்) கீழ் மறுசீரமைப்பு செய்யவேண்டும். அதற்கு அடிப்படையாக கீழ்வரும் கேள்விகளிலிருந்து ஆரம்பிக்கலாம்:

01.நீங்கள் உங்கள் எதிரியைவிட அதிக அறிவைப் பெற்றிருக்கிறீர்களா?

02. நீங்கள் ஒரு உத்தி என்றில்லாமல் பல உத்திகளைக் கையாள்கிறீர்களா?

03. உங்கள் அமைப்புகள் கீழிருந்து மேலாக கட்டப்பட்டிருக்கிறதா?

04. நீங்கள் புதுமையைப் படைக்கிறீர்களா?

05. நீங்கள் சிக்கனத்தைக் கடைபிடிக்கிறீர்களா?

06. எதிரியின் ஆற்றலை வீணடிக்கிறீர்களா, உறிஞ்சுகிறீர்களா?

இதுவரை நாம் பார்த்தது பிரபாகரன் சட்டகத்தின் (சிக்கல் அமைப்பு சட்டகத்தின்) சில முக்கியமான ஆர்வத்தை ஏற்படுத்தும் கருத்துக்களை மட்டுமே. இது எந்த வகையிலும் ஒரு முழுமையான ஆய்வு அல்ல.

புலிகளை அறிவில்லாத முரடர்கள் என்று சில தமிழ் இயக்கங்கள் குற்றம் சாட்டுகின்றன. ஆனால் உண்மையில் புலிகளைப்போல அறிவிலும் ஆற்றலிலும் விஞ்சிய இயக்கங்கள் இதுவரை தமிழர் வரலாற்றிலேயே தோன்றியதில்லை. புலிகள் கற்றது படைத்தது பலவகையில் புதுமை என்பதால், உலக இராணுவங்கள் இன்னும் பல நூற்றாண்டுகள் அவர்களைக் கற்றுக்கொண்டிருக்கும். புலிகளைக் கற்காமல் தமிழ்த்தேசியம் ஒரு அடியும் முன்னேற முடியாது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.