ஐயோ மைத்திரி என்னை அச்சுறுத்துகிறார்!!

சட்டம் ஒழுங்கு அமைச்சை பொன்சேகாவிடம் வழங்கினால், அவர் முதலில் என்னைத்தான் கைது செய்வார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தெரிவித்ததாக கூறியுள்ளார் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா. டெய்லிமிரர் ஆங்கில ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் இதை கூறியிருக்கிறார். “பிரதமர் மற்றும் சில அமைச்சர்களிடம் ஜனாதிபதி கூறியிருக்கிறார், பொன்சேகாவிடம் சட்டம் ஒழுங்கு அமைச்சை வழங்கினால், அவர் தன்னைத்தான் முதலில் கைது செய்வார் என. ஜனாதிபதி பயப்பிடுகிறார். இந்த அமைச்சை வைத்து ஜனாதிபதி அரசியல் வேலைதான் செய்ய முயற்சிக்கிறார். பாதுகாப்பு செயலர், பொலிஸ்மா அதிபரை மாற்றியதை தவிர எந்த மாற்றத்தையும் அவர் செய்யவில்லை. அதே பழைய கூட்டம்தான். கடந்த மூன்றரை ஆண்டுகளில் அவர்களால் செய்ய முடியாததை செய்ய முயலுகிறார்கள். ஜனாதிபதி பாதுகாப்பை பற்றி எதையும் புரிந்து கொள்ளவில்லை.  நாட்டில் கொந்தளிப்பான சூழல் இருந்தபோது, அவர் சீனாவிற்கு சென்றார். ஒரு அமைச்சரும் இங்கிருந்து செல்லவில்லை. அந்த மாநாட்டில் வேறு எந்த நாட்டின் தலைவர்களும் கலந்துகொள்ளவில்லை. அவர் ஒவ்வொரு வாரமும் வெளிநாடு செல்கிறார். வெளிநாடு செல்லும் போது நான்கைந்து நாட்கள் அங்கே தங்குகிறார். ஜனாதிபதி, பிரதமர்கள் இப்படி வெளிநாடு செல்வதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? இந்திய பிரதமர் இலங்கைக்கோ, சீனாவிற்கோ வந்தால் அடுத்த நாள் காலையில் திரும்பி சென்று விடுவார். இங்கே என்ன நடக்கிறது என்பதை பற்றி ஜனாதிபதி கவலைப்படவில்லை. அவர் ஒரு அதிகாரவெறி பிடித்தவர். பயங்கரவாதத்தை எதிர்த்து போராட ஒரு மூலோபாயம் தேவை. யுத்தத்தில் புலிகளை தோற்கடிக்க நான் என்ன மூலோபாயத்தை பாவித்தேன் என்பதை சொன்னால், அதை இன்னொரு முறை பாவிக்க முடியாது. விடுதலைப்புலிகளிற்கு எதிரான போரில் நான் என்ன செய்தேன் என்பது யாருக்கும் தெரியாது. ஜனாதிபதிக்கும் தெரியாது, கோத்பாயவிற்கும் தெரியாது. அடுத்த வாரம் எங்கு செல்லப்போகிறோம் என்பது எனக்கும், கட்டளைத்தளபதிகளிற்கும் மட்டுமே தெரியும். முல்லைத்தீவிற்கும், புதுக்குடியிருப்பிற்கும் நான் சுற்றிப் போவேன் என்பது யாருக்கும் தெரியாது. கிளிநொச்சியை முடித்து விட்டு கிழக்கு நோக்கி நான் சென்றபோதுதான் புரிந்து கொண்டார்கள்“ என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.