இல்லாத ஒன்றை பூதாகரமாக்குவது என்ன மனநிலை? - உளவியல் அலசல்!

பல ஆண்டுகளுக்கு முன்பு சக்திமான் என்ற கதாபாத்திரம் குழந்தைகள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தது.
தன்னை சக்திமான் வந்து காப்பாற்றுவார் என்று கருதி மாடியிலிருந்து குழந்தைகள் குதித்த பல நிகழ்வுகள் நடந்தன.
சக்திமான், அவெஞ்சர்ஸ், நேசமணி... இல்லாத ஒன்றை பூதாகரமாக்குவது என்ன மனநிலை? - உளவியல் அலசல்!


இரண்டு நாள்களாக இணையத்தைக் கலக்கிக்கொண்டிருக்கிறார் நேசமணி. #PrayforNesamani என்ற ஹேஷ்டேக் உலகளவில் பிரபலமாகிவிட்டது. தமிழே தெரியாதவர்கள்கூட நேசமணியைத் தேடத் தொடங்கிவிட்டனர். 

இதுமாதிரியான நிகழ்வுகள், இணையவாசிகளுக்குப் புதிதல்ல. உலகளவில் இதுபோன்ற விஷயங்கள் அவ்வப்போது டிரெண்டிங் ஆவது சாதாரணமாகிவிட்டது.

கடந்த ஏப்ரல் மாதம், மார்வெல் நிறுவனத்தின் தயாரிப்பான `அவெஞ்சர்ஸ்' தொடரின் இறுதிபாகமான `அவெஞ்சர்ஸ் எண்டு கேம்' படத்தின் டிரெய்லர் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. அந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரமான அயர்ன்மேன், தனியாக விண்வெளியில் மாட்டிக்கொள்வது போன்ற காட்சிகள் இருந்தன. இதைப் பார்த்த ரசிகர்கள் அயர்ன்மேனைக் காப்பாற்றுமாறு அமெரிக்க விண்வெளி மையமான நாசாவுக்கு ட்வீட் செய்தனர். இது வைரலான நிலையில், ரசிகர்களுக்கு நாசா பதிலளித்தது. நாசா வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ``நாங்கள் டோனி ஸ்டார்க் பற்றிக் கேள்விப்பட்டோம். நீங்கள் `அவெஞ்சர்ஸ்' சென்ற விண்கலத்தின் கட்டுப்பாட்டு மையத்தை முதலில் தொடர்பு கொள்ளுங்கள். தொடர்புகொள்ள முடியவில்லை என்றால், பூமியிலிருக்கும் எங்கள் குழுவுடன் இணைந்து விண்கலத்தை ஸ்கேன் செய்து காணாமல்போன டோனி ஸ்டார்க்கைக் கண்டுபிடிக்கலாம்" எனத் தெரிவித்தது. நாசாவின் இந்தப் பதிலும் ஹிட்டடித்தது.

இதெல்லாம் சரி. இல்லாத ஒரு விஷயத்தை இத்தனை பெரிதாக்க வேண்டுமா என்ற கேள்வியும் ஆதங்கமும் பலரிடம் இருப்பதையும் பார்க்க முடிகிறது. ஒரு செய்தி உண்மையில்லை என்று தெரிந்தும் இத்தனை முக்கியத்துவம் தரப்படுவதன் பின்னணி என்ன? 

மனநல மருத்துவர் டாக்டர் ஸ்வாதிக் சங்கரலிங்கத்தின் கருத்து

``பொம்மைகளை வைத்து விளையாடும் குழந்தைகள் அதோடு பேசுவதையும் சாப்பாடு ஊட்டுவதையும் தன்னருகில் பொம்மையைப்  டாக்டர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்படுக்கவைத்துக்கொள்வதையும் பார்த்திருப்போம். சில குழந்தைகள் தங்களுக்குப் பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரங்கள் தங்களுடனே இருப்பது போன்று கற்பனை செய்துகொண்டு, அதற்கேற்ப செயல்படுவார்கள். குழந்தைப் பருவத்திலிருந்து சற்று வளர்ந்தவுடன் அந்த நிலை மாறிவிடும். பொம்மை என்பது நிஜம் இல்லை என்ற புரிதல் ஏற்பட்டுவிடும்.

சற்று வளர்ந்த குழந்தைகளுக்கு அயர்ன்மேன், ஸ்பைடர்மேன் போன்ற சூப்பர் ஹீரோக்கள் மீது ஆர்வம் திரும்பிவிடும். அந்தக் கதாபாத்திரங்களைப் பற்றியே பேசுவார்கள். அவை எப்படிச் செயல்படுகிறதோ அதேபோன்று நடந்துகொள்வார்கள். அந்தக் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்களைப் பற்றிய செய்திகளைக் கேட்பதில் ஆர்வம் காட்டுவார்கள். இது எல்லாமே மிகவும் இயல்பான விஷயம்தான். இது பெரியவர்களுக்கும் இருக்கும் குணாதிசயம்தான். அந்தந்த வயதுக்கு ஏற்றாற்போல் இதுபோன்ற செயல்பாடுகள் இருக்கவே செய்யும். எல்லாமே மிக மிக இயல்பான விஷயம்.

குழந்தைகள் என்றால் படிப்பு, பெரியவர்கள் என்றால் வேலைக்குப் போவது என ஒவ்வொரு வயதினருக்கும் முன்னுரிமை கொடுக்க கடமை ஒன்று இருக்கும். அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இதுபோன்ற விஷயங்களுக்குப் பின்னால் செல்வதால், அது அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கிறது என்றால் அது உளவியல் பிரச்னையாக மாறும்.

வேலைக்குப் போவதைத் தவிர்த்துவிட்டு 'நேசமணிக்கு என்னாச்சு' என்று இணையத்தில் தேடிக்கொண்டிருந்தால் அது அசாதாரண நிலை.

பல ஆண்டுகளுக்கு முன்பு சக்திமான் என்ற கதாபாத்திரம் குழந்தைகள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தது. தன்னை சக்திமான் வந்து காப்பாற்றுவார் என்று கருதி மாடியிலிருந்து குழந்தைகள் குதித்த பல நிகழ்வுகள் நடந்தன. இதுபோன்ற நிலைதான் ஆபத்தானவை.

நேசமணி போன்ற கேளிக்கையான விஷயங்கள் நம் நேரத்தையும் ஆற்றலையும் எவ்வளவு நேரம் ஆட்கொள்கிறது என்கிற சுயபரிசோதனை எல்லோருக்கும் முக்கியம். இதுபோன்ற விஷயங்களுக்கு ஓர் அளவுகோல் வைத்துச் செயல்பட்டால் அது இயல்பான விஷயம்தான்.

நேசமணி விஷயத்தை யாரும் சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை. அதிக வேலை பளுவோடு இறுக்கமாகப் பணியாற்றிக்கொண்டிருப்பவர்களது மனநிலையை நேசமணி பற்றிய ஒரு மீம் அல்லது கமென்ட் இலகுவாக்கும். மகிழ்ச்சியைக் கொடுக்கும். இதனால் யாருக்கும் எந்தத் தீங்கு விளையப்போவது இல்லை. எந்த விஷயமாக இருந்தாலும், அது ஒருவருக்குத் தீங்கு விளைவிக்காமல், நல்ல விளைவை ஏற்படுத்துகிறது என்றால் அது கற்பனையாக இருந்தாலும் வரவேற்கலாம். மனதை இலகுவாக்குவதற்கு அவ்வப்போது நேசமணி போன்ற விஷயங்கள் வருவது நல்லதுதான்..." என்கிறார் அவர். 

நேசமணியின் தலையில் சுத்தியல் விழுந்தாலும் அவர் கான்ட்ராக்ட் எடுத்த வேலையை 'அப்ரசென்டி'களின் உதவியோடு செய்துகொண்டுதான் இருக்கிறார். நேசமணியை ஓவர்டோஸ் ஆக்காமல் தவிர்த்துவிட்டு, நம் பணியில் கவனம் செலுத்துவோம்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.