சிறுபான்மை மக்கள் மீதான பனிபோர்!! அதிகாரத்தின் அனலாக பௌத்த துறவிகள்!!

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் முன்னெடுத்த உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு தீர்வு கிட்டியிருக்கிறது.
அமைச்சர் ரிசாட் பதியூதீன் , அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். ஒரு பௌத்த துறவியின் வேண்டுகோளுக்கு  உடனடியாக செவிசாய்க்கப்பட்டிருக்கின்றது, என்பது பௌத்த பெரும்பான்மை மக்களிடையே மகிழ்ச்சியையும் குதூகலத்தையும் கொடுத்திருக்கின்றது. இது சாதாரண விடயம் அல்ல,
இலங்கை பௌத்த சிங்கள நாடு என்பதற்கான அறைகூவல், பௌத்த மேலாண்மை அதிகாரத்தின் வெற்றி. 

இன்றைய பதவி விலகல்கள் பற்றி ஆராயவேண்டிய கட்டாயத்தில் தான் தமிழ் மக்களாகிய நாங்கள் ஒவ்வொருவரும் காணப்படுகின்றோம். அது மட்டுமன்றி முஸ்லீம் மக்களும் இப்பிரச்சினையை அவதானத்துடனே நோக்கவேண்டும். சிறுபான்மை மக்களின் மீதான ஒரு வன்திணிப்பே இன்றைய இந்த துறவியின் வெற்றி என்பது கண்கூடு. 
யுத்தம் முடிவடைந்து பத்து ஆண்டுகள் கடந்துவிட்டதென்றும் இலங்கையில் அனைத்து இன மக்களும் சுதந்திரமாகவும் சுபீட்சமாகவும் நடமாடுகின்றனர் எனவும் ஒருவித மாயத்தோற்றத்தை உலக அரங்கிற்கு காண்பித்துக்கொண்டிருக்கிறது அரசு. ஆனால் உள்நிலைமைகளோ வேறாகவே உள்ளது. 

கொழும்பின் அரசியல் பீடமானது தமக்கு சாதகமான ஒன்றிற்காக எப்படியும் மாறிவிடும் என்பதே உண்மை நிலைவரம் என்பது யதார்த்தம்.  காலம் காலமாக சிறுபான்மை மக்கள் அல்லல்பட்டு அடிமை வாழ்வையே வாழ்ந்தனர், இனியும் வாழவேண்டியவர்களாக உள்ளனர். 

அரசாங்கத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு கூட தேரர்களுக்கு சக்தி உள்ளது என்பதனையும் பதவியில் இருந்து தூக்குவதென்ன, சிறுபான்மை மக்களை அழிப்பதென்றால் கூட எம்மால் முடியும் என அவர்கள் மார்தட்டிக்கொள்ளும் அளவிற்கு அவர்களின் பலப்பிரயோகம் காணப்படுகின்றது என்பதை இன்றைய பதவிவிலகல் நிரூபணம் செய்துள்ளது. ஒரு துறவியால் இது சாத்தியமாகியிருக்கிறதென்றால் பல துறவிகளின் கூட்டிணைவு நிச்சயமாக சிறுபான்மைஇன அழிவிற்கு துணையாகிவிடும். 

அரசியல் விடயங்களில் மட்டுமன்றி பாரம்பரியம், தொன்மை பேணுதல் மற்றும் நிலஆக்கிரமிப்பிலும் பிக்குமாரின் அதிகாரக்கூக்குரல் மேலேறிச் செல்வதாகவே உள்ளது. உதாரணமாக, நீராவியடிப்பிள்ளையார் கோவிலில் நடந்தவைகளையும் கிண்ணியா கோயில் வளாகத்தில் நிகழ்ந்தவைகளையும் நாம் உற்றுநோக்கிப் பார்த்தல் வேண்டும். உள்நாட்டுப்போர் முடிந்துவிட்டதாகச் சொல்லிக்கொள்ளும் அரசு எம்மீது பனிப்போரைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. 

பெரும்பான்மை இனத்திற்கான நியாயங்கள் ஒருபோதும் சிறுபான்மை இனத்திற்கு வழங்கப்படுவதில்லை, பாகுபாடான நியாயங்கள் எப்போதுமே சமாதானத்தை தந்துவிடப்போவதுமில்லை.

இன்றைய சம்பவம் சாதாரணமான ஒன்றல்ல, சிறுபான்மை இனத்திற்கு விடுக்கப்படும் அபாய எச்சரிக்கை. காலகாலமாக சிறுபான்மை மக்களை அடக்கி ஒடுக்கி வைத்திருக்கவே இலங்கை அரசு முனைப்புடன் இயங்கியது. விடுதலைப்புலிகளால் அந்த நிலை மாற்றப்பட்டது. எனினும் மூன்று தசாப்தங்கள் கடந்து அரசு தனது இனவெறியை, நீண்ட சிந்தனையை சர்வதேசத்தின் உதவியுடனே நிறைவேற்றிக்கொண்டது. தவிர இன்றுவரை தனது அடி, ஆழ்மனத் துவேசத்தில் இருந்து விலகாமல் தனது எண்ணங்களை செயற்படுத்துவதற்கு பௌத்த மதகுரமாரை தயார்ப்படுத்தி வருகின்றது. அவர்களும், சிறுபான்மை மக்களுக்கெதிரான  தமது அடக்குமுறைச் சிந்தனையை வலுவாக நிலைநிறுத்தி வருகின்றனர். அதன் இன்னொரு வடிவம்தான் இன்றைய இந்தச் சம்பவமும் ஆகும். அறுபது வருடங்களாக ஏமாற்றப்பட்டோம் என்பதை எமது அரசியல் தலைமைகளும் ஆதங்கத்தோடு பகிர்ந்துகொண்டதை நாம் இவ்விடத்தில் நினைவுகூரவேண்டும். எங்கள் அரசியல் உரிமைகளைப் பெறவும் எங்கள் வாழ்க்கையை நாங்களே தீர்மானித்துக்கொள்ளவும் ஒருபோதும் முடியாது என்பது புரிந்த ஒன்றே.


ஒடுக்கப்படும் மக்கள் சமுதாயமானது போராட்டங்களின் மூலமே தனது வெற்றியை நிர்ணயித்துக் கொள்கிறது. அன்று லங்காராணியில் விவாதிக்கப்பட்டதை மீண்டும் நினைவுகூரவேண்டிய நிர்ப்பந்தத்தில் சிறுபான்மை மக்களை நிறுத்த முனைகிறதா அரசு? 

பனிப்போர் என்பது இவ்வாறு வரையறுக்கப்படுகின்றது.  உலகம் முழுவதையும் பார்க்கும்பொழுது, பல தசாப்தங்களாக நகர்வது அராஜகத்திற்கு எதிரானது அல்ல, ஆனால் அடிமைத்தனத்தை மறுபரிசீலனை செய்யும் நோக்கம் கொண்டது .... அதாவது உலகின் பார்வையில், நம்பிக்கைகள், மற்றும் அநேக நிலப்பகுதியில் நிலவுகின்ற சமூக அமைப்பானது அதன் அண்டை நாடுகளுடன் பனிப்போர் என்ற நிரந்தர நிலைமையில் உள்ளது
ஜேம்ஸ் பர்ன்ஹாமின் கணிப்புகளைப் ஒப்பிட்டு ஓர்வெல் இவ்வாறு எழுதினார்.

தமிழரசி
தமிழருள் ஆசிரியர்பீடம்
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.