மெல்லப் பேசு ....மின்னல் மலரே....!! பாகம் 16!!

உண்மைக்காதலின்  
உன்னதம் நாமடி. 
உலகத்தில் எம் காதல்
உயர்ந்தது தானடி.


அந்த மதியப்பொழுது அழகாய் தெரிந்தது ஆதித்தனுக்கு, ஆச்சரியமாகவும் இருந்தது, இந்த அளவிற்கு ஒரு ஆணால் காதலிக்க முடியுமா, ஐந்து ஆண்டுகளாக.....ஒரே அளவோடு........அதுவும் திருமணமான ஒரு பெண்ணை, ஒரு குழந்தையோடு,

காதலை காதல் காயப்படுத்துகிறது, காதலை காதல் கொன்று புதைக்கிறது, அப்படிப்பட்ட இந்த காலத்தில் இந்தக் காதல் சாத்தியமா? உல்லாசமான காதல்களைத் தாண்டி, இவனது காதல் உணர்வுகளால் நெய்யப்பட்டிருக்கிறதே, 

வெற்றிமானின் காதல் சரி, ஆனால் கனிக்கு எப்போது திருமணம் நடந்தது? அவள் ..!!

எண்ணங்களினுாடே பெருமூச்சை வெளிவிட்டஆதித்தன், , “வெற்றிமாறன், கனியை எனக்கு எப்பிடித் தெரியும் எண்டால், அவள் என்ர கூடப்பிறக்காத தங்கச்சி. சின்ன வயசில இருந்து தோளில துாக்கி வளத்திருக்கிறன், அவ எங்கட வீட்டுக்குப் பக்கத்திலதான் இருந்தா, அவளுடைய அம்மா, வீட்டுவேலை செய்துதான், அவளை வளத்தவா, என்ர அம்மாவோட கூலி வேலைக்குப் போறவா, சின்ன வயசில அவளும் நானும் ஒண்டாதான் பள்ளிக்கூடம் போவம், ஒண்டா இருந்துதான் படிப்பம், ஒண்டாத்தான் சாப்பிடுவம், எனக்கு அவளெண்டால் உயிர், அவளுக்கு நானெண்டால் உயிர். பதினைஞ்சு வயசு வரைக்கும் அப்பிடித்தான் இருந்தம்.

காலம் கடந்து எனக்கு ஒரு தங்கச்சி வந்த பிறகு நான் கனியைத் தள்ளிவைச்சனோ, அவள் என்னைவிட்டு விலகினாளோ, தெரியேல்ல, எங்களுக்குள்ள சின்னதா இடைவெளி வந்திட்டுது, அவளின்ர இடத்தை இன்னொருத்தர் பிடிச்சிட்டதா அவளுக்குள்ள ஒரு சோக மனநிலை வந்திட்டுது, அப்பவும் அவளையும் நான் தங்கச்சியாத்தான் நினைச்சன், முதல்ல மாதிரி இல்லையே தவிர ஏதாவது படிப்பு பற்றி கேட்க என்னட்ட வருவா, 
திடீரெண்டு ஐஞ்சு வயசில என்ர தங்கச்சி காய்ச்சல் வந்து இறந்துபோக, எனக்கு அந்த இழப்பை கனிதான் ஈடுசெய்தா, கனி, இயல்பிலயே தாய்மைக் குணம் நிறைஞ்ச பெண், அவளால, எப்பவுமே கனிவாத்தான் நடக்கமுடியும், 

தவிர அவள் நல்ல கெட்டிக்காரி, படிப்பிலயும் விளையாட்டிலையும் படுசுட்டி. அவ தன் தாய்க்கு நிறைய பெருமைதான் தேடிக்குடுத்திருக்கிறா, என்ர மனசில சின்ன துக்கம் எண்டாலும் அவளுக்குத் தெரியும், அவள் யோசிக்கிறாள் எண்டா எனக்குத் தெரியும், ஒரு தாயிடம் பிறக்காவிட்டாலும் நானும் அவளும் அண்ணா தங்கச்சிதான், அது என்ன பந்தமோ தெரியேல்ல, ஏதோ தொட்டகுறை விட்டகுறை மாதிரி, நான் எப்பிடி கெட்டித்தனமா படிச்சனோ, அதே மாதிரி அவளும் படிச்சா,  வீட்டிலையும், நிறைய சந்தோசம். 


அவள் யுனிக்கு தெரிவானது வரைக்கும் எங்களோட இருந்தா, பிறகு சில நாளில எங்க எண்டே தெரியேல்ல, அம்மாவும் அவளும் எங்களிட்ட ஒண்டும் சொல்லாமலே போயிட்டினம், நாங்களும் தேடினம், திடீரெண்டு போக என்ன காரணம் எண்டு எங்களுக்கும் தெரியேல்ல,
பிறகு ரெண்டு வருசத்தில அம்மாவுக்கு சரியான வருத்தம் எண்டும் கொஸ்பிற்றலில கனி தனிய நிண்டு சிரமப்படுறதையும் தெரிஞ்ச ஒருத்தர் சொல்லக்கேட்டதும் நானும் அம்மாவும் உடனே பாக்கப்போனம், போய் என்ன, அந்த நேரம் இருந்த வறுமையில அம்மாவுக்கு அவ்வளவு பெரிய ஒப்பிறேசனை எங்களால செய்யமுடியேல்ல,

"அம்மாவுக்கா???"

அது...வெற்றி, என்ர அம்மாவை கனி அம்மா எண்டுதான் சொல்லுவா, கனியின்ர அம்மாவை நான் அம்மா எண்டுதான் சொல்லுவன்"
"ஓ,,,,,,"

அவளாலையும் அது முடியேல்ல, அம்மா இறந்திட்டா, வெறிச்சுப் பாத்தபடி இருந்தாளே தவிர கனி பெரிசாக கத்தி அழவேயில்லை, அவள் அழுதால் நல்லது எண்டு எல்லாரும் கதைச்சினம், எப்பவும் போல அவ அந்த நேரத்திலையும் இறுக்கமாவே இருந்திட்டா, எல்லா  துக்கத்தையும் மனசுக்குள்ள போட்டு இறுக்கி கொள்ளுறது அவளுக்குப் பழகிப்போச்சுது,

கனி தனிச்சுப்போய் நிண்டா. அவளை வீட்ட வரச்சொல்லி எவ்வளவோ கேட்டும் அவள் வரவேயில்லை. அப்ப எனக்கு காரணம் தெரியேல்ல, சொல்லாமல் கொள்ளாமல் போனதுக்கான காரணத்தையும் கேட்க நினைச்சாலும் அப்ப இருந்த சூழல் அதைக்கேட்க முடியாமல் போட்டுது, ஆனா.....”
“என்ன காரணம் ஆதித்தன்?” பரபரத்தான் வெற்றி.

அவளுக்கு ஏற்கனவே அவளின்ர அம்மாட வாழ்க்கையைப் பாத்து, காதல், கலியாணம் இதுகளில விருப்பு கிடையாது, காதலெண்டா பயம், கல்யாண வாழ்க்கையிலும் பயம் மட்டும்தான், எங்கட வீட்ட படிக்கிறதுக்காக வந்து நிண்ட என்ர மாமாட மகனும் அவளை ரொம்பவே கட்டாயப்படுத்தியிருக்கிறான், அதனால தான் அம்மாவும் கனியும் சொல்லாம கொள்ளாம யுனியிலையும் மாற்றம் கேட்டு ஊரைவிட்டே போனது....
எங்களுக்குத் தெரிஞ்சா வீட்டில பிரச்சினை எண்டும், மாமாவுக்கும் அம்மாவுக்கும் பிரச்சினை வரும் எண்டும் நடந்ததை கனியோ அம்மாவோ எங்களிட்டச் சொல்லேல்ல, அம்மாவின்ர சடங்கு முடிஞ்சு  ஒரு மாதத்தில காரியம் செய்துபோட்டு வீட்ட வந்த நானும் அம்மாவும் திரும்பிப் போய் பாத்தா கனியை அங்க காணேல்ல, எனக்கு சரியான கவலையா கிடந்தது, ‘ஏன் இவள் இப்பிடி நடக்கிறாள் எண்டு,‘
பிறகுதான் மாமாட மகன் உண்மையைச் சொன்னவன், பாவம் எங்க போனாளோ எண்டு நாங்கள் தவிச்சுக்கொண்டிருந்தம், நேற்றைக்குப் பிறகுதான் எனக்கு சரியான நிம்மதி. உங்கள மாதிரி ஒரு நல்லவர் வீட்டிலதான் தஞ்சமடைஞ்சிருக்கிறாள், அவ்வளவும் போதும், அதுவும் நீங்கள் கனியை இந்த அளவுக்கு காலிக்கிறீங்கள் எண்டு தெரிய, என்ர மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது வெற்றி. கனி என்ர தங்கச்சி, அவ சந்தோசமா வாழவேணும், ஆனா, இந்தக் குழந்தை?”

“என்ன சொல்றீங்கள் ஆதித்தன்?”

“அதுக்கிடையில கலியாணம் செய்து குழந்தை பெற்றுக்கொள்வது என்பதைத்தான் என்னால ஏற்கமுடியேல்ல, அதுவும் கனி நிச்சயமா திருமணத்தைப் பற்றி நினைச்சிருக்கமாட்டாள், அம்மாவை இழந்த துயரத்தில திருமணம், சான்ஸே இல்லை, அந்தக் குழந்தைக்குப் பின்னுக்கு ஏதோ ஒரு விசயம் இருக்கவேணும் வெற்றி, அவள் எதையோ மறைக்கிறாள் எண்டு நினைக்கிறன்,  நான் கனியோட கதைக்கிறன், என்ன நடந்தது எண்டு தெளிவா தெரிஞ்சுகொள்ளுவம்,”

ஆதித்தனின் கைகளை இறுக்கமாய் பற்றிக்கொண்ட வெற்றி,   “அவ கல்யாணம் செய்திருந்தாலோ, அவளுடைய குழந்தை என்பதோ கூட எனக்கு பிரச்சினை இல்லை ஆதித்தன், அவ என்னோட வாழ சம்மதிக்கவேணும், அவள் ஒரு அழகான தேவதை,, அவளை என்ர உள்ளங்கையில தாங்கி இந்த உலகத்தை ரசிக்கவைக்கவேணும், அவளுக்காக, அவளுடைய சந்தோசங்களுக்காக நான் என்ன வேணுமெண்டாலும் செய்யத்தயார், என்ர உயிருக்குள் வைச்சு அவளையும் குழந்தையையும் நான் பாத்துக்கொள்ளுவன், அவ வெற்றிமாறனுக்கு மனைவியானா போதும்....”.சந்தோச மிகுதியிலும், தன் உணர்வுகளைச் சொல்ல ஒரு நல்ல நட்பு கிடைத்துவிட்ட நிம்மதியிலும் வார்த்தைகளைக் கொட்டினான் வெற்றி.

“கவலைப்படாதீங்க வெற்றி, எல்லாம் நல்லதாவே நடக்கும்,” என்ற ஆதித்தனை சினேகமாய் பார்தபடி இறுக்கமாய் அணைத்துக் கொண்டான் வெற்றிமாறன்.

அதன் பின்னர் அதிக நேரம் அங்கே இருக்கவில்லை, அவனுக்கு உடனே கனிமொழியைப் பார்க்கவேணும் போலத் தோன்றியதால், ஆதித்தனிடம் சொல்லிக்கொண்டு அவசரமாய் புறப்பட்டான்.


தொடரும்

கோபிகை

ஆசிரியர்பீடம் 
தமிழருள் இணையத்தளம்

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.