மெல்லப் பேசு ....மின்னல் மலரே.... பாகம் 17!!

காதலே என் காதலே
நீ சொல்லும் சொல்லைவிட
சொல்லாத உன் நேசம் 
புல்லரிக்க வைக்குதடி.

வழியெங்கும் வண்ணக்கனவுகள் அவனுக்குள். உள்ளத்தை உறுத்திக்கொண்டிருந்த சிறு துயர் ஆதித்தனின் வார்த்தையில் காணாமல் போயிருந்தது.

‘கனிக்கு திருமணம் ஆகவில்லை, அவள் இன்னொருத்தனுக்குச் சொந்தமானவள் என்ற உறுத்தல் இனித் தேவையில்லை‘

சட்டென்று வெற்றிக்குள் பொறி தட்டியது, ‘அந்தக் கிளினிக் கொப்பியில் தகப்பனின் பெயர் என்ன போட்டிருக்கும்? அடக்கடவுளே காலையில அதைப் பாத்திருந்தா பெரிய ஒரு உண்மை தெரிஞ்சிருக்குமே, உடனே அந்த உண்மையைத் தெரிந்துகொள்ளவேணும் எனத் தோன்றியது. கொப்பி அவரிடம் கொடுத்தாயிற்றே. யோசனையோடு வந்தவன்,  வழியில் குடும்பநல உத்தியோகத்தர் அலுவலகம் திறந்திருந்ததைக் கண்டான்.
காரை வீதியில் கரையோரமாக நிறுத்தினான். உள்ளே, காலையில் வீட்டிற்கு வந்த உத்தியோகத்தர் மட்டும் இருந்தார். வாசலில் நின்று “மிஸ்...” என்றான்.

அவனை நன்றாகப் பார்த்தவர், ஓ-----வெற்றிமாறன் ......உள்ள வாங்கோ” .என்றார்.

உள்ளே சென்று கதிரையில் அமர்ந்துகொண்டான். சங்கடமாக இருந்தது அவனுக்கு, அவள் மறைத்துவிட்ட ஒரு இரகசியத்தை அவன் கேட்பது சரியா, அவர் தப்பாக நினைத்துவிடுவாரோ‘ என்ற குழப்பம் அவனுக்குள். 

ஆனாலும் இது அவன் அறிந்தே தீரவேண்டிய ஒரு விடயம், அவனுடைய வாழ்க்கை, கனியின் வாழ்க்கை, அனந்துவின் வாழ்க்கை என எல்லாம் இதில் அடங்கியிருக்கிறதே, என்ற எண்ணம் வந்ததும் கேட்டுவிடுவது எனத் தீர்மானித்தான்.

எப்படி ஆரம்பிப்பது எனத்தெரியாது சற்றுநேரம் மௌனமாக இருந்தவன், “உங்களிட்ட இருந்து எனக்கு ஒரு தகவல் வேணும்”  என்றான்.
“என்னட்ட இருந்தா, சொல்லுங்கோ, என்ன தகவல், அனந்திதனின் ஆரோக்கியம் பற்றியா?” என்றார்.

“இல்ல மிஸ், இது வேற விசயம், அனந்திதனின் அப்பா பற்றி, அதாவது கனி அவனுடைய அப்பாவாக யாருடைய பெயரைப் பதிவு செய்திருக்கிறா?”
அவனை ஆழமாகப் பார்த்தவர், “இதெல்லாம் எதுக்கு கேக்கிறீங்க எண்டு தெரிஞ்சுகொள்ளலாமா வெற்றிமாறன்?” என்றார்.
அவளைக் காதலிப்பதையும் அவளோடான வாழ்க்கை பற்றியும் அவளது விலகல் பற்றியும் சொல்லிமுடித்தான் வெற்றி.

மெல்லிய புன்னகை ஒன்றை உதிர்த்தவா், “வெற்றி இது ஒரு தொழில் முறையான இரகசியம், அதை நான் சொல்லக்கூடாதுதான், ஆனாலும் கனிமொழி ரொம்ப நல்ல பெண், அவளுடைய இனிமையும் மென்மையும், பேச்சும் செயலும் எனக்கு ரொம்பவே பிடிக்கும். அவளை என் தங்கச்சியா நினைக்கிறன், அவளுக்கு ஒரு நல்லது நடக்கப்போகிறது எண்டதுக்காக இந்த உண்மையைச் சொல்வதில் தப்பில்லை என நினைக்கிறேன்,” என்றவா், பேச்சை தாமதித்தார்.
வெற்றிக்குள் பரபரப்பு, உடம்பில் ஏதேதோ செயற்பாடுகள் நடப்பதுபோல இருந்தது, ஆதித்தன் சொன்னது சரிதான், கனிக்கு ஏற்கனவே திருமணமாகவில்லை போல, ஏக்கமாய், அவரைப் பார்த்தான்.

“அனந்திதன், அவ சட்டப்படி தத்து எடுத்த குழந்தை, அதற்கான சகல ஆதாரங்களையும் என்னிடம் காட்டி இந்த உண்மையை யாரிடமும் சொல்லவேண்டாம் எனக்கேட்டுக்கொண்டா, தனக்குத்  திருமணமானதாகவே இருக்கட்டும் என்றும் சொன்னா, நானும் அப்பிடியே விட்டிட்டன். இப்ப அவளுக்கு ஒரு வாழ்க்கை அமையும் போது ஒரு பெண்ணா, சக மனுஷியா நான் இதை மறைக்கிறது தப்பு, சில நியாயங்கள், சட்டதிட்டங்களுக்கு அப்பாற்பட்டது இல்லையா,” என்றார்.

வெற்றிக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. “நன்றி” என இருகரம் கூப்பி வணங்கிவிட்டுப் புறப்பட்டான்.
அவன் காதல் உண்மையானது, அது ரொம்ப புனிதமானது, அவனுடைய கனி அவனுடையவளே, அவ வேற யாருக்கும் சொந்தமில்லை, அவளுக்கும் என் மீது காதல் இருக்கிறது, அதைப்புரியவைக்கவேண்டும், தெரியாத மாதிரி, இல்லாத மாதிரி நடிக்கிறா,

இனிமேல் தான் இந்த வெற்றியின் ஆட்டம் ஆரம்பம், என புன்னகையோடு எண்ணினான். ‘தள்ளித்தள்ளியே போறியா, இனிமே நீ தள்ளிப் போகாதபடி நான் என்ன செய்யிறன் பார்‘தனக்குள் சொல்லிக்கொண்டவன்
தானே, அவளை வேண்டாம் எனச்சொல்லும் நிலை வரும் என்பது தெரியாமல் தன் பாட்டில் கணக்குப் போட்டுக்கொண்டு காரை வேகமாகச் செலுத்தினான். 

தொடரும்.....

கோபிகை!

தமிழருள் அசிரியர்பீடம்

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.