சூடு பிடிக்கிறது தென்னிலங்கை அரசியல்களம்!!

மீண்டுமொரு தலைமைத்துவ போட்டி உருவாக்கப்படுவதாக தென்னிலங்கை அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஐக்கிய தேசிய கட்சிக்குள் இம்முறை அந்தப் போட்டியை உருவாக்கி, அதன் மூலமாக சில அரசியல் காய்நகர்த்தல்களைச் செய்துகொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நேற்று முற்பகல் இலங்கை வந்திருந்த இந்தியப் பிரதமரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வரவேற்க ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவரும், அமைச்சருமான சஜித் பிரேமதாச செல்வார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.

சஜித் பிரேமதாச பிரதமர் மோடியை வரவேற்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே செல்லுமாறு பணித்ததாகவும் அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க இறுதி நேரத்தில் சென்று இந்தியப் பிரதமரை வரவேற்றிருந்தார்.

இதேவேளை, இந்தியப் பிரதமரின் வருகையின் போது, சஜித் பிரேமதாசவை அறிமுகப்படுத்தியோ அல்லது அவருடனான கலந்துரையாடலின் போது ரணில் விக்ரமசிங்க தன் பக்கத்தில் கூட அழைத்துச் செல்லவில்லை என்கின்றன ஐக்கிய தேசிய கட்சித் தகவல்கள்.

இந்நிலையில் கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்திற்கு சென்று தேவாலயத்தின் தற்போதைய நிலையினை கேட்டறிந்த பிரதமர் நரேந்திர மோடி, வழிபாட்டிலும் ஈடுபட்டார்.

இதன்போது, பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, இந்தியப் பிரதமருடனான சந்திப்பின்போது, சஜித் பிரேமதாசவை சுட்டிக்காட்டி, அறிமுகப்படுத்தி வைத்ததோடு, தேவாலயத்தின் திருத்தல் பணிகளில் பிரேமதாசவின் பங்களிப்பு தொடர்பில் இதன்போது பேராயர் குறிப்பிட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது, இந்தியப் பிரதமர் நரேந்திரி மோடி, சஜித் பிரேமதாசவின் தோள்களில் தட்டிக் கொடுத்து மகிழ்ச்சியாக பேசியிருந்தார்.

சஜித் பிரேமதாசவிற்கு முன்னுரிமை கொடுத்து, இந்தியப் பிரதமருக்கு அறிமுகப்படுத்தாமல் பிரதமர் ரணில் தவிர்த்திருந்த வேளையில் பேராயரின் இச்செயற்பாடு பெரிதும் பேசப்படும் ஒன்றாக மாறியிருக்கிறது.

இதேவேளை, நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடியான சூழலில் சஜித் மீது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அதிகளவான நம்பிக்கை இருப்பதாகவே தெரிகின்றது.

குறிப்பாக கடந்த ஆண்டு, பிரதமராக மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதி நியமிப்பதற்கு முன்னர் சஜித்திடம் பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரி கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. மைத்திரியின் இவ்வேண்டுகோளை சஜித் அப்போது நிராகரித்ததாகவும் தெரிகிறது.

ஆனால், இம்முறை தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்திருக்கும் ஜனாதிபதி மைத்திரி, சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தால் ஐக்கிய தேசிய கட்சிக்கான ஆதரவினை தான் வழங்குவதாக தெரிவித்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆக, சஜித் பிரேமதாசவை முன்னிலைப்படுத்தி அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதிகளவில் ஆதரவினைக் கொடுப்பதாகவும் நம்பகமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo


Powered by Blogger.