கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா!

ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற கோரத் தாக்குதலுக்கு இலக்காகிய இலங்கையிலுள்ள முக்கிய கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றான கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது.


கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில், இன்று முற்பகல் 10 மணிக்கு திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

கொச்சிக்கிடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் 185ஆவது ஆண்டு திருவிழா, இவ்வருடம் ஏப்ரல் 21 தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் முகமாக இடம்பெறவுள்ளது.

இதன்படி, இந்தத் தடவை திருவிழாவில் கொடியேற்றம், திருச்சொரூப பவனி ஆகியன இடம்பெறமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜாதி, இனம், மத வேறுபாடின்றி பல இலட்சக்கணக்கானோர் பங்குபற்றும் இந்தத் திருவிழா, இம்முறை தாக்குதலின் அதிர்ச்சியிலிருந்து முழுமையாக மீளாத மக்களின் மன வேதனைகளுக்கு நடுவே இடம்பெறவுள்ளது.

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குலுக்கு இலக்காகி, பல உயிர்களை காவு கொடுத்த தேவாலயங்களுள் கொழும்பு கொச்சிக்கடை தேவாலயமும் ஒன்றாகும்.

உயிர்த்த ஞாயிறன்று இறைவழிப்பாட்டில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது எதிர்பாரத நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதிகளின கொடூர தாக்குதல் காரணமாக கொச்சிக்கடை தேவாலயத்தில் மாத்திரம் 50இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர். பலர் படுகாயமடைந்த நிலையில் இன்றுவரை சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் பலர் உறவுகளைக் காணாது நிர்க்கதியாக வாழ்ந்து வருகின்றனர்.

தாக்குதல்கல் இடம்பெற்று ஏழு வாரங்கள் கடந்துவிட்டன. ஆனாலும் மக்களின் மனங்களிலுள்ள ரணங்கள் இதுவரையில் ஆறவில்லை. எனினும், அச்சத்திலிருந்து மீண்டுள்ள இலங்கை மக்கள், மீண்டும் நம்பிக்கையுடன் தேவாலயங்களுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர்.

அதற்கமைய தாக்குதலுக்குப்  பின்னர் புனரமைக்கப்பட்ட, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் நேற்று புதுப்பொலிவுடன் மீண்டும் திறக்கப்பட்டது.

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில், கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நேற்று மாலை விசேட ஆராதனைகள் இடம்பெற்றன.

ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், காயமடைந்தவர்கள் உள்ளிட்ட பலர் ஆராதனையில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.