காற்றில் கழன்று விழுந்த பஸ் கூரை!
பொள்ளாச்சி அருகே அரசுப் பேருந்தொன்றின் மேற்கூரை காற்றின் வேகத்தில் கழன்று விழுந்ததால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இன்று (ஜூன் 14) காலையில் கோயம்புத்தூர் மாவட்டம் வடக்கிபாளையத்தில் இருந்து பொள்ளாச்சிக்குச் சென்றது ஒரு அரசுப் பேருந்து. இதில் சுமார் 20க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. கொங்குநாட்டன்புதூர் பிரிவு வழியாக இந்த பேருந்து சென்றபோது பலத்த காற்று வீசியது. காற்றின் வேகத்தில் பேருந்தின் மேற்கூரை பெயர்ந்து கீழே விழுந்தது. இதனைக் கண்ட பயணிகள் பயத்தில் அலறினர்.
இதையடுத்து, ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். இந்த சம்பவத்தில் பயணிகளில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதன்பின்னர் மேற்கூரையைச் சரி செய்வதற்காக, அப்பேருந்து பொள்ளாச்சி பணிமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
காற்றின் வேகத்தில் அரசுப் பேருந்தின் மேற்கூரை கழன்று விழுந்த நிகழ்வு, தமிழக கிராமப்புறங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் அரசுப் பேருந்துகளின் நிலையை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது என்று அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை