கொரியா செல்லும் சூப்பர் டீலக்ஸ்!

ஜூன் மாதம் 27ஆம் தேதி முதல் ஜூலை 7ஆம் தேதி வரை கொரியாவில் உள்ள போய்ஷன் நகரில் புகழ்பெற்ற BIFAN எனப்படும் ‘போய்ஷன் சர்வதேச ஃபென்டாஸ்டிக் திரைப்படத் திருவிழா’ நடைபெற இருக்கிறது. இந்த விழாவில், தியாகராஜா குமாரராஜாவின் இயக்கத்தில் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படமும் திரையிடப்பட உள்ளது. விஜய் சேதுபதி முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் நடித்து வெளியான திரைப்படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இந்தப் படத்தில் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், ஃபகத் பாசில் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை இந்தத் திரைப்படம் பெற்றிருந்தாலும், தனித்துவமிக்க கதை, திரைக்கதை மற்றும் மாறுபட்ட உருவாக்கத்தின் காரணமாகப் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், போய்ஷன் சர்வதேச ஃபென்டாஸ்டிக் திரைப்படத் திருவிழாவில், ‘வேல்ட் ஃபென்டாஸ்டிக் புளூ’ என்ற பிரிவில் தேர்வு செய்யப்பட்டு சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் திரையிடப்பட இருக்கிறது. மேலும் மணிகர்ணிகா, கல்லி பாய், அந்தாதுன் போன்ற பிற மொழி இந்தியத் திரைப்படங்களும் இந்த விழாவில் திரையிடப்படுவதற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்துக்கு உலக அரங்கில் அங்கீகாரம் பெற்றுத் தந்த, இந்த செய்தி ரசிகர்களையும் படக் குழுவினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.