கமலிடம் ஆதரவு கோரிய பாக்கியராஜ் அணி!

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் வரும் ஜூன் 23ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி மீண்டும் போட்டியிடுகிறது. இவர்களை எதிர்த்து பாக்கியராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணி போட்டியிடுகிறது. பாக்கியராஜ் அணியினர் நேற்று (ஜூன் 13) சங்கத்தின் முன்னாள் தலைவரான விஜயகாந்தை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து ஆதரவு கோரினர். அவரைத் தொடர்ந்து கமல், ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட நடிகர்களிடமும் ஆதரவு கோரவுள்ளதாக அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தனர். இந்நிலையில், இன்று (ஜூன் 13) பாக்கியராஜ் அணியினர் நடிகர் கமலஹாசனை சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து ஆதரவு கோரினர். இந்த சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாக்கியராஜ், “அந்த அணி இந்த அணி என்பதை விட கட்டடம் கட்டுவதே தனது விருப்பம் என்று கமலஹாசன் கூறினார். தேர்தலை விட நடிகர் சங்க கட்டடத்தின் திறப்பு விழாவிற்கு தனக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்று அவர் கூறினார். எங்களது தேர்தல் அறிக்கையை அவரிடம் காண்பித்தோம். அதில் முதல் உறுதிமொழியே அவருக்கு பிடித்திருந்தது” என்று கூறினார். அவரைத் தொடர்ந்து பேசிய ஐசரி கணேஷ், “தேர்தல் அறிக்கையின் முழு நகலையும் வழங்குவோம். இப்போது ஐந்து முக்கிய உறுதிமொழிகளை மட்டும் கூறுகிறேன். எவ்வித நிதி திரட்டலும் இல்லாமல் ஆறுமாத காலத்திற்குள் சங்கக் கட்டடம் கட்டப்படும். டாக்டர் எம்ஜிஆர் டாக்டர் சிவாஜி ரேஷன் திட்டத்தின் கீழ் சங்கத்தின் மூத்த கலைஞர்களுக்கு உதவிடும் வகையில் ஐந்து கிலோ அரிசியும், ஒரு கிலோ பருப்பும் வழங்கப்படும். சங்க உறுப்பினர்கள் நலனுக்காக சங்கமே குடும்ப சேம நிதியை செலுத்தும். நடிகர் சங்கம் இதுவரை கடைப்பிடித்து வந்த டோக்கன் முறை முழுவதுமாக ரத்து செய்யப்படும். சங்கத்தின் மூத்த கலைஞர்கள் நலம்பெற சேலம், சென்னை, மதுரை ஆகிய மூன்று மாவட்டங்களில் முதியோர் இல்லத் திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்தார். இவர்களைத் தொடர்ந்து நாசர் தலைமையிலான பாண்டவர் அணியினரும் கமலஹாசனை சந்தித்து ஆதரவு கோரியுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.