ஷாங்காய் மாநாடு: பாகிஸ்தானை சாடிய மோடி!!

தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளைத் தனிமைப்படுத்த வேண்டும் என்று ஷாங்காய் மாநாட்டில் பிரதமர் மோடி பாகிஸ்தானை மறைமுகமாகச் சாடியுள்ளார், கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ் கெக் நகரில் இரு நாட்களாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உறுப்பு நாட்டு தலைவர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று பிரதமர் மோடி தனி விமானம் மூலம் பாகிஸ்தான் வழியாக அல்லாமல் ஓமன், ஈரான் வழியாக பிஷ் கெக் சென்றார். இந்த மாநாட்டின் போது சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த மோடி, ”எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார். மேலும் ஷாங்காய் மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் கைக்குலுக்குவதையும் மோடி தவிர்த்திருக்கிறார். மோடி அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து மூன்று இருக்கை தள்ளி இம்ரான் கான் அமர்ந்திருந்த போதும் அவரை சந்தித்து கை குலுக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இன்று (ஜூன் 14), மாநாட்டில் பேசிய மோடி, ”தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளைத் தனிமைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இளைஞர்கள் மத்தியில் தீவிரவாத சிந்தனைகள் பரவாமல் தடுக்க வேண்டும். தீவிரவாதத்தை ஒடுக்க அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். இலங்கை சென்றிருந்த போது தீவிரவாதத்தின் கோர முகத்தைப் பார்த்தேன். எனவே, தீவிரவாதத்துக்கு ஆதரவாக நிதி மற்றும் ஊக்கம் அளிக்கும் நாடுகளைத் தனிமைப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.