மெல்லப் பேசு ....மின்னல் மலரே.... பாகம் 21!!

சிற்பி ஒருவன் 
செதுக்கிவைத்த 
சந்தனச் சிலையே, 

மெல்ல என்னை முத்தமிடு!!


மெல்ல எழுந்து இரவு உணவைத் தயாரித்துவிட்டு பார்த்துக் கொண்டிருந்தாள் கனிமொழி, முதல் முதலாக மகனை வெற்றியுடன் வெளியே அனுப்பியிருக்கிறாள், ஒருவித பயம் மனதில் இருந்தது. இதுவரை எப்பவாவது அவள் அலுவலாக வெளியே செல்லும் போது கொண்டு சென்றிருக்கிறாளே தவிர குழந்தை வேறு யாருடனும் வெளியே சென்றதில்லை. ‘அழுகிறானோ, வெற்றிக்கு ஏதாவது கரைச்சல் கொடுக்கிறானோ‘ என அவளது மனம் அடித்துக் கொண்டது.

இப்போதெல்லாம் வெற்றியிடம் தான் அதிகமான நேரம் அனந்து இருக்கிறான், மகனின் மீது வெற்றிக்கு இருக்கும் நேசம் அற்புதமானதே, ஆனால் இது எப்போதும் அவனுக்கு கிடைக்காதே, அந்நேரத்தில் குழந்தை ஏங்கிவிடப்போகிறான் என நினைத்ததும் தொண்டையில் எதுவோ அடைத்தது அவளுக்கு.

‘அனந்துவை வெளியே கொண்டு செல்கிறேன்‘ என வெற்றி சொன்னதும் தான் மறுத்ததும் என அவர்களுக்குள் நடந்த உரையாடல் அவளுக்கு நினைவில் வந்தது.

தோட்டத்தில் இருந்து மகனோடு உள்ளே வந்த வெற்றி, அப்போதுதான் எழுந்து அமர்ந்திருந்த கனிமொழியிடம், “நானும் அனந்துவும் வெளிய போயிட்டு வர்றம்” என்றான்.

நிமிர்ந்து பார்த்தவள், ஆச்சரியமாய் பார்த்தாள், குளிக்கவைத்து, தனது துவாயில் துடைத்தபடியே வெற்று மேனியோடு மகனை வைத்திருந்த வெற்றியும் அப்போதுதான் குளித்திருக்கவேண்டும். தலையிலிருந்து ஈரம் சொட்ட சோட்ஸ், ரீசேட்டோடு நின்றவனைப் பார்க்க அவளுக்குள் பரவசம் படர்ந்தது. 

அவனையே வைத்தகண் வாங்காமல் பார்த்தவள், அவனது செருமலில் இ்யல்பிற்கு வந்தாள்.
“வெளியிலயா? எதுக்கு?” குரலை கடினமாக்கி அவசரமாய் கேட்டாள் கனிமொழி.

“சும்மாதான், வீட்லயே இருக்கிறம், தவிர இவனும் வேற எங்கையும் போனதில்லை, அதனால புதுசா திறந்த பூங்கா வரைக்கும் போயிட்டு வரலாமேன்னு தான்”
“இல்லை, அவனுக்கு வெளிய போய் பழக்கம் எல்லாம் கிடையாது, அழுவான், வேண்டாம்” என்றவளிடம்,
வெளிய அவனென்ன தனியாவா போவான், அவனோட அம்மாதானே கூட்டிப் போயிருக்கணும்,  அவங்களுக்கு இந்த வீடு, அந்த தோட்டம் ரெண்டும் தான் உலகம் எண்டா, பாவம் இவன் என்ன செய்வான்.”
‘என்ன என்னைக் குறை சொல்கிறானா,‘ என நினைத்த கனிமொழி, “அது....அது ...வந்து எனக்கு,”
 “நீங்கள் எங்கயும் வரவேண்டாம், இப்ப நான் கூட்டிப்போகவும் மாட்டன், நான் இப்ப என்ர  மகனை மட்டும் தான்......”சொல்லிக் கொண்டிருந்தவன், விழி தெறித்துவிடுவது போல அவள் பார்த்த பார்வையில் நிதானித்தான்.

‘ஓ-----மகன் என்றுவிட்டேனா... .... ‘ வேண்டுமென்றே....உதட்டைக் குவித்துப் புன்னகைத்தவன், “எனக்கு இப்ப ரைம் இல்ல, நேரமாகுது. இவனோட உடுப்பைத் தந்தால், நானே இவரை றெடிப்பண்ணி கூட்டிப்போய்விடுவேன்” என்றான்.
அவளும் எதுவும் பேசாமல் மகனின் உடுப்பு இருந்த சிறிய பையை எடுத்துக் கொடுத்தாள். தனது ஆடைக்கேற்ற நிறத்திலயே இருந்த ஒரு உடையை எடுத்தவன், நிமிர்ந்தான்.

“தலையில ஏன் இவ்வளவு ஈரம்?” அவள் எங்கோ பார்த்தபடிகேட்க,  “வெயில்தானே, அப்படியே தலை காயட்டும் என்று, விட்டிருக்கிறன்” என்றவனிடம், “அனந்துவை நான் றெடி பண்றன், நீங்கள் தலையைத் துடையுங்கோ, மண்டையில நீர் கோர்த்தால், தடிமன், பிறகு காய்ச்சல் எண்டு அவஸ்தைப்படவேணும்” என்றவளை வைத்த கண் வாங்காமல் பார்ப்பது இப்போது வெற்றியின் முறை ஆயிற்று. 

“பரவாயில்லை, துவாய்... இவனை.... துடைக்கிறன்,”  என்றான் வெற்றி. அவள் மெல்ல எழுந்து உள்ளே சென்று புதிதாக ஒரு துவாயைக் கொண்டுவந்து கொடுத்தாள். துவாயோடு சேர்த்து அவளது கரங்களையும் பற்றிக்கொண்ட வெற்றி, அதனை விடாமல் அழிச்சாட்டியம் செய்துகொண்டிருந்தான். 

இதென்ன இவர், வரவர ஒரு தினுசாகத்தான் நடக்கிறான், ஆளும் சிரிப்பும், பார்வையும் செயலும் சரியாவே இல்லை, என எண்ணியபடி, பொய்யாய் ஒரு கோபத்தை வரவழைத்தவள், “விடுங்கோ” என்றாள்.

“அப்பிடி எல்லாம் விடமுடியாது, நான் விடுறதெண்டால் இனிமே இப்பிடி கரிசனை காட்டற மாதிரி நடிக்கவேண்டாம்” என்றுவிட்டு அனந்திதனையும் துாக்கிக்கொண்டு சென்றுவிட்டான்.

கனிமொழிக்கு வருத்தமாக இருந்தது. அவன் மீதான அவளுடைய கரிசனையும் அக்கறையும் நடிப்பு என்கிறானே.....அது நடிப்பா......அவளது சிந்தனையைக் கலைப்பது போல காரின் ஒலி கேட்டது.

தொடரும்....

கோபிகோபிகை

ஆசிரியர்பீடம்
தமிழருள் இணையத்தளம். 

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.