கமிட்மெண்ட் என்னும் விலங்கு!

நமக்குள் தேடுவோம் 18 - ஆசிஃபா ஒரு புதிய நட்பு அல்லது டேட்டிங் அல்லது காதல் உருவாகிறது. அப்போது இயல்பாக என்ன செய்வோம்? ‘குட் மார்னிங்’ முதல் ‘குட் நைட்’ வரை இடைவிடாமல் தொடர்பில் இருப்போம். அதுவும் டிஜிட்டல் யுகத்தில், இன்ஸ்டா, வாட்ஸ் அப், ஸ்னாப்சேட் என்று பல வழிகளில் தொடர்பில் இருப்போம். அது உண்மையிலேயே மகிழ்ச்சியான காலம். நாம் பேசுவதைக் கேட்கிறார்கள் என்றோ நம்மிடம் பேசிக்கொண்டே இருக்கிறார்கள் என்றோ அதுவரை கிடைக்காத ஒரு அன்பு, ஒரு கவனிப்பு கிடைக்கிறது என்றோ நாம் சந்தோஷமாக அதை ஏற்றுக்கொள்வோம். இதை introductory phase என்று வைத்துக்கொள்வோம். நம்மைப் பற்றி நாம் சொல்லும் தகவல்களை அவரும், அவர் அதே மாதிரி சொல்லும் தகவல்களை நாமும் கேட்டு, நமக்கு வசதியாக இருக்கும் ஒரு கூட்டுக்குள் இருப்போம். பெரும்பாலும், இந்த உரையாடல்களில் நாம் comfort zoneஐ விட்டு வெளியில் வரவே மாட்டோம். எப்போதும் சிரித்துக்கொண்டும், நமக்கு வசதியான விஷயங்களை மட்டுமே பேசிக்கொண்டும் சுற்றுவோம். ஒரு கட்டத்தில், அடுத்த phaseஇற்குள் நுழைவோம். அப்போது அதுவரை வெளியில் தெரியாத நம்முடைய அடிப்படை குணங்கள் சில வெளிவரும். அதாவது, நாம் அதுவரை காட்டிக்கொள்ளாத கோபம், வருத்தம், ஏமாற்றம் என்று சில சிக்கலான உணர்வுகள் மேலே வரும். இந்தக் கட்டத்தில்தான் எல்லா உறவுகளும் ஆட்டம் காணும். நாம் இத்தனை நாட்கள் பார்த்த, பேசிய நபரிலிருந்து இவர் வேறுபட்டவராக இருக்கிறார் என்று இருவரில் ஒருவருக்கு அல்லது இருவருக்குமே தோன்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இங்குதான் சிக்கல் தொடங்குகிறது. அந்த நட்போ, காதலோ, ஏதோ ஒரு வகையில் அன்பாகவே இருந்திருக்கும். அந்த அன்பை நம்மால் அவ்வளவு எளிதாக விட்டுவிட முடியாது. ஆனால், அதே நேரத்தில், உறவில் மாற்றம் ஏற்படுவதாகத் தோன்றும். மாறுபட்ட அனுபவங்களும் உறுத்தல்களும் இருந்தாலும், எங்கே அந்த உறவு முறிந்துவிடுமோ என்று அந்த உறவை இறுக்கமாகப் பற்றிக்கொள்வார்கள். உரசல்களை, நெருடல்களை மீறி உறவைக் காப்பாற்றிக்கொள்ளப் போராடுவார்கள். சுருக்கமாகச் சொன்னால், கமிட்மெண்ட். நாம் பரவலாக உபயோகிக்கும் சொல். ஒரு கமிட்மெண்ட் வேண்டும் என்று கேட்போம். இருவருக்குமே உடன்பாடு இருந்தால் பிரச்சினை இல்லை. மாறாக, ஒருவருக்கு உடன்பாடு இல்லை என்றால், அது சற்றுக் குழப்பம்தான். கமிட்மெண்ட் வேண்டும் என்று கேட்பதே நமக்கும், நம் உறவுகளுக்கும் என்றுமே ஆபத்துத்தான். ஏன் சொல்கிறேன் என்றால், ஒரு உறவின் அடிப்படை, அன்பாக இருக்க வேண்டும்; கட்டாயமாக இருக்கக் கூடாது. இந்த கமிட்மெண்ட் என்பது சிலருக்குக் கட்டாயமாக மாறிவிடுகிறது. உறவுகளில் மட்டுமல்ல வாழ்க்கையின் பிற பகுதிகளிலும்கூட. பொதுவாக இது நல்ல விஷயம்தான். ஒரு வேலையைச் செய்து முடிப்பதற்கு, குறிப்பிட்ட குறிக்கோளை அடைவதற்கும், கமிட்மெண்ட் மிகவும் முக்கியம். ஆனால், சில சூழல்களில் இதே கமிட்மெண்ட் நமக்கு எதிரியாக வந்து நிற்கும். பெரும்பாலும் இதைச் சில கடைகளில் காணலாம். நமக்கென்று ஒரு பொருளை எடுத்து வைக்கச் சொல்லியிருப்போம். பிறகு அது வேண்டாம் என்று சொன்னால் நம்மைத் தவறாக நினைப்பார்கள் என்று, நமக்குத் தேவையே இல்லாத பொருளை வாங்கிவிட்டு போவோம். இதுதான் அனைத்து இடங்களிலும் நடக்கிறது. எந்த ஒரு விஷயமும், அது உறவாகட்டும் வேலையாகட்டும் பொருளாகட்டும், நமக்கு அதன் அவசியம் என்ன என்பதுதான் முதல் கேள்வியாக இருக்க வேண்டும். ‘சொல்லிவிட்டோம். செய்யவில்லை என்றால் மானம் போய்விடும்’ என்பது காரணமாக இருக்குமாயின், வாழ்க்கை கடினமானதாகிவிடும். கமிட்மெண்ட் விஷயத்தில் அதிகம் பாதிக்கப்படுவது உறவுகள்தான். சிலருக்குச் சில உளவியல் சிக்கல்கள் காரணமாகவோ, முன்னனுபவங்கள் காரணமாகவோ, கமிட்மெண்ட் வேண்டும் என்று கட்டாயப்படுத்துவார்கள். இதை நேரடியாக கேட்பதைவிட, மறைமுகமாகக் கேட்பார்கள். ‘எனக்குக் கடைசி வரைக்கும் நண்பனாக இருப்பியா?’, ‘என்ன விட்டுட்டு போய்விட மாட்டியே?’, ‘நீ இல்லாம ஒரு நிமிஷம்கூட இருக்க முடியாது’ என்றெல்லாம் இந்தக் கட்டாயம் பல விதங்களில் வெளிப்படும். நாம் அப்படி கமிட்மெண்ட் வேண்டும் என்று கேட்பவராக இருந்தால், அதைக் கையாள்வதற்கு ஒரு சின்ன விஷயம் தெரிந்தால் போதும். எப்போது நாம் ஒரு நபரை, ஒரு பொருளை, ஒரு சூழலை ‘என்ன நடந்தாலும் விட்டுவிடக் கூடாது; அது நமக்கே பிடிக்கவில்லை என்றாலும்கூட’ என்று நினைக்கிறோமோ, அப்போது அந்த உறவை, அந்தப் பொருளை, அந்த சூழலை நாம் சிதைக்க ஆரம்பிக்கிறோம். இதை மனதில் வைத்துக்கொண்டு, முழுமனதுடன் கமிட்டடாக இருப்பதில் தவறே இல்லை. வேலையாகட்டும், இல்லை உறவாகட்டும். நம் செயலுக்குப் பின்னாலுள்ள motiveதான் அனைத்தையும் தீர்மானிக்கிறது.

No comments

Powered by Blogger.