திமுக கூட்டணி சிதறிவிடக் கூடாது: திருமாவளவன்!!

கூட்டணி தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் நல்ல முடிவை எடுக்க வேண்டுமென விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். தண்ணீர் பிரச்சினை தொடர்பாக திருச்சியில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை நாள் பல்லக்கு தூக்குவது? உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். நேருவின் இந்தப் பேச்சு சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என்று கராத்தே தியாகராஜன் பேசியதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே இவ்வாறு நேரு பேசினார் என்று கூறப்பட்டது. இதுதொடர்பாக விளக்கம் அளித்த நேரு, “உள்ளாட்சித் தேர்தலில் திமுக அதிகப்படியான இடங்களில் போட்டியிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவ்வாறு கூறினேன். காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக விலக வேண்டும் என நான் கூறவில்லை” என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சீர்காழியில் நேற்று (ஜூன் 22) செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “திமுக கூட்டணி சிதறிவிடக் கூடாது. நாடு, தமிழக மக்களின் நலனுக்காக இதே கூட்டணி சிதறாமல் உள்ளாட்சி, சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க வேண்டும். இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறேன்” என்றார். தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி கூறுகையில், “திமுகவுடனான எங்கள் கூட்டணி சுமுகமாக உள்ளது. வரும் ஜூலை 14ஆம் தேதி மதுரை அல்லது திருநெல்வேலியில் காங்கிரஸ் சார்பில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு நடைபெறவுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் எப்படிப் போட்டியிடுவது என்று மாநாட்டில் முடிவு செய்வோம்” என்று தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.