நோய் காரணமாக மரணித்த எம்.ஏ ஷகி!!

திருமலை புவி தந்த கவியலையே எம்.ஏ.ஷகி! நாம் தமிழால் இணைந்திருந்த நாட்கள் வலிதானது. அதில் மதவாதமும், இனவாதமும் இருக்கவில்லை. தமிழ்வாதம் மட்டுமே இருந்தது. வன்னியிலே மல்லாவி மண் வரைக்கும் வந்தவர் நீங்கள். கிழக்கிலே நாம் அழைக்கும் நிகழ்ச்சிகளிலெல்லாம் உங்களுக்கும் ஒதுக்குவோம் ஆசனம். துளியேனும் வஞ்சமிலா ஒலியை உங்கள் மொழியில் கேட்போம்.

திருமலை ஷகி அவர்களே! கடந்த ஆண்டு ஒரு பதிவிட்டீர்கள். நாம் தந்த திராட்சைப் பழங்களை சீர்பட கழுவி படமாக்கிப் பதிவிட்டு நன்றி சொன்னீர்கள். புரட்சி! எனது நோய்க்கு யாழ்ப்பாணத்து திராட்சை வேண்டும். அது கொஞ்சமாவது என் நோய்க்கு மருந்தாகும் என்றீர்கள். பேருந்து வழிவந்து, திராட்சைக் கனிகளை கொடுத்தபோது உங்களைக் கண்டதுதான் இறுதியாக சந்தித்த பொழுது. எங்கள் உடன்பிறப்பு போலாகி உரையாடல் செய்வீர்கள்.

நீண்ட பாடுபட்டு 'நிறங்கள் உதிர்க்கும் இரவு' கவிநூலை முடித்து வெளியீட்டினை விளையச் செய்தீர்கள். பரீட்சனும், நாமும் உங்கள் பெருமையை அடிக்கடி பேசிக்கொள்வோம்.
இன்று தாய், தந்தை இல்லாத தமிழ்ப்பிள்ளை ஒருத்தி சொன்னாள், அவள் பரீட்சைக்காக திருமலை வந்தபோது தாயாகி கவனித்தீர்களாம். உங்கள் வீட்டில்தான் உணவுண்டு தங்கினாளாம்.
நீங்கள் தமிழை நேசித்தீர்கள். தமிழரை ஆதரித்தீர்கள். நாம் இந்த இலக்கியச் சுற்றுக்குள் இருந்த நாட்கள் நஞ்சற்ற காய்கறிகள் போலவே ஆரோக்கியமானது.
'நிறங்கள் உதிர்க்கும் இரவு' உங்கள் பெயரை பகலாக்கிக் கொண்டேயிருக்கும்.
-புரட்சி-

No comments

Powered by Blogger.