வாழும் காலம் கொஞ்சமே..!

மனித ஆயுள் நீளமானது
ஆனாலும் அது வேகமானது - அடுத்தவரை
குறைகூறி நோவதை விடுத்து
நிறைபாடும் வாழ்வே வரமானது !


வாழ்த்துவதில் வறுமை என்றாலும்
தூற்றும் சிந்தையேனும் துலக்கிக்கொள்
தவறறிந்து  நீ உண்மையை நுகரும் நேரம் - வாழ்கைப்
பயணத்தின் இறுதிவழி உனை வந்தணைக்கும்!

ஆறடிக்குள்ளே அடங்கிடும் வாழ்க்கைக்கு
ஆணவத்தை ஊற்றி ஆத்திரத்தை ஏற்றி ஆரத்தி எடுத்து
பொறாமைக்கு பொட்டு வைக்கும் பொல்லாப்பு எதற்கு
பொறாமை உன்னில் புற்றெடுக்கமுன்னே
பொறுமை எனும் பொற்குணத்தை நீ பெற்றெடு !

தன்கலை  தான்வளர்த்து வானுயர
தன்னம்பிக்கையில் தானுயர்ந்து
துள்ளிக் குதிக்கும் துடிப்பலையை
தூற்றி நகைப்பது நல்லறிவுக்குறையே !

அனுபவத்தில் வெற்றிக்கொடி நாட்டியவராயினும்
அடுத்தவரிடத்தில் அடக்கத்தோடு அணுகினாலுன்
அறிவின் ஆழம் அகமகிழ்வைக் கூட்டும் - இல்லை
அதுவேயுன் சிற்றறிவின் பிரதிபலிப்பைக் காட்டும்  !

கொக்கரித்து கொக்கரித்து
குறை கூவுவதால் கொண்டவரை
துன்பம் நேரும் என்பதெல்லாம்
நீ காணும்  வெறும் பிம்பம்!

காழ்ப்புணர்ச்சி வாழ்க்கைக் கொல்லி
அரும்பிலேயே அடியோடு அறுத்தெறி - இல்லை
சிந்தனையில் சிக்கிப் பிணைந்து
சிற்றறிவும்  சீழ்பிடித்து  சிதைந்துவிடும் !!!

- ஜெயவவா அன்பு

No comments

Powered by Blogger.