ஆண் பெண் உறவும் - சிக்கலும்!!

" ஒரே அளவினதான அன்புடைய தலைவனும்  தலைவியும் தம் உள்ளத்தினால் ஒன்றுபட்டு இது இத்தகைய உணர்வினது என இன்னொருவருக்கு வெளிப்படுத்தவியலாது தம்முள் இரண்டறக்கலப்பதே காதல் " என சங்ககால நூல்கள் காதலை வியந்து போற்றின.

ஆக காதல் என்பது உள்ளத்தால் உணர்வால் சிந்தனையால் செயலால் என அனைத்திலும் மாறாத ஒருவனை / ஒருத்தியை இனங்கண்டு அன்புகொண்டு வாழுதல் என வரையறுக்கப்பட்டன.

இன்று இத்தகைய பின்னணியில் ஒரு ஆணும் பெண்ணும் பழகிக்கொள்ளும் வாய்ப்பு எல்லா சந்தர்ப்பங்களிலும் எல்லோருக்கும் கிடைக்கின்றதா என்றால் பளிச்சென்று கூறமுடியும்
" இல்லை ".

 இதைக்கண்டிப்பாகச்சிந்தித்தே ஆக வேண்டிய  நிலை எங்கும் தலைவிரித்துக்காணப்படுகின்றது. ஏனெனில் ஒரே மாதிரியான இயல்புடைய ஆண் பெண் இணைப்பு சாத்தியமாவது அரிது. அதே நேரம்
தத்தம் துறைகளில்  தத்தம் சிந்தனைகளில் இணைந்துபோகக்கூடிய நபரைக்காணும் போது ஆண் பெண் இருபாலாரும் ஓர் நட்புறவை இயல்பாக ஏற்படுத்திக்கொள்ளும் போது ஏற்படும் சமூகப்பிரச்சினை என்பது  சங்கிலித்தொடராக ஒன்றுடன் ஒன்று பிணைந்து ஏலவே இருக்கும் பிணைப்பொன்றை அடியோடு அறுத்துக்கொள்ளும் பச்சாபத்தில் நின்றுவிடுவது.

எமது  நாட்டைப்பொறுத்தவரை அதுவும் வடமாகாணத்து நிலவரங்கள் என்று வருகின்ற போது எங்கேனும் இல்லாதவாறு தமிழர் கலாசாரம் பண்பாடு என்ற போர்வையில் ஆண் - பெண் உறவை விசித்திரமாக உற்றுநோக்குகின்றது.

 பெற்றோர் தொடக்கம் ஆசிரியர் நண்பர் வரை  ஆண் - பெண் உறவு குறித்து கொண்டிருக்கும் பார்வை காதல் காமம் சார்ந்தே காணப்படுகின்றது.

 என்னுடைய நண்பி ஒருத்தி. நண்பன் ஒருவனுடன் யாழ்ப்பாண பொதுநூலக இளையோர் பகுதிக்குச்சென்று இருவரும் ஏதோவொரு கருத்தியல் குறித்து உரையாடிக்கொண்டிருந்தனர் என்றும் அந்த வழியாக வந்த மேற்பார்வையாளரோ ஊழியரோ ஒருவர் "இங்கேயும் வரத்தொடங்கிவிட்டீர்களா , இதுக்கெல்லாம் எத்தனையோ இடங்கள் திறந்தே இருக்கின்றது " என்றவாறு அருவருப்பாக பேசியதாக
ஒருமுறை எங்களிடம் சொல்லிச்சிரித்துக்கொண்டாள்.

 "எப்போது தான் இந்தச்சமுதாயம் இத்தகைய போலியான புனிதத்தைக்கட்டிக்காத்துக்கொள்ளப்போகின்றதோ .....♪♪"

உண்மையில் ஆணாக இருக்கட்டும்.பெண்ணாக இருக்கட்டும்.ஒரே கருத்தியல்களைக்கொண்ட ஒரேமாதிரியான குழுவொன்றைக்கண்டடைதல் என்பதே சவால்.

அதிலும் குறிப்பாக ஒன்றை நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
சாதாரணமாக இருவர் சந்தித்து தத்தம்
துறை ஆற்றல் திறமை பற்றிப்பகிரும் போது அதில் உண்டாகும் ஈடுபாடு ஊடாட்டம் அந்த நபர் மீதான அதீத அன்பை அதீத நாட்டத்தை வெளிப்படுத்திக்கொள்ளத்தான் செய்யும். இது இயல்பு.அந்த இயல்பையே சாக்குப்போக்காகக் கையாண்டு எதிர்பாலாரைக்கவரும் நோக்கில் செயற்படும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

ஆனால் என்னுடைய  பார்வையில் ஒரு தூய்மையான நட்பு எப்படி களங்கமாகின்றது என்பதுடன் காலப்போக்கில் அதனிடத்தில் கள்ளத்தனம் உண்டாகி அது எவ்வாறு பேசுபொருளாகின்றது என்றால்  அது எமது சமூகக்கட்டமைப்பின் விருத்தியற்ற நிலை என்றே கூறமுடியும்.

இயல்பாக ஆண் பெண் இருபாலாரிடமும் இயற்கை பணிக்கும் ஈர்ப்பு இருப்பினும் நாகரிகம் பண்பாடு என்கின்ற போர்வையிலும் பக்குவத்தின் அடிப்படையிலும் நன்றாகவே கடக்கமுடியும். ஆனாலும் ஆண் பெண் உறவை சிக்கலுக்குரியதாகவும் சர்ச்சைக்குரியதாகும் நோக்கும் பண்படுத்தப்படாத சமூகத்தின் பொதுப்புத்தியொன்றினால்  ஆண் ஒருவரை எதிர்கொள்ளும் போது ஏற்படும் உள்ளார்ந்த பயத்தை எப்போது  இல்லாதொழிப்பது  ♪♪♪

ஆண்கள் பாடசாலை / மகளிர் கல்லூரி ஆண்களுக்கானது / பெண்களுக்கானது /அவன் ஆண் / நீ பெண் இத்தகைய நிறுவனமயப்படுத்தப்பட்ட சமுதாயக்கண்ணோட்டத்தை வளர்த்தும் பேணியும் வரும் போது நாளொரு வண்ணம் புதுப்புது வகையில் ஆண் பெண் உறவும் கேள்விக்குட்படுத்தப்பட்டுக்கொண்டேதானிருக்கும்.

இதனால தான் பால்நிலை சமத்துவத்தைப்பேணி பாரபட்சமற்ற சமூகக்கட்டமைப்பை உருவாக்கும்படி போராடவேண்டியிருக்கின்றது . இ்ல்லையெனில்  அநாமதேயமான பேசுபொருள் நிலைத்துநிற்கவேண்டியது தான் .

சுரேக்கா பிறகும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.