இன்று காலம் கடந்தும் பேச்சுவார்த்தை குழு நியமனம் என்பதெல்லாம் காலத்தை இழுத்தடிக்கும்!!

இரத்தின தேரரும், ஞானசாரரும் கல்முனை விவகாரத்தில்  தலையிட்டு விட்டார்கள் என இன்று ஒப்பாரி வைப்பவர்கள், இந்த   பிரச்சினையை விட்டுக்கொடுப்புடன் சுமூகமாக பேசி தீர்க்க எப்போதோ முன்வந்திருக்க வேண்டும்.

இன்று காலம் கடந்து விட்டது. . பேச்சுவார்த்தை குழு நியமனம் என்பதெல்லாம் காலத்தை இழுத்தடிக்கும் செயல்கள் என்பதை இன்று கிழக்கில் தமிழர்கள் புரிந்துக்கொண்டுள்ளனர்.

இந்த பிரச்சினையில் தமிழ் தரப்பு பக்க நியாயத்தை உணராமல், இந்நாட்டில் எத்தனையோ நிலத்தொடர்பற்ற பிரதேச செயலகங்கள் கண் முன் இருக்கும் போது, "நிலத்தொடர்பற்ற" என்ற உப்பு சப்பில்லாத காரணத்தை  சொல்லி  இழுத்தடிப்பவர்கள்தான் தேரர்களின்  உள்நுழைவுக்கு காரணகர்த்தாக்கள்.

கிழக்கு மாகாண சபையில்  பெரும்பான்மை தம்வசம் இருந்தும், சிறுபான்மை கட்சியான முஸ்லிம் காங்கிரசுக்கு முதலமைச்சர் பதவியை தாரை வார்த்து வழங்கிய தமிழர்களின்  நல்லெண்ணத்தை பற்றி நான் பலமுறை பல இடங்களில் பேசி விட்டேன்.

ஆனால் இது பற்றி முஸ்லிம் அரசியல்  தரப்பில் எவரும் மூச்சுக்கூட விடுவதில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பும், அன்று சிறுபான்மை முஸ்லிம் காங்கிரசுக்கு, கிழக்கில் முதலமைச்சர் பதவியை வழங்கிய போது முன் நிபந்தனையாக, இந்த கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை கேட்டு வாங்கியிருக்க  வேண்டும். அதை செய்ய கூட்டமைப்பு தவறிவிட்டது.

இந்நிலையில், தமிழர்களின் பொறுமையும், நல்லெண்ணமும் இன்று கிழக்கில்
முடிவிற்கு வந்து விட்டதை உணர்கிறேன்.

No comments

Powered by Blogger.