உலகக் கோப்பை: வாய்ப்பைத் தக்கவைத்த பாகிஸ்தான்!

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் நான்காம் இடத்துக்கு முன்னேறியுள்ளது பாகிஸ்தான். லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற்றுவரும் நிலையில் நேற்று (ஜூன் 29) பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான சஹீன் அஃப்ரிடி மற்றும் வாஹப் ரியாஸின் அனல் பறக்கும் பந்துவீச்சில் ஆஃப்கானிஸ்தான் அணி வீரர்கள் ரன் குவிக்கத் தடுமாறியதோடு, சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளையும் இழந்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக அச்கார் ஆஃப்கான் மற்றும் நஜிபுல்லா ஜட்ரான் தலா 42 ரன்கள் எடுத்தனர். ஆஃப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் மட்டுமே எடுத்தது. சஹீன் அஃப்ரிடி 4 விக்கெட்களும், வாஹப் ரியாஸ் மற்றும் இமாத் வாசிம் தலா 2 விக்கெட் எடுத்தனர். எளிய இலக்கை நோக்கிக் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரரான ஃபக்கர் ஜமான் ஆட்டத்தின் இரண்டாவது பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேற, இமாம் உல் ஹக்குடன் ஜோடி சேர்ந்த பாபர் அசாம் சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 72 ரன்கள் எடுத்தது. பாபர் அசாம் 45 ரன்களுக்கும், இமாம் உல் ஹக் 36 ரன்களுக்கும் ஆட்டமிழக்க பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இருப்பினும் கடைசி வரை போராடிய இமாத் வாசிம் கடைசி ஓவரின் நான்காவது பந்தில் பவுண்டரி அடித்து அணியை வெற்றிபெறச் செய்தார். 49 ரன்கள் எடுத்து அணியை வெற்றிபெறச் செய்த இமாத் வாசிம் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 9 புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணி நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

No comments

Powered by Blogger.