பிகார்: குழந்தைகள் பலி 100 ஆக உயர்வு!

பிகார் மாநிலத்தில், மூளைக்காய்ச்சல் நோய் காரணமாக உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. பிகார் மாநிலம், முஸாபர்பூர் மாவட்டத்தில் சில மாதங்களாக மூளைக்காய்ச்சல் நோய் பரவி வருகிறது. இம்மாத தொடக்கத்தில் மட்டும் 31 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்நிலையில் நேற்று பலியின் எண்ணிக்கை நூறைத் தொட்டது. இதனால் அம்மாநிலமே சோகத்தில் மூழ்கியுள்ளது. மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, முஸாபர்பூரிலுள்ள ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவமனையிலும் கெஜ்ரிவால் மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று (ஜூன் 16) ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனும், மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மங்கல் பாண்டேவும் பார்வையிட்டனர். மத்திய அமைச்சர் ஆய்விற்காக ஸ்ரீகிருஷ்ணா மருத்துவமனைக்கு சென்றிருந்த சமயத்தில், 3 குழந்தைகள் இறந்தனர். இது குறித்து கவலை தெரிவித்த மத்திய அமைச்சர் , “இதற்குரிய அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்படும்” என்றார். மேலும், “இந்த பிரச்சினைக் குறித்து அனைத்து அதிகாரிகளுடனும் அமைச்சர்களுடனும் பேசியுள்ளேன். இந்த நோயால் பாதிப்படைந்த குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிப்பதோடு, இந்த நோயினை தடுக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளிக்கிறேன்” என்றார் ஹர்ஷ் வர்தன். இதற்கிடையில் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மங்கல் பாண்டே, “பாட்னாவில் இருந்து மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்கள் அடங்கியக் குழு, முஸாபர்பூர் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படும்” என தெரிவித்தார் மூளைக்காய்ச்சலால் இறந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு தொகையை வழங்குவதாக அறிவித்துள்ளார் பிகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.