ரிச்சர்ட் மகாநாயக்க தேரர்களுக்கு தெளிவுபடுத்த நடவடிக்கை


முஸ்லிம் அரசியல் தலைவர்கள் கூட்டாக அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்துள்ளமை குறித்து மகாநாயக்க தேரர்களுக்கு தெளிவுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கடந்த திங்கட்கிழமை இராஜினாமாக் கடிதத்தை, அறிக்கை ஒன்றின் ஊடாக கூட்டாகவே கையளித்தோம். எனினும், அரசியலமைப்பின் பிரகாரம் தனித்தனியாகவே இராஜினாமாக் கடிதங்கள் கையளிக்கப்படவேண்டும் என அவர் கூறினார். இதற்கிடையில் நோன்பு பெருநாள் காரணமாக எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சொந்த ஊரை நோக்கி புறப்பட்டுவிட்டனர். இதன்காரணமாகவே இராஜினாமாக் கடிதத்தை கையளிப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டது. எது எப்படியிருந்த போதிலும் கடந்த திங்கட்கிழமை முதல் நாம் அனைத்துப் பதவிகளிலிருந்தும் விலகிவிட்டோம் என்பதை அறியத்தருகின்றேன். அதேவேளை, நான்கு பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களும் நேற்றிரவு விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளனர். மகாநாயக்க தேரர்களின் கருத்துகளை நாம் மதிக்கின்றோம். அறிவிப்பொன்றை விடுத்ததற்காக அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். எமது குழு ஒன்று விரைவில் மகாநாயக்க தேரர்களை நேரில் சந்தித்து, உண்மையான நிலைவரம் என்னவென்பது குறித்து அவர்களுக்கு விளக்கமளிக்கும்.’ என குறிப்பிட்டுள்ளார்.
Powered by Blogger.