பாஜக தங்கத்தை இயக்குகிறதா?

பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் வியூகத்தின்படியே தங்க தமிழ்ச்செல்வன் செயல்பட்டுவருவதாக நமது எம்.ஜி.ஆர் இதழில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கும் தங்க தமிழ்ச்செல்வனுக்கும் இடையே மோதல் முற்றிய நிலையில், அமமுகவில் இனி தொடர்ந்து பயணிக்க இயலாது என்று தெரிவித்து அக்கட்சியிலிருந்து விலகிவிட்டார் தங்க தமிழ்ச்செல்வன். மேலும், தினகரன் மீது அடுக்கடுக்கான விமர்சனங்களையும் முன்வைத்து வருகிறார். அவர் விரைவில் அதிமுகவில் இனையலாம் என்று கூறப்படுகிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பு தங்க தமிழ்ச்செல்வன் தொடர்பாக பேட்டியளித்திருந்த தினகரன், அவரை யாரோ பின்னாலிருந்து இயக்குகிறார்கள் என்று பேட்டியளித்திருந்தார். இந்த நிலையில் தங்க தமிழ்ச்செல்வனை பாஜகதான் பின்னால் இருந்து இயக்குவதாக கடுமையாக விமர்சனம் செய்துள்ளது அமமுகவின் நாளேடான நமது எம்.ஜி.ஆர்.
இதுதொடர்பாக இன்று (ஜூன் 27) நமது எம்.ஜி.ஆர் இதழில், “தமிழகத்தில் பன்னீருக்கான கொஞ்ச செல்வாக்கையும் ஒடுக்க வேண்டும் என்று நினைக்கும் அமித் ஷா தற்போது தனது வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டார். பன்னீருக்கு எதிராக எடப்பாடியும் செயல்பட்டுவருவதால் பன்னீருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.ஆனால், அந்த நெருக்கடியை விட சொந்த மாவட்டத்தில் தங்க தமிழ்ச்செல்வனால் தனக்கும், தனது குடும்பத்திற்கும் அரசியல் நெருக்கடி மிகவும் பெரிது என்று தனது உதவியாளர்களிடம் பன்னீர் புலம்பி வருவது தெரிந்ததே.
தனது மகனுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று மல்லுக்கட்டிய பன்னீரை வீழ்த்த அமித் ஷா திட்டமிட்டார். இதன் தொடர்ச்சியாக தங்க தமிழ்ச்செல்வனை அமமுகவிலிருந்து இழுத்து கொம்பு சீவி புதிய ஜல்லிக்கட்டை ஏற்படுத்தி எடப்பாடியின் அரசியலை வளர்க்க வேண்டும் என்று அமித் ஷா முடிவு செய்துள்ளதாக தெரிகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “பன்னீரை ஒடுக்க வேண்டும் என்று அமித் ஷாவும் எடப்பாடியும் குருமூர்த்தியும் முடிவு செய்துவிட்டார்கள். இதன் தொடர்ச்சியாக எடப்பாடியும் தங்க தமிழ்ச்செல்வனை பயன்படுத்தி பன்னீருக்கு அவரது சொந்த மாவட்டத்திலேயே ஆப்பு வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறார். இந்த வியூகங்களின் வெளிப்பாடுதான் தங்க தமிழ்ச்செல்வனின் திடீர் ஆவேசம் மற்றும் தரக்குறைவான பேச்சு ஆகும்” என்றும் அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான் யார்...நான் யார்... நீ யார் என்ற தலைப்பில் சோழா அமுதன் என்ற பெயரில் இக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.