'சோழர்' எனும் பெயர் இடம்பெறும் ஈழவிடுதலைப் போராட்டகால பாடல்கள் பற்றிய பார்வை!!

ஆழக்கடலெங்கும் சோழமகராஜன்
ஆட்சி புரிந்தானே அன்று: தமிழ்
ஈழக்கடலெங்கும் எங்கள் கரிகாலன்
ஏறி நடக்கிறான் இன்று.
காலை விடிந்ததென்று பாடு:சங்க
காலம் திரும்பியது ஆடு

இந்தப்பாடல் போர்க்காலத்தில் பிரபலமான பாடல். எஸ்.ஜி சாந்தன் பாடிய பாடலிது. சோழ மன்னர்களின் படைகளுக்கு ஒப்பாக புலிகளின் படை ஒப்பிடப்பட்டு எழுதப்பட்ட பாடலிது. இப்பாடலை கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் எழுதியிருந்தார்.

இக்காலத்தில் இராஜராஜ சோழன் தொடர்பாக சர்ச்சை நிலவுவதைக் காண்கிறோம். இராஜராஜ சோழனை தமிழர்க்கு தீங்கிழைத்தவனாக சிறு அணியும், அவர் தமிழர்களின் அடையாளம் என பெரு அணியும் வாதிடுகின்றன. புலிகளைப் பொறுத்தமட்டில் சோழர்களை தமிழர்களின் முன்னோடியாகவே கொண்டனர். அதிலும் அவர்கள் கரிகாட்(கரிகாலன்) சோழனையே பெயர் குறித்து பாடல்களில் வைத்தனர். கிறிஸ்துவுக்குப் பின் இரண்டாம் நூற்றாண்டு காலத்திலே காவிரிப்பூம்பட்டணத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டவனே இந்த கரிகாலச்சோழன். தனக்கு ஒப்புவமையாக யாருமில்லை எனும் மிடுக்குடையவன். இதோ இந்த ஈழப்பாடலிலும் சோழ வரலாறு பற்றி உள்ளது.

சோழ வரலாறு மீண்டும்
ஈழத்திலே பிறந்தது
ஆழக்கடல் மீதிலெங்கும்
வேங்கைக்கொடி பறந்தது
நீலக்கடற் புலிகளினால்
வீரமிங்கு எழுந்தது
ஈழமெங்கும் தமிழர் நெஞ்சம்
வீறுகொண்டு நிமிர்ந்தது.

முல்லைக்கடல் மீதில்
சொல்லும் ஒரு பாடல்
செல்லப் பிள்ளையோடு
சென்றவரைப் பாடு.

செங்கதிர் பாடிய பாடலிது. முல்லைத்தீவுக் கடற்பரப்பில் ரணவிரு கப்பல் மீதான கரும்புலித் தாக்குதலில் மரணித்த மேஜர் செல்லப்பிள்ளை, மேஜர் பதுமன், மேஜர்சுடரொளி(பெண்), மேஜர் கண்ணபிரான், மேஜர் பார்த்தீபன்  ஆகியோரின் நினைவு சுமந்த பாடலது. தமிழீழ இசைக்குழுவினர் இதற்கு இசையமைத்திருந்தனர்.

தமிழர்களின் ஈழத்துப் போராட்டத்தை சோழர் பரம்பரை என ஒப்பிட்டும் போராட்ட கால பாடல்கள் வெளிவந்தன. சோழர்கள் சூரிய வம்சத்தினைச் சேர்ந்தவர்கள். பிரபாகரன் என்பது சூரியனின் கரம் என பொருளாகிறது. 'கடலிலே காவியம் படைப்போம்' இசைநாடாவில் எஸ்.ஜி.சாந்தன் பாடிய 'நீலக்கடலே பாடும் அலையே, நெஞ்சில் சுமந்த என் தாயின் மடியே' பாடலில் சோழர்கள் இவ்விதம் இடம்பெறுகினர். இது முதற்சரணம்.



ஆழக்கடல் சோழப்பரம்பரை
ஆளும் நிலையாச்சு
அந்நியரின் கோழைப்படையெலாம்
ஓடும் படியாச்சு
நாளை தமிழ் ஈழம் வருமென
நம்பிக்கை வந்தாச்சு
நம்ம கடற்புலிகள்
செல்லும் தேதி குறிச்சாச்சு

ஆடுங்களே இங்கு பாடுங்களே
அச்சமில்லை என்று கூறுங்களே

சோழ மன்னன் கடாரத்தை வெற்றி கொண்டான் என்பது வரலாறு. மலேசியப் பகுதியாகிய இது இன்றுமுள்ளது. சோழ மன்னன் கடற்படையைக் கொண்டுதான் கடாரத்தை வென்றான் என வரலாறு பதிப்பிக்கிறது. அச்சம்பவமும், சோழரும் ஈழப்போராட்ட படைக்கு இவ்விதமாக ஒப்பாக்கப்படுகின்றனர்.

கடலதை நாங்கள் வெல்லுவோம்:இனி
கடற்புலி நாங்கள் ஆளுவோம்

எனும் பாடலின் தொடர் வரிகள் இப்படி அமைகின்றன.

கடாரம் வென்ற சோழனவன்
கப்பலில் சென்றிடும் கடலிதுதான்
பாரதம் வென்ற புலிப்படையின்
படகது சென்றிடும் கடலிதுதான்

இந்த வரிகளெல்லாம் சோழ சாம்ராஜ்யத்தை ஈழப்போராட்டப் படைகளோடு சம்மந்தமாக்கியவை. சோழனை புலிகள் கறைகொண்டு காணவில்லை.

இலங்கையின் தமிழர் பகுதிகளை சோழர் நிலமாகவும், அதனை மீட்கும் போராட்டமே இதுவென்றும் சொல்லும் வரிகளும் ஈழப்பாடல்களில் உள்ளன. இசைவாணர் கண்ணன் இசையமைத்த 'கடலினில் காவியம் படைப்போம், வரும் தடைகளை எதிர்த்துமே முடிப்போம்' பாடலில் முதலாவது சரணத்திலே இதனைக் காணலாம்.

ஆழக்கடல்மடி மீது தவழ்ந்திடும்
நீலப்புலிகளடா:களம்
ஆடும் பொழுதினில்
வீரம் விளைந்திடும்
சூரப் புலிகளடா
சோழப்பெருநிலம் மீள பகையுடன்
மோதும் புலிகளடா:தமிழ்
ஈழக்கடலினில் ஏறும் கடற்புலி
என்றும் வெல்லுமடா

இப்படியாக அவ்வரிகள் அமைந்திருக்கின்றன.

தொடக்கத்திலே எழுதியது போல புலிகள் தமது எழுத்துக்களில் சோழர்கள் குறித்து எழுதியபோதும், அவர்கள் கரிகாலச் சோழனையே முதன்மையாக்கி காட்டினர்.  அதற்கு ஒரு சான்றாக இப்பாடலைக் குறிப்பிடலாம். இப்பாடல் இளங்கோவன் செல்லப்பா இசையமைத்த பாடல். கோவை கமலா பாடிய பாடலிது.

நேற்று ஒரு கரிகாலன்
எங்கள் அண்ணன்
இன்று ஒரு கரிகாலன்
எங்கள் மன்னன்
இருவருக்கும் ஒரேகுடி தமிழ்க்குடி
இருவருக்கும் ஒரேகொடி புலிக்கொடி

இப்பாடலில் கரிகாட் சோழனுக்கு ஒப்பாகவே புலிகளின் தலைவர் ஒப்பிடப்பட்டார். அப்பாடலில்  மேலும்,

மன்னன் கரிகாலன் அன்னை
தமிழகம் காத்தான்
அண்ணன் கரிகாலன் தமிழ்
ஈழம் காத்தான்

எனும் வரிகளும் உள.

இப்படியாக ஈழவிடுதலைப் போராட்ட காலத்துப் பாடல்களிலே சோழரை தமிழரின் முன்னோடியாகக் காண்பித்தும், அதில் கரிகாலச் சோழனை புலிகளின் தலைவருக்கு ஒப்பாக்கியும் பாடல்கள் வெளிவந்துள்ளன. சேரன், பாண்டியன் ஆகியோரின் பெயர்களிலே முக்கியமான வாணிபங்கள் போர்க்காலத்திலே இருந்தன. ஆயினும் சோழர்களின் பெயர்கள் இடம்பெற்ற அளவிற்கு சேர, பாண்டியர்களின் பெயர்கள் ஈழப்போராட்ட பாடல்களில் இடம்பெறவில்லை.

புரட்சி
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.