போலீஸாரிடம் ரகளை செய்த தொழிலதிபர் நவீனுக்கு நேர்ந்த சோகம்!

சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தின் அருகே குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தொழிலதிபர் நவீன், போலீஸாரிடம் ரகளையில் ஈடுபட்டார். தற்போது அவர், கைமுறிந்து கட்டுப்போட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

 தொழிலதிபர் நவீனின் கார் விபத்துக்குள்ளானது
நீலாங்கரை காவல் நிலையம் அருகே குடிபோதையில் சொகுசு காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தினார் மதுரை மாவட்டம், வெள்ளங்குடி கிராமம், டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்த நவீன். நள்ளிரவில் நடந்த இந்த விபத்தில் காரிலிருந்த பலூன் ஓப்பனானதால் நவீன், உயிர்தப்பினார். அவரை மீட்ட போலீஸாருடன் நடுரோட்டில் நவீன் ரகளையில் ஈடுபட்டார். போலீஸாரைப் பார்த்து மச்சி, மச்சான் என பேசியதோடு தகாத வார்த்தைகளாலும் திட்டினார். அதையெல்லாம் பொறுத்துக்கொண்ட போலீஸார், நவீனை நீலாங்கரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

விசாரணையில் நவீன், திருவான்மியூர், ராஜா சீனிவாசன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருந்துவருவதும் வெளிநாடுகளுக்கு பழங்களை ஏற்றுமதி செய்வதும் தெரியவந்தது. தொழிலதிபரான நவீன் மீது நீலாங்கரை போலீஸாரும் விபத்தை ஏற்படுத்தியதற்காக அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாரும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தற்போது தொழிலதிபர், கையில் கட்டுக்களுடன் இருக்கும் புகைப்படம் வெளியானது.
இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது ``மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட நவீனைப் பிடிக்க முயன்றோம். அப்போது அவர் கீழே விழுந்ததில் அவரின் கை முறிந்தது. இதனால் அவருக்கு முதலுதவி மற்றும் கைக்கு கட்டுப்போட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளோம்" என்றனர்.  நவீன் மதுபோதையில் போலீஸாரிடம் தகராறில் ஈடுபடும் வீடியோ வெளியாகி வைரலானது. அந்த வீடியோவில் போலீஸாரை நவீன் தாக்கும் காட்சி பதிவாகியுள்ளது. தற்போது நவீனின் கை முறிந்ததின் பின்னணி குறித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
 தொழிலதிபர் நவீன்
வியாசர்பாடி காவல் நிலையத்தில் பணியாற்றிய தலைமைக் காவலர் பவுன்ராஜ், ரவுடி வல்லரசுவைப் பிடிக்க முயன்றபோது தாக்கப்பட்டார். பவுன்ராஜ் தலையில் 28 தையல்கள் போடப்பட்டுள்ளன. ரவுடியால் போலீஸ்காரர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் காவல்துறையில் பரபரப்பாகப் பேசப்பட்டது. மாதவரத்தில் பதுங்கியிருந்த ரவுடி வல்லரசுவை போலீஸார் பிடிக்கச் சென்றபோது அவர் போலீஸாரை மீண்டும் தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றார். அப்போது போலீஸாருக்கும் ரவுடி வல்லரசுக்கும் நடந்த மோதலில் துப்பாக்கி குண்டுகளுக்கு வல்லரசு பலியானார். அதன்பிறகு ரோந்துப் பணியில் ஈடுபட்ட பாண்டிபஜார் காவலர் போதை கும்பலால் தாக்கப்பட்டார். தொடர்ந்து போலீஸார் தாக்கப்படுவதைத் தடுக்க போலீஸ் உயரதிகாரிகள் நடவடிக்கை எடுத்துவரும் நிலையில்தான் நவீனின் கை முறிந்துள்ளது.

நள்ளிரவில் போதையில் நவீன் செய்த அலப்பறைக் காட்சிகள், பார்ப்பவரை பதற வைத்தது. தற்போது கையில் கட்டுபோட்டப்படி பரிதாபமாக நவீன், போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். இந்தப் படம் குறித்து நெட்டிசன்கள் தங்களின் கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்துவருகின்றனர். இனி போலீஸ் மீது கை வைத்தால் முடிவு உங்கள் கையில்! என்ற கமென்ட்ஸ் வைரலாகிவருகிறது.
தொழிலதிபர் நவீன் கார் மோதி சேதமடைந்த ஆட்டோ

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``விபத்து தொடர்பாக அடையாறு போக்குவரத்து பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் விசாரணை நடத்தியபிறகு நீலாங்கரை காவல் நிலையத்தில் நவீன் ஒப்படைக்கப்பட்டார். நீலாங்கரை போலீஸாரை தகாத வார்த்தைகளால் திட்டியது தொடர்பாக நவீன் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளோம். நவீன் கைது செய்யப்பட்ட தகவல் தெரிந்ததும் சிலர் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போதை தெளிந்தபிறகு நவீனிடம் வீடியோவைக் காண்பித்தோம். அதை அவர் அதிர்ச்சியோடு பார்த்தார். அதன்பிறகு சம்பந்தப்பட்ட காவலர்களிடம் மன்னிப்பு கேட்டார். இருப்பினும் நவீன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளோம். அவரின் லைசென்ஸை ரத்து செய்யவும் பரிந்துரைக்கப்படும்" என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.