இன்னுமா உறக்கம்!!!

பத்து வருடங்களாய்
நெஞ்சக்கூட்டிலிருந்து
தொலைந்து போன
ஏதோ ஒன்றை தேடியலையும்
நிலையாய்
எமது இனத்தின் இதயம்
படபடத்துத் துடிக்கிறது!

தவறி வீழ்ந்ததா?
தானாய் வீழ்ததா?
எனும் மனநிலையில்
மனிதர்களின்
மனங்களுக்கிடையே
தினம்தோறும் திண்டாட்டமாய்
கனத்த இருளை கவ்விய
நாயாய் மனம்
குரைத்துக்கொண்டிருக்கிறது!

ஆழ்ந்த தூக்கத்தின்
அசதியில்
இருந்து விழிக்கா
விழிகளும்!
விழிமடல் திறந்தும்
செவிப்பறைகளை
இறுக்கி மூடியபடி
பலரும்!
மெல்ல வீசிக்கொண்டிருக்கும்
தென்றலின் சுகத்தில்
தூங்குகிறார்!

பூமியில் மையங்கொள்ளும்
பெரும் புயலின் ஆபத்தின்
வலியுணர்ந்தும்
மடை கட்ட மறந்து
இடைஇடையே வந்து போகும்
சிற்றின்பத்தில்
போர்வையை
இழுத்து மூடியபடி
நித்திரையில்
இருக்கிறார்!

புயலின்
கோரத்தாண்டவத்தினை
 நாம் உணராதவரா?
இல்லையே!
முற்றத்து மல்லிகையை
அடியோடு பிடுங்கி
வீசியதும்!
சுற்றத்து மரங்களை
மூர்கத்தனம் கொண்டு
பாறி வீழ்த்தியதையும்!
குருவிகளையும்
கிளிகளையும்
கிழித்துப்போட்ட
அழிவின் உச்சத்தை
விழிப்படலத்தில்
வீழ்த்தியவரல்லவா?

இத்தனை
கொடியநினைவுகளை
அடிநெஞ்சில் சுமந்த நாம்
இன்று ஏன்?
தொலைத்து விட்டு
தேடுகின்றோம்
என்றுதான்
புரியாத மொழியாக
நகர்கிறது காலம்!

✍தூயவன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.