யாழில் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞனுக்கு இழப்பீடு தாயார் நீதிமன்றில் மனு!

பருத்தித்துறை மணற்காடு பகுதியில் இளைஞர் ஒருவர், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டமை தொடர்பில் அவரது தாயாரால் 50 லட்சம் ரூபா இழப்பீடு கேட்டு பருத்தித்துறைமாவட்ட நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களான பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரிடமே இந்த இழப்பீட்டுத் தொகையை கொல்லப்பட்ட இளைஞனின் தாயார் கோரியுள்ளார்.

2017ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் திகதி பருத்தித்துறை மணற்காடு பகுதியில் மணல் ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்றின் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் துன்னாலை கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 25 வயதான யோகராசா தினேஷ் உயிரிழந்தார்.

துப்பாக்கிப் சூட்டுச் சம்பவம் தொடர்பில் உதவிப் பொலிஸ் பரிசோதகர் சிவராசா சஞ்ஜீவ் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் அபுதாலிப் மொகமட் முபாரக் ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்
வைக்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

சந்தேகநபர்களான பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவருக்கும் எதிராக குற்றவியல் விசாரணை வழக்கு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கொல்லப்பட்ட யோகராசா தினேஷின் தாயாரான யோகராசா செல்வம், தனது மகனின் சாவுக்குக் காரணமானவர்கள் என பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரையும் குறிப்பிட்டு அவர்களிடமிருந்து ரூபா 50 லட்சத்தை இழப்பீடாகப் பெற்றுத் தருமாறு கோரி பருத்தித்துறை
மாவட்ட நீதிமன்றில் சட்டத்தரணி வீரகத்திப்பிள்ளை கௌதமன் ஊடாக மனுத் தாக்கல் செய்துள்ளார்.

மனுவின் பிரதிவாதிகளாக துப்பாக்கிச் சூட்டை நடத்திய அபுதாலிப் மொகமட் முபாரக், முதலாவது பிரதிவாதியாகவும் துப்பாக்கிச் சூட்டை நடத்த உத்தரவிட்ட உதவிப் பொலிஸ் பரிசோதகர் சிவராசா சஞ்ஜீவ், இரண்டாவது பிரதிவாதியாகவும் பருத்தித்துறை பொலிஸ் நிலைய
பொறுப்பதிகாரி, மூன்றாவது பிரதிவாதியாகவும் பொலிஸ் மா அதிபர், நான்காவது பிரதிவாதியாகவும் சட்ட மா அதிபர், 5ஆவது பிரதிவாதியாகவும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

“யோகராசா தினேஷ் மீதான துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு எந்தவொரு சட்டரீதியான காரணமும் இல்லாமல் கண்மூடித்தனமாகவும் சட்டவிரோதமாகவும் மேற்கொள்ளப்பட்டது.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போது கொல்லப்பட்ட இளைஞனுக்கும் பாரவூர்தியில் பயணித்த ஏனையோருக்கும் உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடிய காயத்தை ஏற்படுத்தும் என்று தெரிந்திருந்தும் அதுபற்றி எந்தவொரு அக்கறையோ, கவனமோ இல்லாமல் வேண்டுமென்றும் விசமத்தனமாகவும் அது மேற்கொள்ளப்பட்டது. அதனால் எனது மகனின் உயிரிழப்புக்கு முதலாவது பிரதிவாதியும்
இரண்டாவது பிரதிவாதியும் பொறுப்பானவர்களாவர்” என்று மனுதார்ரர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

“யோகராசா தினேஷ், உயிரிழப்பு நிகழ்வதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் வெளிநாடு ஒன்றில் பணிபுரிந்துவிட்டு நாடு திரும்பியிருந்தார். அதன்பின் ஒரு தொழிலாளியாக தனது உடல் உழைப்பால் தாயாரின் வாழ்வாதாரத்துக்கு பொறுப்பாளியாகவிருந்தார்.

பல வருடங்களுக்கு முன் கணவரையிழந்த மனுதாரர், கொல்லப்பட்ட தினேஷின் உழைப்பிலேயே தங்கியிருந்தார். மகன் கொல்லப்பட்ட பின்னர் மன உலைச்சலுக்கும் மனத் துயருக்கும் உள்ளாகியுள்ள மனுதாரர் வாழ்வாதாரத்துக்கு வழியின்றி அனாதையாக்கப்பட்டுள்ளார்.

அதனால் முதலாவது மற்றும் இரண்டாவது பிரதிவாதிகளும் மனுதாரருக்கு 50 லட்சம் ரூபா இழப்பீட்டை வழங்க உத்தரவிடவேண்டும்” என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo   

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.