கிரண்பேடியை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்!

குடிநீர் பிரச்சினை குறித்து தமிழக அரசையும், மக்களையும் விமர்சனம் செய்த புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி, தமிழகத்தில் நிலவும் குடிநீர் பற்றாக்குறைக்கு மோசமான நிர்வாகம், ஊழல் அரசியல், அதிகாரிகளின் அலட்சியம் தான் காரணம். மக்களின் சுயநல எண்ணமும், கோழைத்தனமும் கூட காரணம் என்று தெரிவித்திருந்தார். இதற்குத் தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன.
கிரண்பேடியின் கருத்தை மேற்கோள் காட்டி, திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதைச் சபாநாயகர் அவை குறிப்பிலிருந்து நீக்கியதால் நேற்று திமுகவினர் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில் இன்று (ஜூலை 2) கிரண் பேடியை கண்டித்து அம்மாநில திமுகவினர் துணை நிலை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முதலில் அண்ணாசாலை அருகில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்துக்கு திமுக அமைப்பாளர் சிவா எம்எல்ஏ தலைமை தாங்கினார். ஊர்வலம் அண்ணாசாலை, நேரு வீதி, மி‌ஷன் வீதி வழியாக ஆளுநர் மாளிகையை நோக்கிச் சென்றனர்.பின்னர் தமிழக மக்களிடம் ஆளுநர் கிரண் பேடி 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் போராட்டம் தீவிரமடையும் என்று எச்சரித்துள்ளனர். மேலும் ஆளுநர் கிரண்பேடி மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும், மத்திய அரசு அவரைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் திமுகவினர் முழக்கங்களை எழுப்பினர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.