வெளிவாரி பட்டதாரிகள் மட்டக்களப்பில் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்ட வெளிவாரி பட்டதாரிகள் தமது தொழில் உரிமையினை வலிறுத்தி கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.


மட்டக்களப்பு காந்திபூங்காவிற்கு முன்பாக இன்று (சனிக்கிழமை) காலை இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அரசாங்கத்தினால் 16ஆயிரம் பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நியமனங்களில் வெளிவாரி பட்டதாரிகள் எவரும் உள்வாங்கப்படாததை கண்டித்தும் வெளிவாரி பட்டதாரிகளை உள்வாங்க கோரியுமே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் மற்றும் முற்போக்கு தமிழர் அமைப்பு என்பன இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்திருந்தன.

‘வேலைவாய்ப்பில் புறக்கணிக்கப்படும் வெளிவாரி பட்டதாரிகளுக்கு உடனடியாக நியமனம் வழங்கு’, ‘அரசே வெளிவாரி பட்டதாரிகளை புறக்கணிக்காதே’, ‘அரசே வெளிவாரி பட்டதாரிகளையும் கவனத்தில்கொள்’, ‘வெளிவாரி பட்டம் என்ன வீதியிலா பெறப்பட்டது’, ‘வெளிவாரி பட்டதாரிகளை வீதியில் இறக்காதே’, ‘எங்களையும் வேலைவாய்ப்பில் உள்வாங்கு’ போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளையும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

உள்வாரி பட்டதாரிகள்போன்று மிகவும் துன்பப்பட்டே தாமும் பட்டங்களை பூர்த்தி செய்துள்ளோமென்றும் தங்களை அரசாங்கம் புறக்கணித்துள்ளமையானது மிகவும் கவலைக்குரியது என்றும்  வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்தனர்.

கடந்த காலத்தில் வீதிகளில் இறங்கி அதிகமாக வெளிவாரி பட்டதாரிகளே போராடியபோதிலும் தற்போது தங்களை அரசாங்கம் புறக்கணித்துள்ளதாகவும் வெளிவாரி பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

வெளிவாரி பட்டமானது வேலைக்கு தகுதியில்லையென்று கூறினால், பல்கலைக்கழகங்களில் வெளிவாரி பட்டப்படிப்பினை நிறுத்தவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முற்போக்கு தமிழர் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன் உட்பட வேலையற்ற பட்டதாரிகள் சங்க உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். இதன்போது ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான மகஜர்களும் கையளிக்கப்பட்டன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.