ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 41 வது கூட்டத்தொடரில் தமிழர் இயக்கத்தினரின் செயற்பாடுகள்!!

இதன் அடிப்படையில் தாயகத்தில் இருந்து இக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்கு வருகை தரவிருந்த பாதிக்கப்பட்ட உறவுகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் பயண அனுமதியினை சுவிற்சர்லாந்து அரசு இம்முறை முற்றிலும் நிராகரித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். இருப்பினும் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் தமிழகம் மற்றும் புலம்பெயர் நாடுகளைச் சேர்ந்த தமிழ் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், பேராசிரியர்கள் இத்துறையில் ஆய்வினை மேற்கொள்ளும் மாணவர்கள் என 30 இற்கும் அதிகமானோர் இவ் 41 வது கூட்டத் தொடரில் கலந்து கொண்டு தமிழீழத்தில் இடம்பெற்ற இனவழிப்பிற்கு நீதிவேண்டியும் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கட்டமைப்புசார் இனவழிப்பிற்கு எதிராகவும் குரல் கொடுத்திருந்தனர்.
மேலும் தமிழர் இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பன்னாட்டு பிரதிநிதிகளுடனான சந்திப்புக்களில் எமது பிரதிநிதிகள் கலந்துகொண்டு தமிழர்களின் பிரச்சினைகள், அதற்கான நீதி தொடர்ந்தும் மறுக்கப்படுதல் தொடர்பாகவும் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டிருந்தனர்.
இம்முறை இடம்பெற்ற கூட்டத்தொடரின் சிறப்பம்சமாக ஐரோப்பா மற்றும் இந்தியா போன்ற நாடுகளைச் சேர்ந்த ஆறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பதினாறு மாணவர்கள் கலந்துகொண்டு ஈழத்தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆய்வினை மேற்கொண்டிருந்தமை வரலாற்று பதிவாக அமைந்திருந்தது.
மனித உரிமைகள் சபையில் தமிழர் பிரச்சினையின் நிகழ்கால சூழல்
ஐ.நா மனித உரிமைகள் சபையின் அங்கத்துவத்திலிருந்து அமெரிக்கா விலகியதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற 40வது கூட்டத்தொடரில் சிறிலங்கா தொடர்பாக பிரித்தானியா தலமையில் கனடா, மொன்றநீக்ரோ, மசதோனியா ஆகிய நாடுகளினால் சிறீலங்கா அரசின் அனுசரணையுடன் 40/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் ஏற்கனவே நடைமுறையில் இருந்த அமெரிக்கா தலமையில் கொண்டுவரப்பட்ட 30/1 தீர்மானத்தில் கூறப்பட்ட விடயங்களை நடைமுறைப் படுத்தும் முகமாக மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டது.
தற்பொழுது இலங்கை பிரச்சினை பிரிவு -2 (ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் ஆண்டு அறிக்கை மற்றும் OHCHR மற்றும் பொதுச்செயலாளரின் அறிக்கைகள் / Item 2 - Annual report of the United Nations High Commissioner for Human Rights and reports of the OHCHR and the Secretary-General ) மற்றும் பிரிவு 10 (தொழில்நுட்ப உதவி மற்றும் திறன் உருவாக்கம்(குறிப்பிட்ட நாடுகள் மீதான மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை அல்லது வாய்வழி அறிவிப்புகளை உள்ளடக்கியது/ Item 10 : Technical assistance and capacity-building )இன் கீழ் மாத்திரமே விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழர் இயக்கம் ஐ.நா வின் அங்கீகாரம் பெற்ற இணை அமைப்புகளுடன் இணைந்து கடந்த மூன்று வருடங்களாக இலங்கைப் பிரச்சினையை பிரிவு 4 இற்குள்ளும் சேர்த்துக் கொள்வதற்கு முயற்சிகளை எடுத்து வருகின்றோம். பிரிவு 4 என்பது மனித உரிமைகள் சபையின் கவனம் தேவைப்படும் மனித உரிமை சூழ்நிலைகள் தொடர்பாக மனித உரிமை பிரச்சினைகள் உள்ள நாடுகள் சார்ந்து விசேட பிரதிநிதி ஒருவர் நியமிக்கப்பட்டு, ஒவ்வொரு மனித உரிமைகள் கூட்டத்தொடரின் போதும் அவரினால் அந் நாடு தொடர்பாக ஆய்வு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்திற்கு உள்ளாக்கப்படும். இந்த பிரிவின் கீழ் தற்போது ஐந்து நாடுகள் உள்ளன. இதனை நாம் ஐ.நா மனித உரிமைகள் சபையின் பிரதான அவையின் பொது விவாதத்திலும் மற்றும் எழுத்து மூல அறிக்கைகளுமாக ஒவ்வொரு கூட்டத்தொடரிலும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதோடு பன்னாடுகளிற்கும் எடுத்துக்கூறி வருகின்றோம். அத்துடன் தமிழீழத்தில் இடம்பெற்றது திட்டமிட்ட தமிழின அழிப்பு என்பதை உலக மனித உரிமைகள் சபையின் பிராதான அவையில் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதுடன் எழுத்து மூல அறிக்கைகளாகவும் சமர்ப்பித்து வருகின்றோம். இச் செயற்பாடுகளின் மூலம் தமிழர்களின் பிரச்சினையை சர்வதேச அரங்கில் நீர்த்துப்போகச் செய்ய மேற்கொள்ளப்படும் முயற்சிகள் யாவற்றையும் முறியடித்து தற்போது விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பிரதான விடயங்களில் ஒன்றாக தக்கவைத்துள்ளோம்.
தமிழர் இயக்கத்தினால் கடந்த 40வது மனித உரிமைகள் கூட்டத்தொடரின் போது ஐ. நா சபையின் ECOSOC அங்கீகாரம் பெற்ற 39 நாடுகளைச் சேர்ந்த 118 சர்வதேச அமைப்புகளுடனும்,3000 சர்வதேச அமைப்புகளுடனும் இணைந்து தமிழின அழிப்பிற்கெதிராக சர்வதேச நீதி விசாரணை கோரி ஐ.நா வில் சமர்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பாக, பல நாடுகளையும் சேர்ந்த பிரதிநிதிகள் அவ் அறிக்கையை வரவேற்று எம்முடன் கலந்துரையாடியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இவ் விடயமானது தமிழீழத்தில் இடம்பெற்ற தமிழின அழிப்பை அங்கீகரிக்க கோரியும் அதற்கான சர்வதேச நீதிகோரி நாம் முன்னெடுக்கும் செயற்பாடுகளிற்கு கிடைத்த பாரிய வெற்றியாகும்.
மேலும் ஈழத்தமிழர் உரிமைக்காக செயற்படுவதாக கூறிக்கொள்ளும் சில புலம்பெயர் அமைப்புக்கள் வெறுமனே ஊடகங்களில் அறிக்கைப் போர் நடாத்திக் கொண்டிருக்கும் இச் சூழ்நிலையில், தமிழின அழிப்பை முன்நின்று நடாத்திய சிறீலங்கா இராணுவப் பிரதிநிதிகள் அதனை மூடி மறைப்பதற்காக ஐ.நா சபையில் ஐந்து எழுத்து மூல அறிக்கைகளை சமர்ப்பித்திருப்பதுடன் பிரதான அவையில் பொது விவாதங்களில் கலந்து கொள்வதுடன் பக்கவறை நிகழ்வுகளையும் நடாத்தி வருகின்றனர்.
தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற பக்கவறை நிகழ்வுகள்
இவ் 41வது கூட்டத்தொடரில் தமிழீழப் பிரச்சினைகள் தொடர்பாக 11 பக்கவறை நிகழ்வுகள் இடம்பெற்றது. இதில் எம்மோடு இணைந்து செயற்படும் எம்மைப் போன்று விடுதலைக்காக போராடும் நாடுகளான குர்திஸ்தான், மேற்கு சகாரா ( சகாராவி ), தெற்கு யேமன் , தெற்கு கமரூன் ( அம்பசோனியா ) ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கெடுத்திருந்தனர். அத்துடன் இம்முறையும் ஐ.நா மனித உரிமைகள் சபையின் காணாமலாக்கப்பட்டோரிற்கான சிறப்புக் குழுவின் செயலாளர் அவர்களும் கலந்துகொண்டு தம்முடன் இணைந்து வினைத்திறனாக செயற்படுவதற்கான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவித்தார். அத்துடன் இப் பக்கவறை நிகழ்வுகளில் பன்னாட்டு பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
மேலும், இம்முறையும் ஐ.நா மனித உரிமைகள் சபையின் தலமை அலுவலகம் மற்றும் ஆணையாளர் அலுவலகத்திலிருந்து அதிகாரிகள் எமது பக்கவறை நிகழ்வுகளிற்கு வருகை தந்து அவற்றை பதிவெடுத்துச் சென்றனர். இவ்வாறான பதிவுகள், எழுத்து மூல மற்றும் வாய்மூல அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டே ஆணையாளர் மற்றும் துறைசார் நிபுணர்களின் அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன.
வாய்மூல அறிக்கைகள்
இம்முறை பிரதான சபையில் தமிமீழத்தில் சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பு மற்றும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பு தொடர்பாகவும்,வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயம் சார்ந்தும் மேலும் தமிழகத்தில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் ஸ்பானிசு ஆகிய மொழிகளில் 70 வாய்மூல அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டது.
எமது நிலைப்பாடு
தமிழர் இயக்கமாக நாம் எச் சந்தர்ப்பத்திலும் எம் தாய்த் தமிழ் உறவுகளுடன் கைகோர்த்து நிற்போம் என்பதையும், சர்வதேச அரங்குகளில் தமிழர்களின் குரலாக தமிழீழ மக்களின் இறையாண்மையை வென்றெடுப்பதற்கு சமரசமற்று எப்போதும் ஒலித்துக் கொண்டிருப்போம் என்பதையும் உறுதிபடக் கூறிக்கொள்கின்றோம்.
நன்றி
தமிழர் இயக்கம்
கருத்துகள் இல்லை