மாற்று அணி ஒன்றின் உருவாக்கத்துக்கு எதிரான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் உள்நோக்கங்கள்.!!

தமிழ் தேசிய அரசியலில் பலமான மாற்று அரசியல் அணி ஒன்றை ஏற்படுத்தும் வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் க. வி. விக்னேஸ்வரனின் முயற்சிகளுக்கு குந்தகம் செய்யும் வகையில் தமிழ்  தேசிய மக்கள் முன்னணி பொறுப்பற்றவிதத்தில் செயற்பட்டுவருவது தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்துக்கு பெரும் பின்னடைவையும் ஆபத்தையும் உருவாக்கும் சூழ்நிலையை இன்று ஏற்படுத்தியுள்ளது.

எதிரும் புதிருமாக நான் பெரிதா நீ பெரிதா என்று துப்பாக்கிகள் கொண்டு சண்டையிட்ட தமிழ் குழுக்கள் ஐக்கியப்பட்டு தமது கசப்புணர்வுகளை களைந்து  தமிழ் அரசியலை ஒன்றுபட்டு முன்னெடுக்கவேண்டியதன் அவசியத்தை தேசிய தலைவர் பிரபாகரன் 2001 ஆம் ஆண்டு வலியுறுத்தி அதற்கான நடவடிக்கைகளை எடுத்திருந்தார். இனவாத சிங்கள அரசாங்கங்களுக்கு எதிராக வேற்றுமையில் ஒற்றுமை கண்டு தமிழ் கட்சிகள் ஒரு கொள்கையின் அடிப்படையில் செயற்படும் உபாயம் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்ததுடன்  பல நல்ல பெறுபேறுகளையும் பெற்றுக்கொடுத்திருந்தது. ஆனால், யுத்தத்தின்பின்னர் தமிழ் தலைமைகளின் தவறான அணுகுமுறைகள், சுயலாப அரசியல் ஆகியவை தமிழ் கட்சிகளுக்கு இடையிலான இந்த  ஒற்றுமை அரசியலை தவறான பாதைக்கு இட்டுச்சென்றது.  தற்போது நீதியரசர் விக்னேஸ்வரன் தலைமையில் இந்த  மாற்று அணி ஒன்றை ஏற்படுத்தி  தேசியத் தலைவரின் சிந்தனைக்கு மீண்டும் செயல்வடிவம் கொடுக்கும் காலம் கனிந்துள்ளது. ஆனால், பல்வேறு உள்நோக்கங்கள் காரணமாக இந்த முன்னெடுப்புக்களை சீர்குலைக்கும் வகையில் தமிழ்  தேசிய மக்கள் முன்னணி செயற்பட்டுவருகிறது.

தமிழ் தேசிய மக்கள்  முன்னணியின் கடந்த கால செயற்பாடுகளை பார்க்கின்றபோது தமிழ் மக்களின் தேசிய நலன்களை பாதுகாப்பதை விடவும்  ஜி. ஜி .பொன்னம்பலத்தினால் உருவாக்கப்பட்ட  அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் அரசியல் இருப்பை பாதுகாப்பதும் அதன் சைக்கிள் சின்னத்தை தக்கவைத்திருப்பதுமே முக்கியமான நோக்கங்களாக இருப்பதை  உணர்ந்துகொள்ள முடிகிறது. சைக்கிள் சின்னத்தை முன்னிறுத்தி கடந்த 10 வருடங்களாக, தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான எதிர்ப்பு அரசியலை செய்துவந்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்கள் மத்தியில் தனது ஆதரவை மோசமாக இழந்துள்ள நிலையில், தனது வெற்றிக்கான ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக கருதுகிறது. இதனை வேறு எந்த தமிழ் அரசியல் கட்சிகளுடனும் பகிர்ந்துகொள்வதற்கு கிஞ்சித்தும் விருப்பம் இல்லாமல் இருப்பதாலேயே, நீதியரசர் விக்னேஸ்வரன் தலைமையில் மாற்று அணி ஒன்று ஏற்படுவதை தடுக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.  இதனால் தான், நீதியரசர் விக்னேஸ்வரன் வேறு எந்த அரசியல் கட்சிகளையும் சேர்க்காமல் தம்முடன் மட்டும் இணையவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு வென்றாலும் பரவாயில்லை நீதியரசர் தலைமையிலான மாற்று அணி வெற்றிபெற்று விடக்கூடாது என்பதே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எதிர்பார்பாக இருக்கிறது.  மாற்று அணியின் வெற்றி தனது வெற்றியை நீண்ட காலத்துக்கு  பாதிக்கும் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு , ஈ.பீ.டி. பி அல்லது சிங்கள வேறு எந்த சிங்கள கட்சிகள்  வெற்றிபெற்றாலும் அது தனது வெற்றியை தற்காலிகமாக குறுகிய காலத்துக்கு மட்டுமே பாதிக்கும் என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கருதுகிறது. அதாவது, தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை விக்னேஸ்வரனுக்கு இரண்டு கண்களும் போகவேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி தற்போது சிந்திக்கிறது.

தமிழ் மக்களின் இன்றைய இக்கட்டான நிலைமையை கவனத்தில் கொண்டு பெரும் விட்டுக்கொடுப்புடன் சைக்கிள் சின்னத்தின் கீழ் ஏனைய கட்சிகளையும் சேர்த்து ஒரு பரந்த கூட்டணியை அமைப்பதற்கு நீதியரசர் விக்னேஸ்வரன் விடுத்த கோரிக்கையை சற்றும் கவனத்தில் எடுக்காமல் நிராகரித்துள்ளமை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் சுயலாப அரசியலையும் குறுகிய சிந்தனையையும் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான எந்த விதமான நடவடிக்கைகளோ உபாயங்களோ இன்றி கடந்த 10 வருடங்களாக  செயற்பட்டுவரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெறுமனே
தாயகம், தேசியம், தேசிய தலைவர் என்ற  பதங்களை   உச்சரித்து உணர்ச்சிவசப்பட்ட அரசியலையே முன்னெடுத்துவந்திருக்கிறது. இலங்கை அரசாங்கத்துடன் பேச கூடாது, இந்தியாவிடம் செல்லக்கூடாது  என்று கூறிவரும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் மக்களின் உரிமைகளை வெல்வதற்கான தனது வழி வரைபடம் எது என்று இதுவரை கூறமுடியாமல் இருக்கிறார். இதற்கு அவர் கூறும் பதில், சர்வதேச அரசியல் சூழ்நிலைகள் மாறும் உலக ஒழுங்கு மாறும் அப்போது தமிழீழம் மலரும் என்பதுதான்.
இந்த வார்த்தை அரசியலின் உள்நோக்கம் புரியாமல் ஆற்றலும் தேசிய பற்றும் மிகுந்த இளைஞர்கள் சிலர் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குள் ஈர்க்கப்பட்டு தமது  எதிர்காலத்தை வீணடித்து வருகின்றனர்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பேரன் ஜி.ஜி. பொன்னம்பலம் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து தனது வாய் சொற்களின் மூலம் கட்சியில் இருந்த ஏனையவர்களைகட்டுப்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டமையும் மலையகத் தமிழரின் குடியுரிமையை பறிப்பதற்கு துணைபோனமையும் வெறுமனே கடந்த கால சம்பவங்கள் என்று உதாசீனம் செய்துவிடமுடியாது. தனது பேரனைப்போல ஆணவத்துடன் தன்னிச்சையாக செயற்பட்டுவரும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் போக்கு எதிர்வரும் தேர்தல்களில் தமிழ் மக்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தப்போவதை தமிழ் மக்கள்  புரிந்துகொள்ளவேண்டும். என்பதனை வலியுறுத்தி கூறுகிறோம்.                            உலக தமிழர் விடுதலை இயக்கம்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.