வரலாறு படைக்கும் வங்கதேச அணி!

இந்திய, வங்கதேச அணிகள் மோதிய நேற்றைய ஆட்டத்தில் வங்க தேச அணி தோல்வியடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்திருப்பினும் ஒட்டுமொத்தமாக அந்த அணியின் செயல்பாடு கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

8 போட்டிகளில் விளையாடியுள்ள வங்க தேச அணி தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை வென்றுள்ளது. இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுடன் தோல்வியைத் தழுவியிருந்தாலும் வெற்றிக்கு அருகில் சென்று எதிர் அணிக்கு மரண பயத்தை காட்டியோ அல்லது ஊக்கத்துடன் போராடியோ தான் தோல்வியடைந்துள்ளனர். இமாலய இலக்கையும் துணிந்து எதிர்கொண்டு ஆடியுள்ளனர்.
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர், “நடப்பு உலக கோப்பை தொடரில் வங்கதேச அணி சிறப்பாக விளையாடி உள்ளது. இந்தியாவுக்கு எதிரான ஒரு போட்டியில் மட்டுமல்ல. அவர்கள் அனைத்துப் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கின்றனர். நான் பார்த்ததிலேயே வங்கதேச அணி இந்த தொடரில் மிகச் சிறப்பாக ஆடி வருகிறது. அவர்கள் எந்த அணியையும் எதிர்த்து வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு இறுதிவரை போராடுகின்றனர். அவர்களின் இந்தப் போராட்ட குணம், மிகவும் பிடித்திருக்கிறது. அந்த அணி வீரர்களுக்கு வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.
வங்க தேச அணியில் அனைத்து வீரர்களின் செயல்பாடும் சிறப்பாக இருந்தாலும் மற்ற அணி வீரர்களை பின்னுக்குத் தள்ளி ஷகிப் அல் ஹசன் உலக சாதனை படைத்துள்ளார். நேற்றைய போட்டியில் 66 ரன்கள் எடுத்ததன் மூலம் உலகக் கோப்பைத் தொடரில் 500 ரன்களை கடந்தார். இதன்மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் 500 ரன்கள், 10 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.