இந்திய அணிக்குப் பயிற்சியாளர் தேவை!

இந்திய கிரிக்கெட் அணியில் தலைமைப் பயிற்சியாளர் உள்ளிட்ட ஏழு பதவிகளுக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
உலகக் கோப்பை தொடரோடு இந்திய அணியின் பயிற்சியாளர்களின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளது. தற்போது மேலும் 45 நாட்கள் பதவிக்காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால் இப்போதுள்ள பயிற்சியாளர்கள் மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அணிக்கும் பயிற்சியைத் தொடரவுள்ளனர். மேற்கிந்தியத் தீவுகள் தொடர் ஆகஸ்ட் 3 முதல் செப்டம்பர் 3 வரை நடைபெறவுள்ளது.
உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராகத் தோல்வியைத் தழுவி வெளியேறியது. இந்திய அணியில் உலகக் கோப்பைத் தொடர் தொடங்கப்படுவதற்கு முன்பாகவே நான்காவதாகக் களமிறங்கும் வீரர் யார் என்பது உறுதியாகாமல் இருந்தது. தொடர் முழுவதும் அந்தக் குறை வெளிப்பட்டது.
முன்வரிசை வீரர்கள் லீக் ஆட்டங்களில் சிறப்பாகச் செயல்பட்டதால் அந்தக் குறை வெளியே தெரியவில்லை. ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தின்போதும் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தின்போதும் மிடில் ஆர்டரின் பங்களிப்பு இல்லாமல் போனதே தோல்விக்கான முக்கிய காரணமாகப் பார்க்கப்பட்டது. ஒருவேளை இது முன்னரே சரி செய்யப்பட்டிருந்தால் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்க வாய்ப்புண்டு.
தகுதியான வீரரைத் தேர்வு செய்து அவருக்கான வாய்ப்புகள் வழங்கி நான்காம் இடத்தை பலப்படுத்த பயிற்சியாளர்கள் தவறிவிட்டனர் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. இருப்பினும் இப்போது பயிற்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பை பிசிசிஐ வெளியிடுவது பதவிக்காலம் நிறைவடைந்தது என்பதாலே ஆகும்.
தலைமைப் பயிற்சியாளர், பேட்டிங் பயிற்சியாளர், பந்துவீச்சுப் பயிற்சியாளர், ஃபீல்டிங் பயிற்சியாளர், மருத்துவ சிகிச்சையாளர், வலிமை மற்றும் உடல்நிலை பயிற்சியாளர், நிர்வாக மேலாளர் ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பங்களைக் கோரியுள்ளது பிசிசிஐ.
தற்போது, இந்தப் பதவிகளை வகிக்கும் நபர்கள், தேர்வு நடைமுறையில் நேரடியாகக் கலந்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.