கந்தகம் சுமந்தவர்க்கு கண்ணீரால் அஞ்சலிக்கிறோம்!!

வேர்கள் வெளியினில் தெரிவதில்லை - சில
வேங்கைகள் முகவரி அறிவதில்லை
பெயர்களைச் சொல்லவும் முடிவதில்லை - கரும்

புலிகளின் கல்லறை வெளியில் இல்லை....


இது புதுவை இரத்தினதுரை ஐயா அவர்கள் யாத்த வரிகள். வெளியினில் தெரியாத அந்த வேர்களினால்தான் நாங்கள் அச்சமின்றி வாழ்ந்திருந்தோம்.  ஆடிப்பாடி மகிழ்ந்திருந்தோம். அணிவகுத்து வீதிகளில் ஆர்ப்பரித்து நடந்தோம். அத்தனையும் கனவாகி இன்று கலங்கியே வாழ்கின்றோம்.


உயிர்ப்பூவை உதிர்த்த கந்தக கடவுளர்களை நாம் நினைவுகூரும் நாள் இன்று. எமது தேச விடுதலைப் போராட்டத்தில் கரும்புலிகள் என்னும் மகோன்னதமானவர்களின் பங்கு என்பது அளப்பரியது. தீமையை எரிக்க தீயேந்தியவர்கள் இவர்கள்.

வலிந்து எமது கையில் திணிக்கப்பட்ட இந்தப் உரிமைக்கான போராட்டத்தில் நாம் கடந்த வலிகள் ஏராளம். அந்த வலிகளின் விடிவிற்கான விளக்காக  எமது மாவீர்ர்கள் இருக்கின்றனர். அதிலும், தம் உயிர்க்கொடைக்கான நேரத்தைக் குறித்து தமது பணியை உளச்சுத்தியோடும், தமிழீழ தாகத்தோடும், தீராத பற்றோடும், அசையாத உறுதியோடும், தேயாத கனவோடும், மனநிறை மகிழ்வோடும்  ஆற்றிய மறவர்களின் தியாகத்தை நாம் பூசித்தே ஆகவேண்டும். அவர்களின் தியாகத்திற்கு  அளவுகோல் கிடையாது. தேசத்தை நேசிக்கின்ற அதிஉச்ச அன்பின் பரிணாமம் அது. தெய்வீகத் துறவறத்தின் ஒப்புமை அது.

மனவலிமையின்
மாற்றுச்சொல்
கரும்புலிகள்.

பரிசுத்த யாத்திரையின்
பவித்திரம்
கரும்புலிகள்.

ஓயாது இவர் உணர்வுகள்,
சாயாது இவர் கனவுகள்.
வீழாத வீரம் ஒருநாள்
கொடியாகும் ஐநாவில். ........

பலவீனமான தமிழ் இனத்தின் பலம் மிக்க ஆயுதமாகவே கரும்புலிகளைத் தேர்ந்தெடுத்தேன் என விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் வர்ணிக்கப்பட்டவர்கள் தான் கரும்புலிகள். அவரது நெஞ்சுரத்தையும் வழிகாட்டலையும் தம் மூச்சாகக்கொண்டு உழைத்தவர்கள் கரும்புலிகள், உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு தமிழ்ழீழ விடுதலைப்போராட்டம் ஏற்றம் கண்டதற்கு கரும்புலிகளின் பணி, மாபெரும் சான்று. அவர்களின் ஒப்பற்ற தியாகமே எமது போராட்டத்தின் ஆணிவேர்.

அழகான ஒரு தேசத்தை, விழியோடு கானத்தை, உறவாக மக்களை, களவில்லா வாழ்க்கையை, சொந்தமண்ணில் சொர்க்கத்தைக் கனவு கண்டவர்கள் அவர்கள், அந்த கனவிற்காகவே தம் உயிர்ப்பூவை உதிர்த்தவர்கள். வாழத்துடிக்கும் வயோதிபர்கள் மத்தியில் சாவுக்கு நேரம் குறித்த சரித்திரவான்கள்.

புலிகளை பேச்சுவார்த்தைக்கு அல்ல, போருக்கு அழைக்கிறோம் என்று கொக்கரித்த சிங்கள ஏகாதிபத்தியத்திற்கு பேரிடியை, பெருங்கிலியைக் கொடுத்தவர் முதற்கரும்புலி மில்லர் அவர்கள்.
முகம்காட்டி,  முகம்காட்டா கரும்புலிகள் என நீண்டுசெல்லும் வரிசை அது. இன்றைய இளைஞர்களின் மத்தியில் பெரும்பாலும் இத்தகைய தியாகத்திற்கான, பக்தியும்  அர்ப்பணிப்பும் உள்ளதா என ஆராய்ந்தால், சட்டென்று ஆம் எனச்சொல்லிவிடமுடியாது. கேளிக்கைகளும் களியாட்டுக்களும் நிறைந்துகிடக்கும் இன்றைய காலத்தில் இளையவர்களின் தேடலும் சுகிப்பும் அர்த்தமற்றதாக மாறிக்கொண்டிருக்கிறது என்பது யதார்த்தம். இது திட்டமிடப்பட்டது என்பது வேறு கதை. காலத்தால் பூசிக்கவேண்டிய இவர்களின் தியாகம் நினைக்கபட மட்டுமல்ல, அதன் வழி நடக்கவேண்டியதுமாகும். நிச்சயமாக நாம் ஒருவிடயத்தைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

அதாவது, அறிவின் தேடலால் நாம் எமக்கான ஒரு சரித்திரத்தை நிச்சயமாக நிலைநாட்டமுடியும். எண்ணங்களையும் சிந்தனைகளையும் காவல் தெய்வங்களின் தியாகத்தின் பாதையில் நின்று நோக்கினால், கேளிக்கை நேரங்களை திறன்மிக்க மணித்துளிகளால் கடந்தால், நிச்சயமாக அதுவும் தேசவிடுதலைக்கான பங்கே தான்.

இவர்களின் இத்தகைய அர்ப்பணிப்பு எதற்கானது? இவர்கள் பகை மனம் கொண்டவர்களா? இல்லவே இல்லை.  பூவிலும் மெல்லிய மனம்கொண்ட புனிதர்கள். தன்னைப்போல பிறனை நேசிப்பதே, முடியாததாகவுள்ள மனிதவாழ்வியலில் அப்படி நேசித்தவர்கள் மாவீர்ர்கள், முந்நாள் போராளிகள். அதிலும் தன்னைவிட அதிகமாய் பிறனை நேசிப்பதென்பது கந்தகக்கடவுளர்க்கே பொருந்தும். தமிழீழம் என்ற தனிதேசமே அவர்களின் உயிரணுக்களில் மூச்சாக கலந்திருந்தது.
 தம் இனம் வாழ, கருமைக்குள் தம் உயிரைப்பூட்டிக்கொண்டனர். யூலை மாதமென்பது தமிழர்களில் வாழ்வியல் சகாப்தத்தில் மறக்கமுடியாத ஒரு மாதம். கறுப்பு யூலை, அதனால் தானோ என்னவோ கரும்புலிகளின் முதல் தாக்குதலை தேசத்தலைவர் யூலை மாதத்தில் நிகழ்த்தியிருந்தார்.

இவர்களின் ஒப்பற்ற மகோன்னதமான தியாகத்தினை நெஞ்சிலே இருத்தி, அதன் ஆழம், அதன் பரிசுத்தம் பற்றி உணர்ந்து ஒவ்வொருவரும் நடக்கவேண்டியது தமிழர்களாகிய எம் அனைவரினதும் கடமையாகும்.

இந்நாளில் ஏற்றுகின்ற தீபங்களின் ஒளியில் உற்றுப்பாருங்கள்.  அவர்களின் தியாகத்தின் ஆழம் புலப்படும்.


தமிழரசி,
ஆசிரியர்பீடம்.
தமிழருள் இணையத்தளம்
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.