சோயா சங்க்ஸ் (மீல் மேக்கர்) பிரியாணி!!

வழக்கத்தைவிடச் சில கவளங்களை அதிகமாகச் சாப்பிடவைக்கும் திறன் கமகம, விறுவிறு பிரியாணிக்கு உண்டு. அதிலும் அமர்க்களமான சுவையுடன், விதவிதமாக பிரியாணி வகைகளைச் செய்து பரிமாறினால் உறவு, நட்பு வட்டத்தில் உங்கள் கொடி உயர உயரப் பறக்கும். இந்தப் பெருமையை நீங்கள் பெற சிக்கன், மட்டன் போன்ற இறைச்சிகளுக்குப் பதிலாக அதே சுவையில் சோயா சங்க்ஸ் (மீல் மேக்கர்) சேர்த்தும் பிரியாணி தயார் செய்யலாம்.
என்ன தேவை?
பாசுமதி அரிசி - ஒன்றே கால் கப்
சோயா சங்க்ஸ் (மீல் மேக்கர்) - முக்கால் கப்
வெங்காயம் - ஒன்று
இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன்
தேங்காய்ப் பால் - அரை கப்
தண்ணீர் - ஒன்றரை கப்
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
தக்காளி - ஒன்று (நறுக்கியது)
கொத்தமல்லி - கால் கப்
புதினா - சிறிதளவு
மிளகு - அரை டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய் - 2 டீஸ்பூன்
நெய் - அரை டேபிள் ஸ்பூன்
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பட்டை - கால் இன்ச்
சீரகம் - அரை டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
எப்படிச் செய்வது?
வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும். பாசுமதி அரிசியை நன்றாகக் கழுவி வைக்கவும்.ஒரு கப் தண்ணீரில் ஒரு டேபிள் ஸ்பூன் பால் மற்றும் சிறிது உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி, அதில் சோயாவைச் சேர்த்து 10 நிமிடங்கள் தனியாக ஊறவைக்கவும். பின்னர் அதைத் தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து மூன்று முறை குளிர்ந்த நீரில் கழுவித் தனியாக வைத்துக்கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைத்துத் தனியாக வைத்துக்கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்குக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து தாளித்த பின் இஞ்சி - பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் அரைத்துவைத்துள்ளவற்றைச் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கவும். பின்னர் மிளகாய்த் தூள், கரம் மசாலா சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு வதக்கவும். பிறகு பிழிந்துவைத்த சோயா, சிறிது உப்பு சேர்த்து நன்கு கிளறிவிட்டு, அத்துடன் பாசுமதி அரிசியை நீரில் கழுவி சேர்த்து 15 நிமிடங்கள் நன்கு கிளறிவிடவும். கடைசியாக தேங்காய்ப் பால், தண்ணீர் சேர்த்து, கொதிவந்ததும் குக்கரை மூடி குறைவான தீயில் 3-4 விசில் விட்டு இறக்கிப் பரிமாறவும்.
என்ன பலன்?
சோயாவில் உள்ள ‘பைட்டோஸ்ரஜன்’ (Phytoestrogen), வளரிளம் பெண்களின் எலும்புகளை ஆரோக்கியமாக வைக்கவும், மாதவிடாய் அறிகுறிகளை எதிர்க்கவும் உதவுகிறது. மேலும், புற்றுநோய் மற்றும் இதயநோய் ஆபத்துகளுக்கு எதிரான விளைவுகளை உள்ளடக்கி இருப்பதோடு, இறைச்சிக்கு மாற்றாக புரதச்சத்தைக் கொண்டதாகவும் இருக்கிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.