பேக் அப் சொன்ன ஜோ-கார்த்தி படக்குழு!

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஜோதிகா கார்த்தி இணைந்து நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம் திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் ஜீத்து ஜோசப். அதே படத்தை தமிழில் கமல்ஹாசனை வைத்து பாபநாசம் என இயக்கினார் ஜீத்து. சென்றாண்டு இவரது இயக்கத்தில் வெளியான ஆதி என்ற மலையாளப் படம் மூலம் மோகன்லாலின் மகனை கதாநாயகனாக அறிமுகம் செய்து வைத்தார். மலையாளத்தில் 100 நாட்களுக்கு மேல் ஓடி வசூல் சாதனை படைத்தது அப்படம்.
எளிமையான கதையை வலுவான திரைக்கதை முடிச்சுகளால் கொடுக்கும் ஜீத்து ஜோசப் இரண்டாவதாக தமிழில் இயக்கும் படத்தில் ஜோதிகா கார்த்தியின் சகோதரியாகவும் சத்யராஜ் தந்தையாகவும் நடிக்கிறார். கோவாவில் முதல் கட்டமாக தொடங்கிய படப்பிடிப்பு, பின்னர் ஊட்டியில் தொடர்ந்திருக்கிறது.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர். நிகிலா வர்மா, அம்மு அபிராமி, ஆன்சன் பால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மிக முக்கிய கதாபாத்திரத்தில் பழம்பெரும் நடிகை செளகார் ஜானகியும் நடித்துள்ளார். வயாகாம் 18 நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்கிறது. கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தை அக்டோபரில் வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்துள்ளது.
இப்படத்திற்குப் பின் இம்ரான் ஹாஷ்மி கதாநாயகனாக நடிக்கும் ‘பாடி’ படத்தை பாலிவுட்டில் இயக்கவுள்ளார் ஜீத்து ஜோசப்.

No comments

Powered by Blogger.