சிங்கள மாமியும் இறைச்சிக் கறியும்..!!

இறுதி யுத்தத்தில் நான் இராணுவத்தினரிடம் சரணடைந்தபின் வவுனியாவில் இரண்டு தடுப்பு முகாம்களில் இருந்தேன்,அதன்பின் கொழும்பிலும்அதன் பின்பு மீண்டும் வவுனியா தடுப்புமுகாமும் வந்தேன்,


நான்கு மாதமளவில் அளவ்வ,கும்புறுவ காமன்சில் குறிப்பிட்ட எமது போராளிகள் தையல் வேலைகளில் ஈடுபட்டோம்,அதில் சிறு சம்பவம் ஒன்றை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்,

நாம் எமது தங்குமிடத்தில் இருந்து காமன்சிற்கு தைக்கபோவதாக இருந்தால் எங்களிற்காக ஒதுக்கப்பட்டிருந்த இரண்டு அரசபேருந்தில் காலை 7.00 மணிக்குச்சென்று மாலை 5-30 மணிவரை தையல்வேலைகள் செய்வோம்,எமக்கு காவலாக   பெண் இராணுவத்தினர் வருவார்கள்,

யுத்தம் முடிவடைந்த காலப்பகுதியில் தனிச்சிங்கள ஏரியாவிற்கு போகிறோம்,அதுவும் முன்னால் போராளிகள் என்ற பெயரோடு போகிறோம்.அங்கு நாம் போனதும் சொல்லவா வேண்டும்..?கொட்டியா கொட்டியா என்று (புலி) மயம்தான்,அத்தோடு வோம்ப வோம்ப என்று(குண்டு)வோம்ப தான் அனைவரின் வாயிலும்,

அந்த புலிமயம் வோம்ப மயம் தான் போகுதென்று பார்த்தால்...எங்களை ஏதோ "வேற்றுக்கிரக" வாசிகளைப் பார்ப்பதுபோல் பார்த்தார்கள்,ஏதோ ரகசியமாக எல்லாம் கதைத்தார்கள்,முழுசி முழுசி பார்த்தார்கள்,

எங்களில் முட்டினாலே குண்டு வெடிக்கும் என்பதுபோல எங்களை கண்டாலே புதிதாக பாதையெடுத்து போனார்கள்,அவர்களின்செயற்பாடுகள் அன்றைய சூழலில் எமக்கு ஒரு நெருடலை மனதிற்கு தந்தது.ஆனாலும் நாங்கள் ஏன் கவலைபடவேனும்,நாங்கள் பெரிய அணியே இருக்கிறம் இதற்கெல்லாம் கவலைப்படுவோமா..?

உணவு ஓய்வு நேரத்தில் நாங்கள் அனைவரும் சேர்ந்து கதைத்து சிரிப்போம்,சில சிங்களப் பெண்கள்  படுமுறாளாக முறைச்சு பார்ப்பார்கள் எம்மை,

உந்த முறாளுக்கெல்லாம் நாம் பயப்படுவோமா..?ஆனாலும் சூழல் அப்படி இருந்தபடியால் கொஞ்சம் சமாளித்துபோக வேண்டியநிலை.அதனால உந்த சிங்கள பெண்கள் யாரையாவது சினேகிதம் பிடித்தால்தான் நமக்கும் கொஞ்சம் சேப்ரிபோல இருந்தது,

இப்படியே குழப்பமாக சில நாட்கள் கழிந்தது,எனக்கு லாஸ்ரிக் பொருத்துற வேலை,அதுவும் எங்கட வீடுகளில இருக்கிற சிங்கர் மெசினில்ல,இது  யுகிமெசின் என்று பெரிய அண்டாமெசின் வேற,

காலையில போனகையோட தொடங்கும் சிங்கள பாட்டு,ஒரு அறுப்பும் விளங்காது.5.30 வரை பாட்டுபோடுறவனை பேசி திட்டி களைச்சு போவம்,காலையில 11 மணி அப்படி சொல்லிவைத்தபோல நித்திரைவேற தூங்கும்,கொஞ்சம் தூங்கினா பெரிய மெசின்தானே.அதோட தையல் அனுபவமும் எங்களுக்கு இல்லை.தையல்ஊசி 3 துண்டாகிடக்கும்,

உடைந்த ஊசியின் அடித்துண்டை கொண்டுபோய் கொடுத்தால்தான் புதுஊசிதருவார்கள்,நான் முதல்நாள் மட்டும் 3 ஊசியை முறித்துபோட்டன்,நான் 3 ஊசியை முறித்திட்டன் என்று பார்த்தால் பக்கத்து லைனில இருந்தவள்  4ஊசியை முறிச்சிட்டாள்,அடிக்கடி  ஊசிவாங்கப்போய் ஊசிதாற பிள்ளை திலினியை சினேகிதமும் பிடிச்சிட்டாள்,

 எனக்கு அடுத்த லைனில ஒரு உடம்பான  பெண் ஒருவர் இருந்தார்,மேலாளர் நின்றால் எதுவும் பேசமாட்டா,றொம்ப அமைதியா இருப்பா,இல்லாதுவிட்டால் ஆள்தான் ஹீறோ. தைக்கேக்க போடுற ஏப்பிறன் சட்டைப் பொக்கற்றுக்குள் கொய்யாக்காயை வைத்து அருகில் இருப்பவர்களுக்கு கொடுத்து சாப்பிடுவா,

பலதடவை பார்த்திருந்தாலும் ஒருநாள் அவா என்னைப்பார்க்கேக்க நானும் பார்த்திட்டன், கொஞ்சம் சிரிச்சா. ஆள் சரியான காமெடிக்காறிதான் போல பேசாம ஆளை சினேகிதம் பிடிப்பம் என்று நினைச்சன், அவா என்னைப் பார்க்க வடிவேல் பாணியில சிரிச்சன்,பிறகென்ன எனக்கும் எட்டி ஒரு கொய்யாக்காய் போட்டா,

என்ர சினேகிதிமாருக்கும் கொடுத்து சாப்பிட்டன்,மதிய சாப்பாடு இடைவேளை வந்து கதைத்தா.சிங்களம் தெரியுமோ என்று கேட்டு கதைச்சிட்டுப்போட்டா,

ஆள்ஒரு நியூஸ் பேப்பர்போல போய் எல்லாருக்கும் சொல்லிப்போட்டா கொஞ்ச கொட்டியாக்கு(புலிக்கு) சிங்களம் தெரியும் என்று,அவயளும் பிறகு ஒருசிலர் வந்து கதைத்தார்கள்,

எங்களுக்கு மூன்று நேரமும் சோறுதான்.தைக்கப்போனால் காமன்ஸ் சாப்பாட்டுக்கடையில்தான் சாப்பிடுவோம்,மாங்காய்க்கறி,கெக்கரிக்காய்,பருப்பு,சம்பல் தான் தினமும்,எப்போதாவது மீன்கறி வரும்,

எங்களுக்கு கெக்கரிக்காய் பிடிக்காது.வாய்க்குள் வைத்தாலே ஒருமாதிரி இருக்கும், அதை எப்படி சாப்பிடுவது,மாங்காய்கறி இன்னும் கொஞ்சம் விசித்திரமா இருக்கும்,இனிக்கும்,புளிக்கும் உறைக்கும் இப்படி பலசுவை,

நமக்கு சாப்பாடு என்றாலே பிடிக்காமல் வேண்டாமென்று இருக்கும்,பெரும்பாலான நேரங்களில் சாப்பிடமாட்டோம் கொட்டிவிடுவோம்,இதை அவதானித்த குண்டு அக்கா என்னிடம் வந்து கேட்டா லேலி(மருமகள்) ஏன் சாப்பிடாம கொட்டுகிறீங்கள் என்று,

மருமகளா..?இதென்னடா கொடுமையா இருக்கு..?  யாருக்கு யார் மருமகள்,என்று நினைத்துவிட்டு விளங்கேல என்று சிங்களத்தில் கேட்டேன்,

ஏன்சாப்பாடு சுவைஇல்லையா என் கேட்டா ஓம் என்று கூறினேன்,கவலைப்படாதே மருமகள் என்றா,நான் விடுவேனா உடனே நந்தம்மா (மாமி) என்றேன்,மகனை கட்டுறியா என்றார்,காமெடிக்கு மாமியிட்ட கேட்டேன் மகனிற்கு எத்தனை வயதென்று. 14 என்றார்,

என்னால சிரிப்பை அடக்க முடியேல,மாமி வயசு செட்டாகலயே என்றேன்,சும்மா கூப்பிடுவோம் என்றார், இப்படியே மாமியை கைக்குள்வைத்து கொஞ்ச நாட்களை கடத்தினோம்,நாம் எல்லோரும் அவரை மாமி என்றே அழைப்போம்,

மாமி பாடசாலை பிள்ளைகளைப்போல கொய்யாக்காய்,பெருநெல்லிகாய்,விளாங்காய் என்று கொண்டுவருவா,சுப்பவைசருக்கு தெரியாமல் சாப்பிடுவோம்,

ஒருநாள் மாமி என்னிடம் வந்துசொன்னா நாளைக்கு ஸ்பெசலாக எனக்கு சமைத்துவருவதாக,எனக்கு பெரிய சந்தோசம்,என்னோடு அருகில் இருக்கும் மூவருக்கும் சொன்னேன்,மாமி நாளை இறைச்சி சமைத்துகைகொண்டுவாறாவாம் என்று.அவர்களிற்கும் சந்தோசம்,மறுநாள் காலையில் மாமி வந்ததும் சொன்னா லேலி ஸ்பெசல் கறி கொண்டுவந்தனான் என்று,

பல நாட்களிற்குபின் இறைச்சியோட சாப்பிடப்போகிறோம்,பள்ளிக்கூட பிள்ளைகளப்போல எப்படா மத்தியான வேளைவரும் என்றிருந்து மாமியின் சாப்பாட்டு  வட்டமேசையில் நாம் நால்வரும்போய் இருந்தோம்,

மாமி சொன்னா மருமகள் உங்களிற்காக காலையில  நாலு மணிக்கு எழும்பி சமைச்சனான் என்று,கவலைதான்  சிங்கள மாமியின் அன்பை யாராலும் அடிக்கேலாது என்று நினைத்துக்கொண்டேன்,

ஒரு அளவான டிஸ்சில் கறியை திறந்து வைத்தார்,இறைச்சியை பெரிய துண்டு துண்டா வெட்டி போட்டிருந்தா,நல்ல மஞ்சள்தூள்,மிளகு கறுவாப்பட்டை எல்லாம் போட்டிருந்தது,

எங்கட தமிழர் என்றால் தூளை அள்ளிக்கொட்டி சமைப்பார்கள்,நாக்கால வீழ்நீர் வடியும்வரை தூளை அள்ளிகொட்டுங்கள்,சின்னச்சின்ன துண்டா இறைச்சியை வெட்டிவினம்,ஆனால் மாமி பெரிய துண்டா சமைச்சிட்டுவந்திருந்தா,

மாமி உந்த மஞ்சள் தூள்கறியை சாப்பிட்டுத்தான் வெள்ளையா இருக்கிறாபோல என்று மனசுக்க நினைச்சன்,சாப்பிட இருந்த எங்களுக்கு சிங்களமாமி ஒவ்வொருவருக்கும் பெரிய இறைச்சி துண்டாக தூக்கிபோட்டா,நமக்கு பெரிய மகிழ்ச்சி,அதோட எங்கட மற்றபோராளிகள் கடை சாப்பாட்டுக் கறியோட சாப்பிடுவது  கவலையாகவும் இருந்தது,

மாமி கறியைப்போட்டதும் மற்ற மூவரும் சாப்பிட தொடங்கிட்டினம்,என்னை சாப்பிடவிடாம மாமி தமிழற்ற சோறுகறிப் புதினங்களை கேட்டபடி இருக்க எனக்கு மாமியில சரியான கடுப்பா இருந்தது,கோபமும் வந்தது,இறைச்சிக்கறியை கொண்டுவந்து தந்திட்டு மாமி சாப்பிடவிடாம கதைகேட்டுக்கொண்டு இருக்கிறாவே என்று.

 நல்லா கதையைக்கேட்கட்டும்,நான் என்ர பாட்டில இருந்து சாப்பிடுவம் என்று வாயிற்குள் இறைச்சியை பிரித்து வைத்தேன்,மாப்போல இருந்திச்சு,மாமி நல்லா இறைச்சியை அவியவிட்டிட்டா என்று மறுபடியும் பிரித்து சாப்பிட்டேன்,இறைச்சியின்ர மணம்,குணம். சுவை ஒன்றும் இல்லை என்று நினைச்சிட்டு மற்ற மூவரையும் பார்த்தேன்,அவர்கள் என்னைப்பார்த்து  சிரித்தபடி இருந்தார்கள்,

அருகில் இருந்த தங்கை சொன்னாள் அக்கா மாமியிட் நாங்கள் நல்லா அவிஞ்சுபோனம்,இது இறைச்சிக்கறி இல்லை என்றால்.இது கிழங்குபோல இருக்கு என்ன கிழங்கு என்று கேட்டேன் அவளிடம்..?

இது இறைச்சிக்கறியும் இல்லை,கிழங்கு கறியும் இல்லை.ஈரப்பலாக்காய்கறி என்றாள்,

எங்களுக்கு ஸ்பெசல் கறி என்றால் இறைச்சி,அவர்களுக்கு ஈரப்பலாக்காய், நம்மில்தான் பிழை,தவறாக விளங்கிக்கொண்டது,

வெட்கம் ஒருபக்கம்  ஏமாற்றம் ஒருபக்கம் சிரிக்கவும் ஏலாது மாமி பாசமா தந்திட்டு பக்கத்தயே இருக்கிறாவே,என்ன செய்வதென்று தெரியாம யோசித்தபடி இருக்க மாமி சொன்னா லேலி வடிவா சாப்பிடுங்கோ அப்பதான் என்னபோல குண்டா வரலாம் என்று,

அடகறுமத்த சும்மாவே நாங்கள் உந்த ஈரப்பலாக்காயை வாயிலையே வைக்கிறேல,சரணடைந்ததோட உடம்பில சதையும் இல்லை, அரைக்கிலோ எலும்புதான் இருக்கு.பிடிக்காத ஒன்றை சாப்பிட்டா சத்திதான் வரும்,

ஒன்றும் செய்யேலாது வேற வழியும் இல்லை. மாமிக்கு தெரியாம ஈரப்பலாக்காய் துண்டை சின்னன் சின்னனா பிரித்து சோற்றுக்குக்கீழ மறைச்சுப்போட்டு இருந்தன்,மாமி பாசமா இன்னுமொரு  ஈரப்பலாக்காய் துண்டு போடவோ என்றாவே பார்க்கலாம்,அய்யோ மாமி இதுவே போதும் என்றேன்,நாங்கள் நால்வரும் சாப்பிடேல,

இறைச்சிக்கனவு ஈரப்பலாக்காய்க்கறியாக மாறினதோட பசியும் பறந்துபோச்சுது,பிறகென்ன வெளிய வந்து சிங்கள மாமிக்கு தெரியாமலும் மற்ற தோழிகளிற்கு தெரியாமலும்  நிலத்தில இருந்து சிரிசிரியென்று சிரித்தோம்,

தடுப்பில் இருந்த காலத்தில் குறுகிய நாட்கள் காமன்சில்தான் சிரிக்க முடிந்தது,

அங்கு இருந்த நாட்களில் நான் பார்த்தவை.
**********************************************

சிங்கள ஊடகங்கள் தங்கள் பணியை சீராக செய்திருந்தன,

புலிகள் என்றால் கோரமானவர்கள் மனிதாபிமானமற்றவர்கள். எவற்றையும் விளங்கிக்கொள்ள முடியாத காடையர் என்றே சிங்கள மக்கள் புலிகளை எடைபோட்டிருந்தார்கள்.

இறுதிநாள்வரை எம் முகம்பார்க்காத இனத்துவசம் கொண்டசில சிங்களபெண்கள்,

அதற்குள்ளும் மனிதாபிமானத்தோடு அரவணைக்க ஓர்சிலர் இருந்தார்கள்.

சிங்கள பெண்களைப்போல எமது போராளிகளும் சிலர் இருந்தார்கள்,தலைவர் அண்ணா எங்களுக்கு உப்புபோட்டுத்தான் சோறு தந்தவர்.எங்களுக்கும் ரோசம் இருக்கு என்று சிங்கள பெண்களோடு பேசாது இருந்தவர்கள்,

போராட்டம் முடிவடைந்ததோடு போராளிகள் நாம் அனைவரும் யாரை எம்வாழ் நாளில் காணக்கூடாது என்று இருந்தோமோ அந்த நபரையே  இதே காமென்சில் நாம் கண்டுகொண்டதும்...

அவர் கையாலேயே சந்தர்ப்ப சூழ்நிலையால் நான் சான்றிதல் பெற்றுக்கொண்டதும்,

அந்த கொடியநாள் என் வாழ்வில் மீண்டும் ஓர்தடவை வரக்கூடாதென்றே இப்பொழுதும் நினைப்பதுண்டு....

*பிரபாஅன்பு*

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.