இலங்கைக்கு ஆறுதல் வெற்றி!📷
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் இலங்கை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 39ஆவது ஆட்டத்தில் நேற்று (ஜூலை 1) இலங்கை - மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இலங்கை அணியின் தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடி 93 ரன்கள் சேர்த்த நிலையில் திமுத் கருணரத்னே 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அரைசதம் கடந்த குசல் பெரேரா 64 ரன்களுக்கு வெளியேறினார். நிதானமாக விளையாடிய அவிஷ்கா ஃபெர்னாண்டோ அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து அணியின் ரன் விகிதத்தையும் உயர்த்தினார். அவருக்கு ஏஞ்சலோ மேத்யூஸ், குசல் மெண்டிஸ், லஹிரு திருமண்ணே ஆகியோர் நல்ல ஒத்துழைப்பு தந்தனர்.
அவிஷ்கா ஃபெர்னாண்டோ ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது முதல் சதத்தைக் கடந்து அசத்தினார். இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் குவித்தது. கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடிய திருமண்ணே 33 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். மேற்கிந்தியத் தீவுகள் அணித் தரப்பில் ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட் வீழ்த்தினார். கடினமான இலக்கை நோக்கிக் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா கடுமையான நெருக்கடி கொடுத்தார். அவரது பந்துவீச்சில் சுனில் அம்ரிஸ் மற்றும் ஷாய் ஹோப் தலா 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

சிறிது நேரம் தாக்குப் பிடித்து விளையாடிய கிறிஸ் கெயில் 35 ரன்களுக்கும், ஷிம்ரான் ஹெட்மையர் 29 ரன்களுக்கும் வெளியேற மேற்கிந்தியத் தீவுகள் அணி 84 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒருபுறம் விக்கெட் வீழ்ந்துகொண்டிருந்தாலும் மறுபுறம் நிலைத்து நின்று விளையாடிய நிகோலஸ் பூரன் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். அவருக்குக் கடைசி நேரத்தில் நல்ல ஒத்துழைப்பு வழங்கிய ஃபேபியன் ஆலன் தனது முதல் அரைசதத்தைக் கடந்த நிலையில் ரன் அவுட் ஆனார். இந்த ரன் அவுட் இலங்கை அணிக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தியது. கடைசி ஓவர்களில் இலங்கை பந்துவீச்சாளர்கள் சிக்கனமாகப் பந்துவீசி வெற்றியை உறுதிசெய்தனர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பந்துவீசும் வாய்ப்பளிக்கப்பட்ட ஏஞ்சலோ மேத்யூஸ் 48ஆவது ஓவரில் பூரன் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். மேற்கிந்தியத் தீவுகள் அணியால் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இலங்கை அணியின் லசித் மலிங்கா 3 விக்கெட் வீழ்த்தினார். சதமடித்த இலங்கை வீரர் அவிஷ்கா ஃபெர்னாண்டோவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இவ்விரு அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில் இந்த வெற்றி இலங்கை அணிக்கு ஆறுதலாக அமைந்தது.

.jpeg
)





கருத்துகள் இல்லை