விஜயகலா மீண்டும் மேடை நாடகம் ஆரம்பம்!

வடக்கில் வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் வேலைதேடும் இளையவர்கள் அரசியல் செல்வாக்கினால் மட்டுமே வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ளலாமென்ற மோசமான கலாச்சாரம் உச்சமடைந்துள்ளது.
குடாநாட்டு வரலாற்றில் என்றுமில்லாதளவில், வேலைவாய்ப்பிற்காக அரசியல்வாதிகளை நாடும் கலாச்சாரம் உச்சமடைந்துள்ளது.


வேலைவாய்ப்பை பெற அமைச்சர்களையோ, எம்.பிக்களையோ நாடும் கலாச்சாரம் நீண்டகாலமாக இலங்கையில் இருந்து வந்ததுதான். எனினும், யுத்தத்தின் பின்னரான காலகட்டத்தில் வடக்கு, கிழக்கில் அது தீவிரம் பெற தொடங்கியது.

அப்போது அரச தரப்பில் இருந்த ஈ.பி.டி.பி, சு.கவின் தமிழ் பிரிவுகள் வேலையற்ற பட்டதாரிகள், இளையவர்களை தமது அரசியலுக்கு, வாக்கு வங்கிக்காக பாவிக்கிறார்கள் என்ற விமர்சனம் எழுந்திருந்தது. ஒவ்வொரு கூட்டத்திலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இதை சுட்டிக்காட்டி வந்தது.

இதே சமயம், பெரும்பாலானவர்கள் இந்தவகையான வேலைவாய்ப்பை விரும்பாமலும் இருந்தனர்.அல்லது, அந்த தரப்புக்களுடன் அறிமுகமற்றதால் அதை பெற முடியாமல் இருந்தனர்.

எனினும், 2015 ஆட்சி மாற்றத்தின் பின்னர், இந்த கலாசாரம் முன்னரை விட பல மடங்கு அதிகரித்து விட்டது. அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்வதை விமர்சித்து வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு, தானும் அதேவிதமான நடவடிக்கையில்
இறங்கியது. தற்போது எல்லா அமைச்சின் வேலைவாய்ப்பிற்காகவும் கூட்டமைப்பு எம்.பிக்கள் சிபாரிசு பட்டியல் அனுப்புகிறார்கள்.

எனினும், இது அனைத்தையும் விட இந்த விவகாரத்தில் மிகமிக மோசமாக- எந்த அரசியல் பொறுப்புணர்ச்சியுமின்றி- வாக்கு ஒன்றையே குறியாக வைத்து, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜகலா மகேஸ்வரன் நடந்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. விஜகலா தரப்பை
பிடித்தால், விஜகலாவின் அலுவலகத்திற்கு சென்றால் மாத்திரமே அரச வேலை கிடைக்கும் என்ற, ஒரு ஒரு துளி அரசியல் நாகரிகமுமில்லாத கலாசாரத்தை விஜயகலா மகேஸ்வரன் உருவாக்கி
வருகிறார்.

எந்த அரசியல் கொள்கை, செயற்பாட்டு வரலாறு, பின்னணி எதுமில்லாமல் பணபலமொன்றை அடிப்படையாக கொண்டு, கணவனின் வெற்றிடத்தில் அரசியல்வாதியானவர் விஜயகலா.அதனாலோ என்னவோ, வேலைவாய்ப்பு விவகாரத்தில் எந்த அரசியல் பொறுப்புணர்ச்சியும் இல்லாமல்,
வேலைவாய்ப்பு தேவையானவர்களை அரசியலுக்கு பயன்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.

அண்மையில் வடக்கு, கிழக்கில் வழங்கப்பட்ட தொண்டர் ஆசிரியர் நியமனம், இந்த மோசமான கலாச்சாரத்திற்கு சிறந்த உதாரணம்.

தொண்டர் ஆசிரியர்களாக 2015ஆம் ஆண்டின் முன்னர் ஒரு பாடசாலையில் மூன்று வருடம் கடமையாற்றியவர்களிற்கே, நியமனம் வழங்கப்படுவதாக சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுவரையான காலமும், தொண்டராசிரியர் நியமனத்தில் மாகாண கல்வி திணைக்களமே முக்கிய பங்காற்றியது. பாடசாலைகளில் தொண்டர் ஆசிரியர்களாக
கடமையாற்றுபவர்களின் விபரங்களை, வலயக்கல்வி பணிமனை ஊடாக பெற்று, அதிலிருந்து நியமனப்பட்டியல் தயாரிக்கப்பட்டது.

எனினும், கடந்த நியமனத்தில் முற்றுமுழுதாக அரசியல் நியமனமாகவே இருந்தது. விஜயகலா மகேஸ்வரன் தரப்பே நியமனத்திற்குரியவர்களின் பட்டியலை தயாரித்து கல்வியமைச்சிற்கு அனுப்பியிருந்தது. இதனால் பல முறையற்ற நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. அரசியல் நியமனம்
என்பதால், விஜயகலாவின் தரப்பினர், தமக்கு வேண்டியவர்கள், தமது அலுவலகத்திற்கு தேடி வந்தவர்களிற்கே நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

சுற்றறிக்கையின்படி, 2015ம் ஆண்டின் முன்னர் 3 வருடங்கள் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றியிருந்தால் மாத்திரமே நியமனம் வழங்கப்படும். எனினும், விஜயகலா குழுவால் நியமனம் வழங்கப்பட்டவர்களில் 1994, 1995இல் பிறந்தவர்களும் உள்ளடங்குகிறார்கள். அதாவது 2014, 2015இல் உயர்தர பரீட்சை எழுதியவர்களிற்கும் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, மூன்று வருட சேவையை பூர்த்தி செய்ய 3 மாதம் போதாது என்ற காரணத்தை குறிப்பிட்டு நிராகரிக்கப்பட்டவர்களும் உள்ளனர்.

தற்போது வேலையற்ற பட்டதாரிகளிற்கான நியமனம் என குறிப்பிட்டு, பட்டதாரிகள் விஜயகலாவின் அலுவலகத்திற்கு அழைக்கப்படுகிறார்கள். பட்டதாரிகள் சங்கம் செயற்படுகின்றபோதும், பட்டதாரிகள் சங்கத்தின் மூலமாக அல்லாமல், அதிலுள்ள சிலர் மூலமே ஆட்கள் திரட்டப்பட்டுள்ளனர்.
இது பட்டதாரிகள் சங்கத்திற்குள்ளும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

பட்டதாரிகளை அழைத்த ஏற்பாட்டாளர்களால், விஜயகலாவின் அலுவலகத்திற்கு வருபவர்களிற்கே நியமனம் வழங்கப்படும் என்ற சாரப்பட அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாக, சந்திப்பிற்கு சென்றிருந்த
பட்டதாரிகள் பலர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தனர்.

இந்த சந்திப்பு விஜகலாவின் அலுவலகத்தில் இடம்பெற்றது. ஒவ்வொரு கட்சி ஆதரவாளர்களான இளையவர்கள் இருப்பார்கள், அரசியல் பொறுப்புணர்ச்சியுள்ள அமைச்சர் என்றால், இவ்வாறான
சந்திப்புக்களை பொதுவான இடங்களில் வைக்க வேண்டும், விஜயகலாவின் அழைப்பை புறக்கணித்ததாக சிலர் குறிப்பிட்டனர்.

கலா அம்மையாருக்கு தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதை தவிர வேறு எந்த அரசியல் கொள்கையோ, பொறுப்புணர்ச்சியோ இருப்பதாக தெரியவில்லை. அதனால்தான் தேசியத் தலைவர்
பிரபாகரன் என்று போன மாதமும், தேசியத் தலைவர் ரணில் என இந்த மாதமும் மாற்றி மாற்றி பேசி வருகிறார்.

எனினும், இது மோசமான கலாச்சாரம். அரசியல் கட்சிகளின் தயவில் வேலை பெறுவது அவமானகரமானது என்ற சூழல் இப்போது மறைந்து விட்டது. இளையவர்களை சலுகைக்காக அடிபணிய
வைக்கும் கலாசாரத்தை சாதாரண ஒன்றாக மாற்றுவதில் விஜயகலா பெரும் பங்கு வகித்து வருகிறார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.