யாவரும் திரண்டெழுந்து தமிழர்களின் எழுச்சிப் பிரவாகத்திற்கு வேகம் கொடுக்க நீங்கள் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்!!

'எழுக தமிழ்' எழுச்சிப் பேரணியை நடத்துவது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவை விடுத்துள்ள அறிவிப்பு பல்வேறு மட்டங்களிலும் பெரும் வரவேற்பை பெற்றிருப்பதாக உணர்கின்றேன்.


தற்போதைய சூழ்நிலையில் இத்தகைய ஒரு நிகழ்வை நடைமுறைப்படுத்துவது மிகவும் அவசியமானது என்றும் அவசரமானது என்றும் இந்த அறிவிப்பு குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பதாகவும் பல்கலைக்கழக சமூகம் முதல் தொழிலாளர் அமைப்புக்கள் வரை எம்மிடம் நேரடியாகத் தெரிவித்திருக்கின்றார்கள்.

வரும் செப்ரெம்பர் மாதம் 16ஆந் திகதி எமது இந்த நிகழ்வை நடத்துவதற்கு குறைவான காலமே இருக்கின்றது. நிகழ்வுக்கான ஏற்பாட்டுக் குழு ஒன்றை நாம் இன்றே உருவாக்கிப் பொறுப்புக்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

எவ்வாறான குழுவை அமைப்பது, அவர்களின் கடமைகள் என்ன என்பதை எல்லாம் இன்று நாங்கள் தீர்மானிக்க வேண்டும். பொது அமைப்புக்களில் இருந்தும் அரசியல் கட்சிகளில் இருந்தும் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

அதன் பின்னர் ஒழுங்கமைப்புப் பணிகள் இன்று முதல் தீவிரப்படுத்தப்பட வேண்டும். பல தரப்புக்களும் இந்த நிகழ்வை உற்றுநோக்கிக் கொண்டிருக்கின்றன.

நாம் இந்த நிகழ்வை மேற்கொள்ளும் காலம் மிகவும் முக்கியமானது.

ஒன்றன் பின் ஒன்றாக தேர்தல்கள் வரும் நிலையில் தமிழ் மக்கள் தங்கள் உணர்வுகள், மனோநிலை மற்றும் கோரிக்கைகளை முன்வைப்பது மிகவும் அவசியமானது.

அதி அவசரமான கோரிக்கைகளையே உடனடியாக முன்னிறுத்த உள்ளோம். ஆகவே, கடந்த முறையைவிட கூடுதலான மக்களை இம்முறை நாம் அணி திரட்ட வேண்டும்.

கிழக்கு மற்றும் ஏனைய இடங்களில் நாம் தொடர்ந்து செய்யவிருக்கும் 'எழுக தமிழ்' பேரணிக்கு எமது முதலாவது பேரணி நிகழ்வு உத்வேகம் ஊட்டும் வகையில் அமைய வேண்டும்.

முன்னைய 'எழுக தமிழ்' பேரணிகள் நடக்கும் போது நாம் பலர் உத்தியோக பதவியில் இருந்தோம். எமக்குப் பதவி வழி அரச அங்கீகாரமும் பாதுகாப்பும் தரப்பட்டன. இம்முறை நாம் அவ்வாறான அரச அங்கீகாரத்துடன் கூட்டத்தில் ஈடுபட முடியாது.

எனவே எமது மக்களின் பாதுகாப்பு விடயங்கள் எத்தகைய அரச அங்கீகாரத்துடன் நடைபெறப் போகின்றன என்பதை நாம் பரிசீலித்துப் பார்த்து மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

அண்மைய உயிர்த்த ஞாயிறு நடவடிக்கைகளால் நல்லூர் ஆலயத்தில் கூட பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பேரவைக்கு ஏதேனும் பாதுகாப்புத் தடைகள் விடுக்கப்படுமா என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

எங்கள் பேரணியில் தமிழ் மக்களின் மாபெரும் சக்திகளாக விளங்கும் அனைத்துப் பொது அமைப்புக்கள், சமூக நிறுவனங்கள், மதபீடங்கள், மேற்கத்தைய மற்றும் சுதேச வைத்திய சங்கங்கள், சட்டத்தரணிகள் சங்கங்கள், பெண்கள் அமைப்புக்கள், ஆசிரிய அமைப்புக்கள், மாணவ அமைப்புக்கள், தமிழர் மரபுரிமைப் பேரவை, தொழிற் சங்கங்கள், வர்த்தக சங்கங்கள், விவசாய, கடற்றொழில் சங்கங்கள், சமாசங்கள் போன்ற அனைத்து அமைப்புக்களும் கட்சி பேதமின்றி செம்ரெம்பர் 16ம் திகதி ஒற்றுமையாய் ஒருங்கு சேர வேண்டும்.

யாவரும் திரண்டெழுந்து தமிழர்களின் எழுச்சிப் பிரவாகத்திற்கு வேகம் கொடுக்க நீங்கள் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும். இங்குள்ள நீங்கள் ஒவ்வொருவரும் எம் மக்களை செப்ரெம்பர் 16ஆந் திகதிய பேரணியுடன் இணைக்கப் போகும் இணைப்புப் பாலங்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

ஆட்சியாளர்களால் இதுவரை கவனிக்கப்படாத ஆறு விடயங்கள் எமது பேரணியில் வலியுறுத்தப்பட இருக்கின்றன. அவையாவன,

1.எமது பூர்வீக நிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நில ஆக்கிரமிப்பு, பௌத்த மயமாக்கல் மற்றும் சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். இவை சம்பந்தமான மகாவலி அபிவிருத்திச் சபையின் செயல்கள் ஆராயப்பட்டு சபையின் நடவடிக்கைகள் வட கிழக்கைப் பொறுத்த வரையில் உடன் நிறுத்தப்பட வேண்டுமா என்பது பரிசீலிக்கப்பட வேண்டும்.

2.சர்வதேச போர்க்குற்ற விசாரணையில் தற்போது ஏற்பட்டுள்ள தேங்கு நிலை மாற்றப்பட்டு உடனே சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளை நடத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

3.தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்கள் யாவரும் சர்வதேச சட்டக் கொள்கைகளுக்குப் புறம்பான சட்டமொன்றினால் குற்றவாளிகள் ஆக்கப்பட்டவர்கள் என்பதை உலகறியச் செய்ய வேண்டும். குறித்த சட்டம் இன்னமும் கைவாங்கப்படவில்லை.

4.வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமான நம்பத்தகு விசாரணைகள் நடைபெற வேண்டும். பல மாதக் கணக்கில் போராடி வரும் காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு குறித்த ஒரு காலத்தினுள் விசாரணைகள் நடைபெறும் என அரசினால் உத்தரவாதங்கள் வழங்கப்பட வேண்டும்.

5.வடகிழக்கு மாநிலங்களை இராணுவ மயமாக்கல் நிறுத்தப்பட வேண்டும். தற்போது இலங்கை இராணுவத்தின் மூன்றில் இரண்டு பங்கு வடகிழக்கு மாகாணங்களிலேயே முகாம் இட்டு உள்ளனர் என்று தெரிய வருகின்றது.

6.இடம் பெயர்ந்த எம் மக்கள் அனைவரும் அவரவர்களின் பாரம்பரிய காணிகளில் மீள்குடியமர்த்தப்பட வேண்டும்.

மேற்கண்ட ஆறு விடயங்களே எமது பேரிணியில் முக்கியமாக கூறப்படப் போகும் விடயங்கள். எமது அரசியல் தேவைகளை ஏற்கனவே தமிழ் மக்கள் பேரவை தமது அரசியல் முன் மொழிவுகள் ஊடாக யாவருக்குந் தெரியப்படுத்தியுள்ளது. அவற்றை நாங்கள் இனிவரும் 'எழுக தமிழ்' பேரணியில் வலியுறுத்துவோம்.

எமது பதாகைகள், சுவரொட்டிகள் ஆகியன மேற்கண்ட ஆறு விடயங்களை இப்போதைக்கு வலியுறுத்தினால்ப் போதும் என்று நினைக்கின்றோம். ஏந்தப்படப் போகும் பதாகைகள், மற்றும் ஒட்டப்படப் போகும் சுவரொட்டிகள் எமது தணிக்கைக் குழுவொன்றினால் பரிசீலிக்கப்பட்டே அனுமதிக்கப்பட வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலில் நிற்கப் போகும் வேட்பாளர்கள் மேற்படி ஆறு விடயங்களையும் இலகுவாக அனுமதிக்க முடியும். அவற்றைச் செய்யுமாறு நாம் அரசை, அரசாங்கத்தை, ஜனாதிபதி வேட்பாளர்களை வேண்டுவது எல்லா விதத்திலும் நியாயமானது. எனவே இவற்றை இம்முறை வலியுறுத்துவோமாக!

சிலர் எமது பேரணியில் சேரவிருப்போரைத் தடுக்கக் கங்கணம் கட்டியுள்ளதாக அறிகின்றேன். ஆனால் சுயநல காரணங்களுக்காக, கட்சி நலம் சார்ந்து இவ்வாறான தீர்மானங்களை யார் எடுத்தாலும் அது எமது மக்களுக்குச் செய்யும் துரோகமாகவே அமையும். நாம் இங்கு கட்சிகளை வளர்க்க முற்படவில்லை.

மக்களை ஒன்று சேர்த்து அரசியல் ரீதியாகப் போராடவே ஒன்றுபடுகின்றோம். ஒன்றுபட்டு எமது இன்னல்ப்படும் மக்களின் விடிவிற்காகப் போராட நினைத்துள்ளோம். ஆகவே எமது பேரணியை இவ்வாறாகக் குழப்ப எத்தனிப்போர் சம்பந்தமாக விழிப்பாக இருங்கள்.

எமக்கு ஒத்துழைப்பு நல்காவிட்டாலும் பரவாயில்லை; உபத்திரவம் தராது இருங்கள் என்று அவர்களிடம் நல்ல முறையில் கூறிவையுங்கள். எமது தமிழ் மக்களின் வருங்காலம் என்பது இப்பேர்ப்பட்ட சிந்தனையுடையவர்களையும் உள்ளடக்கும்.

நாம் போராடுவது அவர்களுக்காகவுந் தான் என்பதை எவரும் மறத்தல் ஆகாது. அந்த வகையில் அவ்வாறான சிந்தனைகள் எவருக்காவது இருக்குமானால் அவற்றைப் புறந்தள்ளி வைத்து எம்முடன் சேர்ந்து பயணிக்க அவர்களை உள்ளன்புடன் அழைக்கின்றோம்.

இன்றிலிருந்து நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் கடமையறிந்து, குறிக்கோள் அறிந்து ஒட்டு மொத்த வடகிழக்கு தமிழ் மக்கள் சார்பில் உங்களால் இயலுமான மட்டில் ஆதரவு வழங்குவீர்களாக என்று கோரி அடுத்து எமது ஒழுங்கமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட முற்படுவோமாக.







கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.