கனடா அனலை ஐயனார் ஆலயத்தின் வருடாந்த மகோற்ஸவ கொடியேற்ற பெருவிழா ஓர் வரலாற்று சரித்திரமாக பிரகடனம்!!📷

முன்னாள் ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தின் பிரதம குருக்களாக பல ஆண்டுகள் சேவை புரிந்தவரும், உலகலாவியரீதியில் இருக்கின்ற பல இந்து ஆலயங்களின் வருடாந்த மகோற்ஸவ குருக்களாகவும், ஏராளமான கும்பாபிஷேகங்கள், மண்டலாபிஷேகங்கள் மற்றும் பல கிரியைகளை சிறப்பாக நடாத்தி பெருமை சேர்த்த மாண்புமிகு சிவஸ்ரீ வைத்தியநாதசிவாச்சாரியார் பாலசுந்தரசிவாச்சாரியார் அவர்களின் தலைமையில் தாயக அனலை ஐயனார் ஆலயத்தின் முழுமையான பிரதிபலிப்பாக கனடா ஒண்டாரியோ மாகாணத்தில் அமர்ந்திருந்து
அருள்பாலித்துக்கொண்டிருக்கும் கனடா அனலை ஐயனார் ஆலயத்தின் வருடாந்த மகோற்ஸவ கொடியேற்ற பெருவிழா ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்ட விழாவாக இனிதே நடந்தேறியது. அனலைதீவின் காவல் தெய்வமான ஐயனாரின் தோற்றமானது, சேது கடலில் அடைந்து வந்த பெட்டகம் ஒன்றின் மூலமே சாத்தியமானது. அனலை மேற்கு கடல் எதிரே இந்திய தொண்டி கடல் காணப்படுகிறது. இது தென் இந்தியாவின் சிவகங்கை மாவட்டம் ஆகும். இங்கு தேவகோட்டை மற்றும் காரைக்குடிக்கு இடையான ஆற்றங்கரை கிராமமே கல்லல் என்ற தற்போதைய கிராமம் ஆகும். இது முன்னர் கல்லல் துடல் என அழைக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் அதிக ஐயனார் ஆலயங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. தற்போது சுமார் 12 க்கு மேற்பட்ட பெரிய ஐயனார் ஆலயங்களை கொண்டு விளங்குகின்றது. இவை ஆதி குண்ட வரத ஐயனார், ஆதீனமிளகிய ஐயனார், சேருவிலங்க ஐயனார், அடைக்கலம் காத்த ஐயனார், பொய் சொல்ல மெய் ஐயனார் என நீண்டு செல்கிறது. இதில் கல்லல் எனும் இடத்தில் ஆதீனம் இளகிய ஐயனார் எனும் கோவில் உள்ளது. இவ்வாலய மூல விக்கிரகமே சுமார் 13 ஆம் நூற்றாண்டில் புதிய விக்ரகம் ஸ்தாபிக்கும் பொருட்டு பழைய விக்கிரகம் ஆற்றில் விடப்பட்டு இருக்கலாம் அல்லது 16 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசர் ஆக்கிரமிப்பின் போது பாதுகாப்பின் நிமித்தம் பெட்டகத்தில் வைத்து ஆற்றில் விடப்பட்டு, கடல் வழியாக அனலையை அடைந்தார். இவ்விரு சந்தர்பத்தில் ஒன்று தான் ஐயனின் அனலை பிரவேசமும் வழிபாட்டு ஆரம்பமும் ஆகும். இதன் தொடர்ச்சிகளே ஏனைய தீவுகளில் ஐயனார் வழிபாடு பரவி இன்று உலகளாவிய ரீதியில் ஐயனின் அருள் மேலோங்கி நிற்கிறது. அனலை ஐயனார் தான் விரும்பிய அனலையம் பதியில் நயினாகுளம் கூழாவடியில் கோயில் கொண்டருளினார். மூர்த்தி தீர்த்தம் விருட்சம் ஆகியன முறையே ஶ்ரீ பூரணை புஷ்கலா சமேத ஹரிஹர புத்ர ஐயனார், சேது(இந்து ) சமுத்திரம், கூழா மரம் என்பனவாகும். பொதுவில் ஐயனார் வழிபாடு கிராமிய தெய்வ வழிபாட்டில் அடங்கினாலும் இங்கு ஆகம முறையில் ஆலய அமைப்பு, பூஜை நிகழ்வுகள் இடம் பெறுவது சிறப்பாகும். மகா சாஸ்தாவிற்கு உரிய வாகட(வேதாகம) முறையில் தனித்துவமான முறையில் கிரியைகள் மந்திர சுலோகங்கள் இடம் பெறும் இம்முறைமை இவ்வாலய இறைவனனின் பூர்விக இடமாகிய கல்லல் துடல் ஐயனார் ஆலய முறைகளை பின்பற்றி ஊரெழு சிவஶ்ரீ பாலசுந்தரக்குருக்கள் வைத்தியநாத குருக்கள் பரம்பரையினரளும் அவர்களது சிஷ்ய சிவாச்சாரிகளாலும் செய்யப்பட்டு வருகிறது. இருந்தும் கிராமிய வழிபாட்டின் எச்சமாக பொங்கல் குளிர்த்தி உற்சவம் வருடாவருடம் சித்திரை முதல் திங்களில் இடம்பெறும். வருடாந்த உற்சவம் ஆரம்பத்தில் பத்து தினமாகவும், இடைக்காலத்தில் 15 தினமாகவும் தற்போது மீண்டும் பத்து தினமாக கொண்டாடப்படுகிறது. ஆடி அமாவாசையை நிறைவு செய்து வரும் சுக்ல பட்ச ஐந்தாம் நாள் முதல் பூரணை வரையிலான நாட்களே திருவிழா நாட்களாகும். இத்திருவிழா காலத்தில் ஐயனாரின் கிருபை மீது நம்பிக்கை கொண்டோரின் பக்தி பரவசம், காவடிகள் நேத்திகடன்கள் என வெகு விமரிசையாக அனுஸ்டிக்கப்படும்.இவற்றில் உச்சமாக இலங்கையில் மிகப்பெரிய சித்திர தேரில் ஐயனார் வீதி வலம் வரும் தருணங்கள் மெய்சிலிர்க்க செய்யும்.
அனலையில் ஆரம்பத்தில் மூலமூர்த்தியான விளங்கிய (பழையவர்) ஐயனார் இரு மனைவியர் சகிதம் இருந்த நிலையில் யோக நிஷ்டையில் வலக்கால் நிலத்தில் ஊன்றி இடக்கால் சற்றே உயர்த்தியும் கெண்டை ஏந்திய வண்ணம் விளங்குகின்றார். பெட்டியில் வந்த முன்னைய சில விக்கிரகம் ஒரே கல்லில் உருவானது. இதனை சுயம்பு லிங்கம் என்றும் கருதுவர். இது பரசுராமரால் உருவாக்கபட்ட 16 ஐயனின் கோவில்களின் ஒன்றாகவும் இருக்கலாம் ஏன் எனில் இதில் அச்சன் கோவில் ஆரியம் காவு சபரிமலை என இன்னும் சில கோவில்கள் தவிர ஏனையவை இனம் காணப்படவில்லை தவிர காலத்தால் அழிந்து போயிருக்கலாம் எனவே அனலையின் பழைய ஐயனாரையும் பழைய பெட்டகத்தினையும் தொல்லியல் ஆய்விற்கு உட்படுத்தினால்(காபன் 14 பரிசோதனை) அதன் மூலம் அவற்றின் காலத்தினை மதிப்பிடலாம். எது எப்பிடியோ காலத்தால் முந்திய பழமையான ஐயனாருக்கு தேய்மானம் அதிகமாக இருந்தால் புதிய விக்ரகங்கள் தமிழ் நாட்டிலிருந்து செய்து தருவிக்கப்பட்டது. இருந்தும் ஐயனின் அருளிலும் மகிமையிலும் என்றும் குறை இல்லை. இதனாலேயே இங்கு சுமார் 150 வருடங்களுக்கு மேலாக மகோற்சவம் இடம் பெற்று வருகின்றது. இவ்வாலயத்திற்கு 100 ஆண்டுகளுக்கு முற்பட்ட தேர் ஒன்றும் இன்னும் கம்பீரமாக இயங்கு நிலையில் உள்ளது. அனலையில் மகோற்சவங்கள் ஆரம்பிக்க முதல் திருவிழாவினை ஊரின் மணியக்காரர்கள் (அப்போதைய ஆளும் குழாத்தினர்/உடையார் வம்சம் ) தொடக்கி வைப்பார் அதனை தொடர்ந்து ஒவ்வொரு சமூக பிரிவினருக்கும் தலா ஒருநாள் திருவிழா உபயம் வழங்கப்படும்………எழுவைதீவு மற்றும் வன்னி மக்களுக்கும் உபயம் இருந்தன. தேர் திருவிழா பொதுவானதாக இருந்த போதும் அப்போது அங்கே கத்தோலிக்க மதம் மாறுதலுக்கு உள்ளான உயர் பணக்கார குடும்பத்தினரை மீண்டும் சைவசமயத்திற்கு கொண்டு வர அவர்களுக்கான உபயமாக தேர்த்திருவிழா வழங்கப்பட்டது. அவர்களே தமது செலவில் அப்போதைய தேரினை உருவாக்க உதவினர். அதன் பின்னர் 1976 முதல் 1980 வரையிலான காலப்பகுதிகளின் மிகுந்த அரசியல் பொருளாதார இடர்களின் மத்தியில் இந்திய ஸ்தபதிகள் மூலம் உருவாக்கப்பட்ட சித்திர தேர் இலங்கையின் மிகப்பெரிய சித்திரத்தேர் என்ற உயர் நிலையில் மிளிரும் வண்ணம் உருவாக்கி ஐயன் திருவுலா வர ஏற்பாடு செயப்பட்டது. இத்தேர் சுமார் 38 அடிகளையும் தேர் முட்டி 44 அடிகளையும் கொண்டு விளங்குகின்றது. ஐயனுக்கு இவ்வளவு பெரிய தேர் எவ்வாறு சாத்தியமானது. அனலை ஐயனின் பெரும் புகழ் இன்று உலகெலாம் ஒலிக்க அவரது அருள் மகிமைகளே காரணம் ஆகும். ஐயன் விரும்பி வாசம் செய்யும் இத்தலத்தில் தேவர்கள் முனிவர்கள் அர்த்த யாமத்தில் பூஜை செய்து வழிபடுவதாகவும் கர்ண பரம்பரை கதைகள்(செவி வழி உலாவி), இறை விருப்பின் பிரகாரமே ஐயனார் இங்கு கோயில் கொண்டதாக புராண இதிகாச கதைகள் (பழைய ஏற்பாடுகள் ) கூறுகின்றன. தவிரவும் ஐயனின் அருளால் கடந்த காலங்களில் பல அற்புதங்கள் நடந்தன. இவற்றுள் 1627 இல் யாழ் தீவகத்தை தாக்கிய (இப்பேரழிவு பற்றி யாழ்ப்பாண வைபவ மாலை எடுத்துரைக்கின்றது.)கடல் கோளினை (சுனாமி) ஐயனார் தடுதாட்கொண்டாமை முதன்மை பெறுகின்றது. நிலநடுக்கத்தால் கடல் பொங்கி பேரலைகள் ஊரில் நுழைய மக்கள் ‘ஐயனே ஓலம்‘ என முறையிட அவர் அப்பேரலையை தடுத்து ஊர்மக்களை காத்தருளியமை முதலே ஐயன் அனலையின் காவல் தெய்வமானார். இது குறித்த பாடலை முத்துகுமாரசுவாமி புலவர் பதிவு செய்து வைத்துள்ளார். தவிரவும் ஐயனின் புதிய சித்திர ரதத்தில் இவை அழகிய சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளது. மேலும் வரட்சி, பஞ்சம், அரச அடக்குமுறைகள், யுத்தம் என்பவற்றிலிருந்து அன்று தொடக்கம் இன்று வரை மக்களை காத்து வருவது எங்கள் குலதெய்வம் ஐயனாரே! ஐயன் தேர் ஏற, சிவப்பு நிற அலங்காரங்களுடன் தாமரைப் பூமாரி பொழிய, மல்லாரி இசைக்கு ஏற்றவாறு ஆடி ஆடி வரும் அற்புதக்கோலம் ஆஹா என்னே அழகு!!! அவ்வாறே தேர் வீதிவலம் வந்து இருப்பிடம் வந்ததும் ஐயனுக்கு அர்ச்சனை செய்ய வரிசை கட்டி நிற்கும் பக்க்தர்களின் நீட்சி அது அனலைக்கும் நயினைக்குமே சொந்தமாகும். அதன் பின்னர் பச்சை சாத்தி ரத அவரோகணம் இடம்பெற்று ஐயனாரை பக்கவாட்டில் திருநடனம் செய்விக்கவும் பச்சிலையும் பன்னீர் கலந்து சாத்தும் தருணம் பக்தி மேலீட்டால் அரோகரா கோசங்கள் வானை பிளக்கும். ஐயனுக்கு அரோகரா, கூழாவடியானுக்கு அரோகரா, நயினா குளத்தானுக்கு அரோகரா, சேது சமுத்திரதானுக்கு அரோகரா, பூரணை புஷ்கலைக்கிறைவனுக்கு அரோகரா, அரிகர புத்திர ஐயனாருக்கு அரோகரா. என்ற கோஷங்கள் ஐயனுக்கு மென்மேலும் அருள் மகிமையை வழங்கி நிற்கும். அதுவே அடியார்க்கு குறைகள் நீக்கி நல்வாழ்வை நல்கும் இதுவே ஆன்மீக(உளவியல்) உண்மையாகும். தேரால் வந்த இறைவனுக்கு அழித்தல் தொழில் செய்ததன் நிமித்தம் பிராயச்சித்த அபிஷேகம் இடம் பெறும். அன்றிய தினம் மாலையே தீர்த்த திருவிழாவும் இரவு துவஜா அவரோகணம் என்னும் கொடியிறக்கம் இடம் பெறும். மறுநாள் காலை மீண்டும் குறைகள் தவறுகள் நீங்கும் பெருட்டு இறுதியாக பிராயச்சித்த அபிசேகமும் மலையில் வைரவர் மடை இடம்பெற்றுஇ மகோற்சவம் (பிரம்மோற்சவம்) நிறைவு பெறும். ஆனால் இன்று இவைகள் தனிதனி திருவிழாக்களாக இடம் பெறுகின்றது. அனலை ஐயனாரை முதல் கடவுளராகவும் சுற்று பிரகார கடவுளராகவோ அல்லது ஐயப்பன் விக்ரகமாகவோ உள்ள ஈழத்தின் உள்நாட்டிலும் புலம்பெயர் தேசங்களிலும் இக்காலங்களில் விசேட பூஜைகள் இ அலங்கார திருவிழாக்கள் மற்றும் மகோற்சவங்கள் என்பன இடம் பெற்றுக்கொண்டு இருகின்றதாக தகவல் கிடைக்கின்றன, உதாரணமாக கனேடிய அனலைதீவு ஐயனார் ஆலயத்திலும், கனேடிய ஐயப்பன் இந்து ஆலயத்திலும் மகோற்சவம் இடம் பெறுகின்றது. கனடாவின் பிரம்டன் கற்பக விநாயகர் கோவில்இ கணேஷ துர்க்கா கோவில், மிஸ்ஸிஸ்சாஹா முத்துமாரி அம்மன் கோவில், என்பவற்றில் ஐயனாருக்கு அலங்கார திருவிழாவும் இடம்பெறுகின்றன. தவிரவும் சுவிஸ், இங்கிலாந்து, யேர்மனி, என்பவற்றிலும் அனலை ஐயனுக்கான வழிபாடுகள் இயற்றப்படுகின்றன.

Langes, FCPA, FCGA
Chief Editor, Tamil Bc Media

No comments

Powered by Blogger.