‘கோமாளி’யைச் சுற்றி வளைக்கும் சினிமா நாட்டாமைகள்!

தமிழ் சினிமாவில் தொழில் சார்ந்து தொழிலாளர்களுடைய பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு சங்கங்கள் யூனியன் அமைப்புகள் இயங்கி வருகின்றன.


சாதாரணமாக ஒரு படத்தில் பணிபுரிந்த கடைநிலை ஊழியர் உணவு பரிமாறும் பிரிவில் பணியாற்றும் ஒருவருக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறி 150 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட ஒரு திரைப்படத்தின் வெளியீட்டை நிறுத்தி வைக்க முடியும்.


அவர் சார்ந்த சங்கத்தின் மூலம் பெப்சி தலைவருக்கு ஒரு கடிதம் கொடுத்தால் சம்பளப் பாக்கியை கொடுக்காமல் படத்தை வெளியிட முடியாது.


அதேபோன்று முந்தைய பட வெளியீட்டின்போது சம்பந்தப்பட்ட விநியோகஸ்தருக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் அதனை கொடுக்கவில்லை என்றால் அப்படத்தின் தயாரிப்பாளர் அடுத்த படத்தினை வெளியிடுகிற போது அப்படத்திற்கு சம்பந்தப்பட்ட ஏரியாவில் திரையரங்குகளை ஒப்பந்தம் செய்யவிடாமல் தடுத்து நிறுத்திவிடுவார் விநியோகஸ்தர் சங்கத்தின் மூலமாக. ஆனால் கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்து படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் தனது படங்களை திரையிட்டதன் மூலம் தனக்கு வரவேண்டிய பாக்கி தொகையை இதுபோன்று வசூலிக்க முடியாது.


அப்படிப்பட்ட ஒரு தொழில் பாதுகாப்பு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்கு இல்லை. சங்கத்துக்கு தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை இருந்தபோதே இதுபோன்ற நாட்டாமைத் தனங்கள் தமிழ் சினிமாவில் அரங்கேறியது உண்டு.


இங்கு கூறப்பட்ட எந்த ஒரு சங்கத்திலும் அரசாங்கக் கொள்கை சட்ட திட்டங்களையோ சங்கத்தின் சட்ட திட்டங்களை கடைபிடிப்பது இல்லை. தர்ம நியாயங்களுக்கும் கட்டுப்படுவதில்லை.


ஏரியாவுக்கு தகுந்தாற்போல் பிரச்சனைக்குரிய நபருக்கு தகுந்தார்போல் நடவடிக்கைகளும் முடிவுகளும் இங்கே எடுக்கப்படுகின்றன. இவற்றால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் திரைப்படத் தயாரிப்பு தொழில் வேண்டாம் என்று ஒதுங்கியவர்களும் உண்டு; அழிந்து போனவர்களும் உண்டு.


கடன் வாங்கியவர் சம்பளம் வாங்கிக்கொண்டு ஒரு படத்தில் நடித்திருப்பார். அந்த படத்தின் தயாரிப்பாளர் யாரிடமும் கடன் வாங்கி இருக்க மாட்டார். ஆனால் அந்தப் படத்தில் நடித்தவர் வாங்கிய கடனுக்காக அந்த படத்தின் வெளியீட்டை முடக்கி வைத்த சம்பவங்கள் தமிழ் சினிமாவில் ஏராளம்.
அப்படி ஒரு அத்துமீறல், வரம்பு மீறிய நடவடிக்கையை திருச்சி ஏரியா திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினரால் எடுக்கப்பட்டுள்ளது.


அதிகாரபூர்வமாக ஒரு படத்தை திரையிட மாட்டோம் என தடை செய்து தீர்மானம் நிறைவேற்றுவதற்கு எந்த சங்கங்களாலும் தற்போது இயலாது. அப்படி அதிகாரபூர்வமாக அறிவிக்கும் பட்சத்தில் அதனால் ஏற்படும் அனைத்து நஷ்டங்களையும் வசூலிப்பதற்கு சட்டத்தில் இடம் உள்ளது.


கோமாளி படத்தை திரையிடுவது இல்லை என்று வாய்மொழியாக தகவல் கூறப்பட்டிருக்கிறது. ஏன் இப்படி ஒரு நடவடிக்கை என்று திருச்சி வட்டார திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மத்தியில் விசாரித்த போது நேரடியாக மூக்கை தொடுவதற்கு பதிலாக தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் முயற்சிப்பது தெரிந்தது.


சிவகார்த்திகேயன் நயன்தாரா நடிப்பில் மே 17 அன்று வெளியான படம் மிஸ்டர் லோக்கல். இப்படத்தின் திருச்சி ஏரியா உரிமையை பிரபல விநியோகஸ்தர் தியாகராஜன் மினிமம் கியாரண்டி அடிப்படையில் வாங்குகிறார். படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. அதனால் திரையரங்குகளில் படத்தை திரையிடுவதற்கு வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பி கொடுக்க முடியாத சூழல் ஏற்படுகிறது.


இந்த பாக்கியை வசூல் செய்ய சம்பந்தப்பட்ட விநியோகஸ்தர் தியாகராஜனிடம் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் பேச்சுவார்த்தையை நடத்தியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் மிஸ்டர் லோக்கல் படத்தின் தமிழக உரிமையை பெற்ற தன் தன்வி பிலிம்ஸ் நிறுவனத்துக்கு, வியாபார ரீதியாகவும் திரையரங்குகளை ஒப்பந்தம் செய்வதற்கும் தொழில்ரீதியாக உதவி செய்த சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் அடுத்து வெளியிட உள்ள கோமாளி திரைப்படத்துக்கு நெருக்கடியை கொடுத்து வருகிறது திருச்சி ஏரியா திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் .


இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மிகப்பெரும் கோடீஸ்வரர். அதேபோல் கோமாளி படத்தில் கதாநாயகன் ஜெயம் ரவி என்பதால் பட வெளியீடு தடைபடுவதை விரும்பமாட்டார்கள். அதனால் தங்களது நஷ்டத்தை இவர்களிடம் வசூலித்து விடலாம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கம் இணைந்து செயல்படுவதாக கூறப்படுகிறது.


தமிழகத்திலேயே திரையரங்குகள் மத்தியில் ஒற்றுமையை உருவாக்கி சிண்டிகேட் அமைப்பு உருவானது கரூர் நகரில் தான். அதுமட்டுமன்றி திருச்சி விநியோகப் பகுதியில் இயங்கிவரும் பெரும்பாலான திரையரங்குகள் பிரான்சிஸ் கட்டுப்பாட்டில் இருப்பதால் எந்த ஒரு திரைப்படத்தையும் அந்த பகுதியில் வெளியிடுவதை தீர்மானிக்கும் சக்தியாக திரையரங்க உரிமையாளர் சங்கம் மற்றும் பிரான்சிஸ் ஆகியோர் உள்ளனர்.


மிஸ்டர் லோக்கல் படத்தை மூன்று கோடியே 50 லட்ச ரூபாய்க்கு மினிமம் கேரண்டி அடிப்படையில் ஒப்பந்தம் செய்த தியாகராஜன் பட வெளியீட்டிற்கு முதல் நாள் 13 லட்சம் ரூபாய் பாக்கி வைத்து விட்டுத்தான் படத்தை ரிலீஸ் செய்தார் என்கிறார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா
படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறாததால் தயாரிப்பாளருக்கும் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது இருப்பினும் முழுமையான நஷ்டத்தை தயாரிப்பாளர் திருப்பித் தர இயலாது இருப்பினும் ஒரு சமரச முடிவுக்கு வருவதற்கு ஞானவேல்ராஜா தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.


திருச்சி ஏரியாவில் ஏற்பட்ட நஷ்டத்தில் ஒரு கோடியே 60 லட்ச ரூபாய் திருப்பி கொடுத்தாக வேண்டும் என்று தியாகராஜன் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் கல்யாணசுந்தரம் இருவரும் நெருக்கடி கொடுப்பதாக ஸ்டுடியோ கீரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் செய்திருக்கிறார்.


இது சம்பந்தமாக தயாரிப்பாளர்கள் மத்தியில் பேசிய போது திருச்சி ஏரியாவில் காலங்காலமாக எந்த ஒரு வியாபார ரீதியான ஒப்பந்தங்களை அவர்கள் மதிப்பதில்லை படம் ஓடி வெற்றி பெற்றுவிட்டால் எந்த பிரச்சினையும் இருக்காது. படம் ஓடாத பச்சத்தில் அதுவும் மினிமம் கேரண்டியில் வாங்கப்பட்ட படமாக இருந்தாலும் ஏற்பட்ட நஷ்டத்தை வசூல் செய்வதற்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுப்பார்கள். காரணம் அங்கே திரைப்பட விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இடையில் ஒரு கள்ள உறவு எப்போதும் உண்டு. அதனால் இவர்கள் இருவரில் யார் பாதிக்கப்பட்டாலும் அவரை வசூலிப்பதற்கு மொத்த ஏரியாவை முடங்கி விடுவது இவர்களுக்கு கை வந்த கலை.


உண்மையிலேயே நியாயமாக நடப்பதாக இருந்தால் திரையரங்குகளுக்கு வரவேண்டிய பாக்கியை செலுத்தினால் மட்டுமே நேர்கொண்டபார்வை படத்தை திரையிடுவோம் என்று கூறியிருக்க வேண்டும். ஏனென்றால் ஆகஸ்ட் 8 அன்று வெளியான நேர்கொண்ட பார்வை படத்தின் திருச்சி விநியோகஸ்தர் தியாகராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.


தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை சங்கத்தில் இல்லை என்றாலும் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட தனி அதிகாரிக்கு ஆலோசனை கூறுவதற்காக நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழு தயாரிப்பாளர்கள் உரிமையை பாதுகாப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக சேலம் ஏரியாவில் விநியோகஸ்தர்கள் தயாரிப்பாளர்கள் சுதந்திரமாக தாங்கள் விரும்பும் திரையரங்குகளில் படங்களை திரையிட முடியாத சூழல் நிலவி வந்தது.


இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் சேலம் திரைப்பட விநியோகஸ்தர்கள் கவுன்சில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஆகியோரோடு முத்தரப்பு கூட்டம் ஒன்றை நடத்தி புதிய படங்களை திரையிடுவதற்கு ஒரு சுமுகமான முடிவு எட்டப்பட்டது.


தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள் இவர்களால் கட்டுப்படுத்த முடியாத அதிகாரமிக்க பலம் பொருந்திய அமைப்பாக செயல்பட்ட சேலம் ஏரியா தியேட்டர் சிண்டிகேட் அமைப்பை செயலிழக்கவைக்க முடிந்தது தயாரிப்பாளர் சங்க ஆலோசனைக் குழு உறுப்பினர்களால் அதேபோன்று திருச்சி ஏரியாவிலும் திரையரங்குகளில் திருட்டுத்தனமாக புதிய படங்களை வீடியோ பதிவு செய்யப்பட்டது சம்பந்தமாக காவல் நிலையத்திலும் நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது. அதேபோன்று அரசு நிர்ணயித்த கட்டணத்தை, விற்கப்படும் டிக்கெட் எண்ணிக்கையை முழுமையாக அரசு தெரிவிக்காமல் ஜிஎஸ்டி வரி கட்டுவதில் ஏமாற்றுவதாக குற்றச்சாட்டு உள்ளது.


கோமாளி பட பிரச்சனையில் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை என்றால் மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து வழக்குகளும் தூசி தட்டப்பட்டு நடவடிக்கை எடுக்கக்கோரி தயாரிப்பாளர் சங்கம் அரசுக்கு அழுத்தம் கொடுக்க தொடங்கும் என்று நேற்றைய தினம் தயாரிப்பாளர் சங்கத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர் சதீஸ் ஆடியோ பதிவு ஒன்றை வெளியிடுகிறார்.


அவர் கூறியிருக்கும் அல்லது பேசியிருக்கும் பொருள் நியாயமானது. ஆனால் அதை கூறிய விதம் வரம்புமீறிய ஆணவப் போக்கு நிரம்பிய செயல் என்கின்றனர் திரையரங்கு உரிமையாளர்கள்.

சினிமா தொழிலில் பரஸ்பரம் நம்பிக்கையின் அடிப்
படையில் எல்லாமே நடைபெறுகிறது. எந்த ஒரு பிரச்சினையையும் பேசித் தீர்க்கலாம்; அதைவிடுத்து மிரட்டல் தொனியில் பேசுவது நியாயமான செயல் அல்ல என்கின்றனர்.


சங்கத்தை நடத்துவதற்கு நிர்வாகத்தில் ஏற்கனவே நடைபெற்றுள்ள முறைகேடுகளை கண்டறிவதற்கு நியமிக்கப்பட்ட தனி அதிகாரி, அவருக்கு ஆலோசனை சொல்வதற்கு நியமிக்கப்பட்ட ஆலோசனை குழு உறுப்பினர்களுக்கு இதுபோன்ற நடவடிக்கைகளை எடுப்பதற்கு அதிகாரம் இருக்கின்றதா என்ற கேள்வி எழுப்புகின்றனர்.
தயாரிப்பாளர் சங்கத்தோடு இணைந்து செயல்படாமல் ஒதுங்கி இருந்த ஞானவேல்ராஜா தற்போது திருச்சி ஏரியாவில் திரையரங்கு உரிமையாளர் செய்யும் அத்துமீறலுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்திற்கு இரண்டு பக்க கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறார்.


அதேபோன்று பெரும்பான்மையான தயாரிப்பாளர்களுக்கு தன் பக்கம் இருக்கும் நியாயத்தை கூறும் வகையில் வாட்ஸ் அப் பதிவு ஒன்றை அனுப்பி வருகிறார் .
கோமாளி படம் வெளிவருவதற்கு இன்னும் 48 மணி நேரங்களே இருக்கிறது. அதற்குள் இப்பிரச்சனை முடிவுக்கு வருமா என்கிற பதட்டத்தில் தயாரிப்பாளர் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களும் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.


சேலம் ஏரியா தியேட்டர் சிண்டிகேட் அத்துமீறல்கள், ஆதிக்க மனப்பான்மை கட்டுப்படுத்தபட்டது போன்று தியேட்டர் சிண்டிகேட் தாயகமான திருச்சி ஏரியாவில் வரம்பு மீறல்களும், ஆதிக்க மனோநிலையும் கட்டுப்படுத்தபடுமா? கோமாளி விஸ்வருபமெடுப்பாரா பொறுத்திருந்து பார்க்கலாம்.
-இராமானுஜம்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.