கோலி சதத்தால் இந்தியா வெற்றி!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.


இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று (ஆகஸ்ட் 11) இரண்டாவது ஒருநாள் போட்டி நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யக் களமிறங்கியது. துவக்க வீரர்களான ஷிகர் தவன் 2 ரன்களுக்கும் ரோஹித் ஷர்மா 18 ரன்களுக்கும் வெளியேறினர். கோலியைத் தொடர்ந்து நான்காவது வீரராகக் களமிறங்கிய ரிஷப் பந்தும் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அப்போது விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் பொறுப்புடன் விளையாடினார். இந்த ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 125 ரன்கள் சேர்த்தது.
சிறப்பாக விளையாடிய கேப்டன் விராட் கோலி சதம் அடித்தார். 41.3 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 226 ரன்களை எட்டியபோது 125 பந்துகளில் 120 ரன்கள் எடுத்திருந்த விராட் கோலி அவுட் ஆனார். சிறிது நேரத்திலேயே 71 ரன்களுக்கு ஸ்ரேயாஸ் ஐயரும் ஆட்டமிழந்து வெளியேறினார். கடைசி ஓவர்களில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சிக்கனமாகப் பந்துவீசியதால் இந்திய அனியால் 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 279 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கோலி - ஸ்ரேயாஸ் ஜோடி களத்தில் இருந்த போது அணியின் ஸ்கோர் 300 ரன்களைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேற்கிந்தியத் தீவுகள் அணித் தரப்பில் கார்லஸ் பிராத்வெயிட் 3 விக்கெட் வீழ்த்தினார்.
அடுத்ததாகக் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஆட்டம் மழை காரணமாக 46 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. 46 ஓவர்களில் 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் துவக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் 11 ரன்களில் வெறியேறி ஏமாற்றம் தந்தார். ஷாய் ஹோப் 5 ரன்களுக்கும், ஷிம்ரான் ஹெட்மையர் 18 ரன்களுக்கும், ரோஸ்டன் சேஸ் 18 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். துவக்க வீரர் எவின் லீவிஸ் மட்டும் நிதானமாக விளையாடி 65 ரன்கள் சேர்த்தார். பின்வரிசை வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, மேற்கிந்தியத் தீவுகள் அணி 42 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 210 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் இந்திய அணி ’டக் வொர்த் லீவிஸ்’ முறைப்படி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணியில் சிறப்பாகப் பந்துவீசிய புவனேஷ்வர் குமார் 31 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். முகமது ஷமி, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். சதமடித்த இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.