மல்லிகைப்பூ இட்லி எப்படி தாயாரிப்பது?

தேவையானவை:
இட்லி அரிசி அல்லது புழுங்கலரிசி- 4 டம்ளர்
உடைத்த வெள்ளை உளுத்தம்பருப்பு – 1 டம்ளர்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
அவல்- ஒரு கைப்பிடி
செய்முறை:
1. இட்லி அரிசி என்றால் 5 மணி நேரம் ஊறினால் போதும், புழுங்கலரிசி என்றால் முந்தின நாள் இரவே ஊற விடவும்.
2. வெள்ளை உளுத்தம்பருப்பு ஒரு மணி நேரம் ஊறினால் போதும், ஊறின பிறகு பருப்பைக் குளிர்சாதனப்பெட்டியில் வைத்து விடவும்.
3. அரிசியைக் களைந்து மின் அரைப்பானில்(கிரைண்டர்) போடவும், இதனுடன் அவல், வெந்தயத்தையும் சேர்த்து தண்ணீர் விட்டு அரைக்க விடவும்.
4. இருபத்தைந்து நிமிடங்கள் அரைபட வேண்டும்,(ஊறின நேரம் குறைவு என்றால் கூட நேரம்). அடிக்கடி தண்ணீர் விட்டு வர வேண்டும். நன்றாக மையாக அரைபட வேண்டுமென்ற அவசியமில்லை. பிறகு அதனை வேறொரு பாத்திரத்தில் போட்டு விட்டு வெள்ளை உளுத்தம்பருப்பைக் களைந்து போட வேண்டும்.
5. தண்ணீர் அதிகம் ஊற்றாமல் மூன்று நிமிடங்களுக்கு ஒரு முறை கொஞ்சமாக ஊற்ற வேண்டும்,
6. பருப்பு வெண்ணெயாக அரைபடுவதில் தான் சூட்சமமே அடங்கியிருக்கிறது.
7. பிறகு உப்பைப் அரைபட்ட பருப்புமாவில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
8. அரைத்த மாவையும் இந்த உளுத்தம்மாவையும் ஒன்று கலக்கவும், ஆற்றவும். தனித்தனிப் பாத்திரங்களில் முக்கால்வாசி அளவு வருமாறு(பொங்கும், புளிக்கும் என்பதால்) விட்டு வெளியில் வைக்கவும், குளிர்காலங்களில் புளிக்காது என்பதால் அவனில் வைத்துக் கொள்ளலாம்.
இட்லி- குறிப்புகள்:

1. இரவு ஊற வைத்து காலையில் அரைத்தால் அரைத்த அன்று இரவு மாவு பொங்கி விட்டிருக்கும்,
2. மினி இட்லி தட்டுக்கள் அல்லது சாதா இட்லித்தட்டுகளில் எண்ணெய் அல்லது நெய் தடவி மாவை விட்டு குக்கரில் வைத்து பத்து நிமிடங்களில் எடுக்க சுவையான மென்மையான மல்லிகைப்பூ இட்லிகள் தயார்.
3. துணியில் மாவு இட்டு செய்யும் இட்லிகள் எண்ணெயே குடிக்காமல் இன்னும் சுவையாக இருக்கும். அப்படியும் செய்யலாம்.
4. இட்லிக்குத் துவையல், சட்னி, சாம்பார் செய்து பரிமாறலாம்.
5. இட்லிக்குத் தனியாக, தோசைக்குத் தனியாக என்று அரைக்க முடியாதவர்கள், அடி இட்லி மாவையே தோசைக்குப் பயன்படுத்தலாம்.
6. தோசை மாவிற்கு என்றால் அரிசி, பருப்பை ஒன்றாகவே அரைக்கலாம், ஆனால் கணிசம் மேற்கூறிய முறையில் தான் அதிகம் கிடைக்கும்.
7. தோசைக்கு நன்றாக அரைபட வேண்டும் என்ற மெனக்கெடல் இல்லை, நற நற பதமே போதுமானது.
8.சிலர் மேற்கூறிய முறையில் வெள்ளை உளுத்தம்பருப்பை அதிகம் சேர்ப்பார்கள், அவ்வாறு செய்வது இட்லிக்கு நல்லதாக இருக்கும், அதே மாவில் தோசை கல்லை விட்டு எடுக்க வராது.
9. குளிர்சாதனப்பெட்டியில் பருப்பை வைக்க நேரமில்லாதவர்கள் ஐஸ்கட்டிகளைப் போட்டு அரைக்கலாம். அவல் இட்லிக்கு மென்மையைத் தருகிறது.
10. இட்லி சரியாக வரவில்லை என்றால் ஒன்று பொங்கியிருந்திருக்காது, இல்லையென்றால் ஏதேனும் செய்முறையில் தவறுகள் நிகழ்ந்திருக்கலாம், ஒரு வேளை சொதப்பும் சூழல் நேரிட்டால் தோசைக்கு மாவைப் பயன்படுத்தலாம்.
குஷ்பூ, தமன்னா, ஹன்சிகா இட்லிகள் என்று பெயரையும் சூட்டி விடுங்கள், எனக்கு, உனக்கு என்று காலியாகும், கண்டிப்பாகத் தொட்டுக் கொள்ள துவையலோ சாம்பாரோ பண்ணி விடுங்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.