மாடித்தோட்டம் அமைப்பது எப்படி!!

பெரும்பாலான மக்களிடம் மாடித்தோட்டம் அமைக்கும் ஆர்வம் இருந்தாலும்கூட, அவற்றை முறையாக சரியாக அமைப்பது எப்படி என்பது குறித்த தெளிவு இல்லை. இந்த விஷயங்களைப் பின்பற்றினால் உங்கள் வீட்டு மாடியிலும் அள்ள அள்ளக் குறையாத ஆர்கானிக் காய்கறிகளை அறுவடை செய்யலாம்!


மாடித்தோட்டம் அமைக்க முதலில் தேர்வு செய்யவேண்டியது இடத்தைத்தான்.

மாடியில் காலியாக உள்ள இடங்கள், படிக்கட்டுகள், மாடிச் சுவர்கள் மற்றும் தொங்கு தொட்டிகள் என மாடித்தோட்டம் அமைப்பதற்கு ஏராளமான இடமும் வழியும் உண்டு.

மொட்டைமாடியின் தளம் வீணாகும் என்ற கவலை வேண்டாம். கீழே பாலித்தீன் விரிப்பை விரித்து, அதன்மீது வைக்கலாம். இது தவிர, பி.வி.சி பைப்புகள், கட்டையாலான பலகைகள் எனப் பல வகைகள் இருக்கின்றன.


அடுத்ததாக நாம் தேர்வு செய்யவேண்டியது வெயில் படும்படியான இடம். அதிக வெயில் படும்படியான இடங்களில் நிழல் வலைக் குடில் அமைப்பது சிறந்தது. இதற்கும் பல எளிய வழிமுறைகள் இருக்கின்றன.

மாடியில் தொட்டிகள் அனைத்தையும் ஒரே இடத்தில் வைக்காமல், எளிதாகப் பராமரிக்கும் செடிகள் மற்றும் கூடுதல் பராமரிப்பு தேவைப்படும் செடிகள் எனத் தொட்டிகளைத் தனித்தனியே பிரித்து அமைக்க வேண்டும்.

தொட்டிகளைத் தவிர பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் வாளிகள், பயன்படாத பழைய பாத்திரங்கள் உள்ளிட்ட பொருள்களிலும் செடிகளை வளர்க்கலாம்.

உரமிடும் வழிமுறைகள்

தொட்டிகளில் செம்மண், தென்னை நார் கழிவு, மண்புழு உரம், மாட்டு எரு, உயிர் உரங்கள், வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றை கலந்து, அடி உரமாகக் கொடுக்க வேண்டும்.

தென்னைநார் கழிவு, மண்ணின் ஈரப்பதத்தை முழுமையாகத் தக்கவைத்து செடிகளைக் காக்கும். அளவுக்கு அதிகமாகப் போட்டால் செடிகளுக்கு வேர் அழுகல் நோய் ஏற்பட்டு, வேர்கள் செடிகள் பாதிப்படையும்.

செம்மண், மண்புழு உரம், மாட்டு எரு, உயிர் உரங்களும் பயிர்கள் வளர்வதற்குத் தேவையான சத்துகளைக் கொடுக்கும்.

வேப்பம் பிண்ணாக்கு, பயிர்களுக்கு நோய்கள் வராமல் தடுத்து, கிருமிகளை அழிக்கும்.

மண்கலவை தயாரானதும் உடனே விதைகளை விதைக்கக் கூடாது. 7 முதல் 10 நாள்களில் நாம் தயார்செய்த மண்ணில் நுண்ணுயிர்கள் பெருகி வேலைசெய்ய ஆரம்பித்துவிடும். அதன் பிறகே அதில் எந்த ஒரு விதையையும் நடவுசெய்ய வேண்டும். இதன் பிறகு விதைப்பு செய்தால், நல்ல விளைச்சல் நிச்சயம்.

எப்படி விதைப்பது?

விதைகளைத் தேர்வுசெய்யும்போதும், நடவு செய்யும்போதும் கவனம் தேவை.

பை அல்லது தொட்டியின் அடிப்புறம் நான்கு திசைகளிலும் அதிகப்படி நீர் வெளியேற துவாரங்கள் இட வேண்டும்.

தொட்டியில் நடும் விதைகளை முற்றிய காய்கறிகளிலிருந்து எடுக்கலாம், கடைகளில் வாங்கிவந்தும் நடவுசெய்யலாம். விதைக்கும் விதை, நாட்டு விதையாக இருத்தல் இன்னும் சிறப்பு.

விதையின் உருவத்தைவிட இரண்டு மடங்கு ஆழத்தில் நடவு செய்தால் போதுமானது. அதன் பின்னர், மண்ணால் மூடிவிட வேண்டும். விதை நட்டவுடன் நீர் தெளிக்க வேண்டும்.


கத்திரி, தக்காளி மற்றும் மிளகாய் போன்ற பயிர்களை நாற்றுவிட்டு நடவுசெய்வது மிக அவசியம்.

வெண்டை, முள்ளங்கி, செடி அவரை மற்றும் கீரை வகைகளை நேரடியாக விதைப்பு செய்ய வேண்டும். தொட்டியில் அதிகமான ஆழத்தில் நடக்கூடாது.

தொட்டிகளில் வழிய வழிய தண்ணீர் ஊற்றுவதைத் தவிர்க்க வேண்டும். தண்ணீரைத் தெளிக்க உதவும் பூவாளியைப் பயன்படுத்துவது நல்லது.

காய்கறிகளின் விதைகளைப் பயன்படுத்தினால், செடி வளர்க்க பைகள் அல்லது தொட்டிகளைப் பயன்படுத்தலாம். இதற்கு அளவு, வடிவம் என எதுவும் கிடையாது.


கீரையாக இருந்தால், பாத்தி அமைப்பது போன்று நடலாம். பிளாஸ்டிக், மண்பானை, உலோகம் என எல்லா வகை பொருள்களிலும் வளர்க்கலாம்.

செடிகள் வளர்ப்பதற்காகப் பைகளில் அடியுரம் கலந்த மண்ணை நிரப்பும்போது, முழுமையாக நிரப்பாமல், பையின் நீளத்தில் ஓர் அங்குலத்துக்குக் கீழ் இருக்குமாறு நிரப்ப வேண்டும்.



எப்படிப் பராமரிப்பது?

மாடித்தோட்டத்தில் முக்கியமானது பராமரிப்புதான். ஒருநாள் விட்டு ஒருநாள் தேவையான அளவு தண்ணீர் விட வேண்டும்.

இப்போது, பெரும்பாலான மக்கள் மாடித் தோட்டத்தில் சொட்டு நீர்ப்பாசன முறையை அமைத்துவருகின்றனர்.

மாடித்தோட்டத்துக்கு உபயோகப்படுத்தும் உரங்கள், உயிரி உரங்களாகவும் இயற்கை உரங்களாகவும் இருப்பது நல்லது.

மாடித்தோட்டத்தில் பூச்சித்தாக்குதல் ஏற்பட்டால், வேம்பு போன்ற மூலிகைப் பூச்சி விரட்டியைக் கலந்து தெளிக்கலாம்.

பூச்சித் தாக்குதலைத் தவிர்க்க, வாரம் ஒருமுறை வேம்பு பூச்சிவிரட்டியை, 2 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து, மாலை வேளையில் செடிகளின் மேல் தெளிக்க வேண்டும்.

வீட்டிலேயே அமைக்கலாம் ஆர்கானிக் தோட்டம்!
வேரின் ஆழத்தில் புழுக்களின் தாக்குதலைத் தவிர்க்க, வேப்ப எண்ணெய்க் கரைசலை நீரில் கலந்துவிடலாம்.

வாரம் ஒருமுறை செடியைச் சுற்றி மண்ணைக் கொத்தி விட வேண்டும்.

மண்ணைக் கொத்திவிட்ட பின்பு, செடிகளின் வளர்ச்சிக்கு பஞ்சகவ்யா தெளிக்கலாம். இதனால் செழிப்பான வளர்ச்சியும் மகசூலும் கிட்டும்.

ஒரு லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி பஞ்சகவ்யா எனும் அளவில் கரைசல் தயாரிக்க வேண்டும்.

காய்களைப் பறிக்கும்போது, முற்றிவிடாமல் அவ்வப்போது அறுவடை செய்துவிட வேண்டும். விதைகள் தேவைப்பட்டால், காய்களை முற்றவிடலாம்.

ஒருமுறை விளைந்த செடிகளின் மகசூலுக்குப் பின்னர், அதே மண்ணிலேயே மண்புழு உரம், வேப்பம் புண்ணாக்கு, மாட்டு எரு ஆகியவற்றைக் கலந்து பயன்படுத்தலாம்.



எதையெல்லாம் தவிர்க்கலாம்...

கோடைக்காலத்தில் புதிதாகத் தோட்டம் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

காய்கறித் தோட்டம் அமைக்க நிழல் விழும் பகுதியைத் தேர்வு செய்யக் கூடாது.

பைகளை நேரடியாகத் தளத்தில் வைக்கக் கூடாது.

பைகளில் எரு மண்ணை நிரப்பியவுடன், விதைப்பு அல்லது நடவை மேற் கொள்ளக் கூடாது.

பைகளை அடர்த்தியாக நெருக்கி வைக்கக் கூடாது.

வீட்டிலேயே அமைக்கலாம் ஆர்கானிக் தோட்டம்!
விதைக்க உகந்த காலநிலை

மாடித்தோட்டத்தில் காலநிலையைக் கவனிக்க வேண்டும். ஜூன், ஜூலை மாதங்கள் மாடித்தோட்டம் அமைக்க மிகச் சிறப்பானது.

கோடைக்காலத்தில் எந்தக் காரணம் கொண்டும் விதைகளை நடவு செய்ய கூடாது.

குளிர்கால காய்கறிகளான பீட்ரூட், முட்டைகோஸ், அன்னாசி, கரட் ஆகியவற்றை அக்டோபர் மாதங்களில் நடவுசெய்யலாம்.


#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.